‘விரூபாக்ஷா’ – விமர்சனம்
இதே பெயரில் தெலுங்கில் வெளியாகி, கோடை மழையென வசூல் மழை கொட்டிக் கொண்டிருக்கும் படம். இது தமிழிலும் நல்லா கட்டும் கல்லா என்ற நம்பிக்கையோடு தமிழகமெங்கும் வெளியிட்டிருக்கிறார் ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா.
எப்படி இருக்கிறது படம்?
சொர்க்கபுரியென இருக்கும் அழகிய கிராமத்தில் திடீரென கொத்துக்கொத்தாய் மரணங்கள் நிகழ்கிறது. அதற்கான காரணத்தை கண்டுபிடித்து மரணத்தை தடுத்து நிறுத்தி நிம்மதி பெருமூச்சு விட்டு வழக்கமான வாழ்வை தொடர்கின்றனர் கிராம மக்கள். இந்நிலையில் சிறுவயதில் அந்த ஊரைவிட்டுச் சென்ற நாயகன் சாய் தரம் தேஜ், தனது அம்மா மற்றும் நண்பருடன் பிறந்த ஊருக்கு வருகிறார்.
வந்த இடத்தில் ஊர் தலைவரின் மகள் சம்யுக்தாவுடன் காதலாகிறது. இந்நிலையில் மீண்டும் அந்த ஊரில் துர் மரணங்கள் நிகழ, அச்சம் பாதி மரணம் மீதி என நடுங்குகின்றனர் கிராமமக்கள். இது தெய்வக் குற்றமென்று சொல்லி ஊருக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்கிறார் கோயில் பூசாரி. ஆனால் இதன் ஆணிவேரை தெரிந்துகொள்ள களமிறங்குகிறார் நாயகன் சாய் தரம் தேஜ். அடுத்தடுத்த திருப்பங்களுடன் நகரும் கதை திக் திக் க்ளமாக்ஸுடன் முடிகிறது.
‘விரூபாக்ஷா’ என்றால் சிவனின் இன்னொரு பெயர். சோதனை வந்த ஊருக்கு காக்கும் கடவுளாக கதாநாயகன் இருப்பதால் இந்த பெயரை படத்திற்கு வைத்துள்ளனர்.
ஆஜானுபாகுவான தோற்றம், ரொமான்ஸ் சொட்டும் முகம், சண்டைன்னு வந்துட்டா சண்டியராக களத்தில் இறங்குவது என கதாநாயகனுக்கு ஏற்ற அத்தனை தகுதிகளையும் கொண்டிருக்கிறார் நாயகன் சாய் தரம் தேஜ். ஆந்திர மக்கள் மனதில் பசையென ஒட்டுக்கொண்டவர், தமிழிலும் இடம் பிடிக்க வாய்ப்பிருக்கிறது.
‘வாத்தி’யில் தனுஷுடன் ஜோடி போட்டு தமிழ் பசங்களின் தூக்கத்தை கெடுத்த சம்யுக்தாவுக்கு இதில் நடிப்பு திறமையை காட்டுமளவிற்கு செம கேரக்டர் அமைந்திருக்கிறது. தனக்குள் இன்னொரு ஆத்மா ஊடுருவி ருத்ரதாண்டவம் ஆடும் காட்சியில் ஆடியன்ஸ் ஏரியாவில் அப்ளாஸ் குவிகிறது. சொல்லமுடியாது தமிழ் சினிமாவின் அடுத்த கனவு கன்னியாக வரவும் வாய்ப்பிருக்கிறது.
படத்தில் நடித்திருக்கும் மற்ற கதாபாத்திரங்களும் மனதை தொடுகிறார்கள். கிராமத்தை அழகாகவும் சோதனைக்கு உட்படும்போது அதே கிராமத்தை அமானுஷ்யமாக காட்டி மிரட்டுவதும் ஒளிப்பதிவாளரின் திறமைக்குச் சான்று. கதையின் போக்கிற்கு ஏற்றபடி பின்னணி இசையில் மிரட்டுகிறார் இசையமைப்பாளர். எடுத்துக்கொண்ட விஷயத்தை சொதப்பாமல் முடிந்தவரை ரசிக்கவும் பயமுறுத்தவும் வைக்கும் இயக்குனர் கர்த்திக் வர்மாவுக்கு பாராட்டுகள்.
லாஜிக் மீறல் பார்க்காமல் படத்தை பார்த்தால் ‘விரூபாக்ஷா’ ரசிகர்களை திருப்திப்படுத்துவார்.