‘எனக்கு எண்டே கிடையாது’ -திரை விமர்சனம்
ஒரு பார், ஒரு கார். பாரில் இருந்து மப்பும் மந்தாரமுமாக வெளியே வரும் இளம்பெண் அந்த வாடகை காரில் ஏறி டிரைவருடன் பேச்சு கொடுக்கிறார். பேச்சின் நடுவே “வீட்டில் நான் தனியாதான் இருக்கேன்” என்று கொக்கிப்போட, சொக்கி போகிறார் டிரைவர். பிறகென்ன தனிமையான ஹைடெக் பங்களா.. அழகு பெண்ணின் ஸ்பரிஸம் என்று இன்பமூட்டும் அந்த இரவு… கொஞ்ச நேரத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சியை அளிக்கிறது.
அதாவது அந்த பங்களாவில் நடந்திருக்கும் கொலை; அதைத்தொடர்ந்து தன்னை அழைத்து வந்த பெண்ணும் உயிரை விட, பீதியாகிறது டிரைவருக்கு. அங்கிருந்து தப்பிக்க நினைத்தால் தானியங்கி கதவுகள் திறக்கப்படாமல் சிறை வைக்கிறது. அதே வேளையில் அந்த பங்களாவில் ஒரு திருடனும் ஒரு அரசியல்வாதியும் இருக்க, கதை வேகமெடுக்கிறது. கதவு திறக்கவைக்கும் கடவுச்சொல் தெரியாமல் திண்டாடும் அவர்கள் அந்த பங்களாவில் இருந்து தப்பிக்க எடுக்கும் முயற்சி, காயா பழமா என்பதற்கு விடை அளிக்கிறது க்ளைமாக்ஸ்.
கதைப்படி அந்த டாக்சி டிரைவர்தான் படத்தின் நாயகனும் இயக்குனருமான விக்ரம் ரமேஷ். மதுவருந்திய மாதுதான் நாயகி ஸ்வயம் சித்தா. படத்தின் தயாரிப்பாளரான கார்த்திதான் திருடன்.
இயக்குனர், ஹீரோ என இரட்டை சவாரி செய்திருக்கும் விக்ரம் ரமேஷ் இரண்டு குதிரையிலும் ஏறி வெற்றிக்கோட்டை தொட்டிருக்கிறார். அனுபவ நடிகர்போல் நடித்திருக்கும் அவருக்கு தமிழ்சினிமா, கடவுச்சொல் இல்லாத வெற்றிக்கதவை திறந்து வைக்கும்.
நாயகி ஸ்வயம் சித்தா நாயகனை மட்டுமல்ல படம் பார்க்கும் வாலிப நெஞ்சங்களையும் வசீகரிக்கிறார். சினிமாவிலும் ஜாலி ட்ரிப் அடிக்க வாழ்த்துகள்! திருடனாக தயாரிப்பாளர் கார்த்தி, அரயல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் அனைவருமே ஏமாற்றாமல் நிறைவான பங்களிப்பை செய்திருப்பது சிறப்பு.
ஒரே லொகேஷன் என்றாலும் படம் பார்ப்பவர்களுக்கு சலிப்பை கொடுத்துவிடாதபடி கலை இயக்கமும் ஒளிப்பதிவும் நம்மை கட்டிப்போட வைக்கிறது. அதேபோல் பின்னணி இசையும் தரமான சம்பவமாக இருப்பதால் போரடிக்காமல் பொழுதுபோக வைக்கிறது.
சின்ன சின்ன குறைகள் இருந்தாலும் ‘எனக்கு எண்டே கிடையாது’ நான் ஸ்டாப் சுவாரஷ்ம்!