திரை விமர்சனம்

தயாரிப்பாளர் சங்கத்தேர்தல் : லைக்கா தமிழ்குமரன் துணை தலைவர்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெற்ற தேர்தலில், ‘நலம் காக்கும் அணி’ சார்பில் தலைவர், துணைத் தலைவர்கள்,செயலாளர்கள், பொருளாளர், இணைச் செயலாளர் ஆகிய பதவிகளுக்காக போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் 2023-2026 ஆண்டுகள் வரை பதவிகளுக்கான தேர்தல் சென்னையில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரி வளாகத்தில் நீதியரசர்கள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகியோர் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றினர். இவர்களின் முன்னிலையில் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 30 ஆம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் 1,111 வாக்குகள் பதிவானது.

இதன்படி “நலம் காக்கும் அணி” சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ‘தேனாண்டாள்’ முரளி ராமசாமி 615 வாக்குகளும், துணைத்தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் 651 வாக்குகளும், அர்ச்சனா கல்பாத்தி 588 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர். செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட்ட ‘ஃபைவ் ஸ்டார்’ கதிரேசன் 617 வாக்குகளும், ராதாகிருஷ்ணன் 503 வாக்குகளும், இவர்களை தொடர்ந்து பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட சந்திர பிரகாஷ் ஜெயின் 535 வாக்குகளும், இணை செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட சௌந்தர் பாண்டியன் 511 வாக்குகளும் பெற்று வெற்றி பெற்றனர்.
வெற்றி பெற்ற நலம் காக்கும் அணியினருக்கு தமிழ் திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இதனிடையே தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் துணைத் தலைவர்கள் பதவிக்கு போட்டியிட்ட லைக்கா நிறுவன தலைமை நிர்வாகி ஜி கே எம் தமிழ்குமரன் அவர்கள் 651 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்கிறார். இதுவரை நடைபெற்ற தேர்தலில் எந்த போட்டியாளரும் பெற்றிராத வாக்கு எண்ணிக்கை இது என்பதும், நலம் காக்கும் அணி சார்பில் போட்டியிட்ட ‘தேனாண்டாள்’ முரளி ராமசாமி அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக தலைவர் பொறுப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதும், பைவ் ஸ்டார் கதிரேசன் அவர்கள் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார். இவர் இரண்டு முறை துணைத் தலைவராகவும், இரண்டு முறை செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE