ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன் மருத்துவமனையில் நடந்தது என்ன – அப்பல்லோ டாக்டர் வாக்குமூலம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பதற்கு நான்கு நாட்கள் முன்பு வரை நலமுடன் இருந்ததாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர் வாக்குமூலம் அளித்துள்ளார். நிலையான மற்றும் மருத்துவ நெறி முறைப்படியே சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். ஜெயலலிதாவின் மரணத்தில் பலரும் சந்தேகம் எழுப்பிய நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். இதனையடுத்து ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை பற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. 150க்கும் அதிகமானோர் இடத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில், மருத்துவ வல்லுனர்களை கொண்டு விசாரணை நடைபெறவில்லை என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடுத்த வழக்கில் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.
அதை அடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவை ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு உறுதுணையாக அமைத்த நிலையில் நீதிமன்றம் விசாரணை ஆணையத்திற்கு தடையை நீக்கியது. அதுமுதல் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. இளவரசி, ஓ.பன்னீர் செல்வத்திடம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் அப்பல்லோ மருத்துவர்கள் 11 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
இன்றைய தினம் மருத்துவர்கள் நரசிம்மன் மற்றும் பால் ரமேஷ் ஆகியோர் இன்று ஆஜராகினர் அவர்களிடம் வழக்கறிஞர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர் அப்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 29, 30 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்படுவது தேவையா என அழைக்கப்பட்டதாகவும் அப்போது தேவையில்லை என முடிவு எடுக்கப்பட்டதாகவும் பால் ரமேஷ் வாக்குமூலம் அளித்தார்.
தொடர்ந்து வாக்குமூலம் அளித்த மருத்துவர் நரசிம்மன் டிசம்பர் 1- 2016 அன்று அதாவது ஜெயலலிதா இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பாக ஜெயலிதாவை சந்தித்ததாகவும் அப்போது அவர் நலமுடன் இருந்ததாகவும் கூறினார். அதேபோல அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்திடம், கடந்த சில வாரங்களுக்கு முன் விசாரணை நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மொத்தத்தில் 90 சதவீதம் விசாரணை நடந்து முடிந்துள்ளது. மரணத்தில் மர்மம் இல்லை என்று கூறியுள்ளார் ஓ.பன்னீர் செல்வம்.
ஆணையம் தரப்பு மற்றும் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது தரப்பு விசாரணையை நிறைவு செய்துள்ளனர். இதனையடுத்து அப்பல்லோ மருத்துவர்களிடம் நடத்தப்பட உள்ள குறுக்கு விசாரணையுடன் விசாரணை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் விசாரணை தொடர்பான அனைத்து விவரங்களும் அறிக்கையாக தயார் செய்யப்பட்டு தமிழக அரசிடம் தாக்கல் செய்யப்படும். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தில் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 156 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.