‘மிஷன் சாப்டர் 1’ -விமர்சனம்
சண்டை பிரியர்களுக்கு சர்க்கரை பொங்கல் விருந்தாக இந்த பொங்கலுக்கு வந்திருக்கும் படம் ‘மிஷன் சாப்டர் 1’
படம் எப்படி இருக்கு?
தன் மகளின் மருவத்துவ சிகிச்சைக்காக லண்டன் செல்கிறார் அருண்விஜய். இரண்டு நாளில் நடக்கவிருக்கும் ஆபரேஷனுக்கு பணம் திரட்டுவதற்காக பஸ்ஸில் போகும்போது அவரது பர்சை திருட முயல்கிறது ஒரு கோஷ்டி. அவர்களுடன் சண்டை போடும்போது தவறுதலாக போலீஸையும் தாக்கிவிட, சிறைக்குச் செல்கிறார் அருண் விஜய். அந்த சிறையில் எமிஜாக்ஷன் ஜெயிலராக இருக்கிறார்.
ஜெயிலில் இருக்கும் தீவிரவாதிகள் மூன்று பேரை தப்பிக்க வைக்க ஒட்டுமொத்த ஜெயிலும் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வருகிறது. இதை அறிந்துகொள்ளும் அருண்விஜய் அவர்களை தப்பிக்கவிடாமல் ஆக்ஷன் அதகளத்தில் இறங்குகிறார். தீவிரவாதிகளின் திட்டம் என்ன? அவர்களுக்கும் அருண்விஜய்க்குமான முன் விரோதம் என்ன? அருண்விஜய் மகளின் நிலை என்னவாகிறது என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தருகிறது அனல் பறக்கும் காட்சிகள்.
படத்துக்கு படம் அருண்விஜய்யின் நடிப்பும் துடிப்பும் மெருகேறிக்கொண்டே போகிறது. ஒரு தந்தையாக மகளின் நிலை கண்டு உருகுவது, உயிரை துச்சமென நினைத்து தீவிரவாதிகளை எதிர்த்து நின்று வேட்டையாடுவது, நொடியும் யோசிக்காமல் சாதுர்யமாக செயல்பட்டு தீவிரவாதிகளை பிடிப்பது என படம் முழுக்கவே கதையை தூக்கி சுமக்கிறார் அருண்விஜய். சில காட்சிகளில் அவரது புஜபலம் நம்பும்படியாக இல்லாவிடிலும் சண்டை ப்ரியர்களுக்கு சர்க்கரை பொங்கலாக இனிக்கும்.
லண்டன் சிறையின் ஜெயிலராக எமிஜாக்ஷன் காட்டும் மிடுக்கு அசரவைக்கிறது. க்ளைமாக்ஸில் அவர் போடும் சண்டை ஜாக்கிசான் படம் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது. இனி தமிழ் சினிமாவில் எமிஜாக்ஷன் அதிரடி ராணியாக வலம் வருவது நிச்சயம். தீவிரவாதிகளின் தலைவனாக பரத் போபன்னா மிரட்டி இருக்கிறார்.
அருண்விஜய் மகள் மீது அன்பும் அக்கறையும் காட்டும் நர்ஸ் கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் கச்சிதம். வழக்கம்போலவே இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். அருண் விஜய்யின் மகளாக வரும் சிறுமி இயலின் நடிப்பும் இதயம் தொடுகிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையும் சத்தீப் கே விஜயனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. கலை இயக்குனரின் திறமைக்கு ஜெயில் செட் ஒன்றே சாட்சி.
மென்மையான கதைகளை எடுப்பதில் கெடிக்காரரான இயக்குனர் ஏ.எல்.விஜய், ஆக்ஷன் படங்களும் எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரிதான் என்பதுபோல படத்தை இயக்கியிருப்பது சிறப்பு. படம் ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை ஆங்கில படம் பார்ப்பது போன்ற உணர்வை தருகிறது.
திரைக்கதையில் நிறைய லாஜிக் சறுக்கல் இருந்தாலும் ஆக்ஷன் பிரியர்களுக்கு ‘மிஷன் சாப்டர் 1’ அன்லிமிட் விருந்து.