‘தூக்கு துரை’ விமர்சனம்
ஓப்பன் கேட் பிக்சர்ஸ் சார்பில் அன்பு, வினோத், அரவிந்த் தயாரிப்பில் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள படம் ‘தூக்கு துரை’.
நாட்டில் நிலவும் பஞ்சத்தையும் மக்களின் பசியையும் போக்குவதற்காக அம்மன் சன்னிதியில் தன்னையே பலி கொடுக்கிறான் ஒரு மன்னன். அவனது தியாகத்தின் நினைவாக வருடந்தோறும் மன்னன் அணிந்திருந்த கீரீடத்தை அம்மனிடம் வைத்து வணங்குகிறார். இந்த கிரீடத்திற்காக மன்னர் பரம்பரையை சேர்ந்த மாரிமுத்துவுக்கும் அவரது தம்பிக்கும் இடையே போட்டா போட்டி நடக்கிறது.
இது ஒரு பகம் இருக்க இன்னொரு பக்கம் ஏழ்மை நிலையில் இருக்கும் யோகிபாபுவும் ஜமீன் மகளான இனியாவும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். இதனால் கொந்தளிக்கும் ஜமீன் யோகிபாபுவை ஊர் கிணற்றில் எரித்துக்கொள்கிறார். இதற்கிடையே ராஜ வம்சத்து கிரீடமும் கிணற்றில் சிக்கிக்கொள்கிறது. அதை எடுக்க முயற்சி செய்பவர்களை யோகி பாபு பேயாக வந்து மிரட்டுகிறார்.
யோகிபாபுவை மீறி அந்த கிரீடம் மீட்கப்படுகிறதா இல்லையா? யோகி பாபு செய்யும் அலப்பறை என்ன என்பதே மிச்ச கதை.
யோகிபாபு இருந்தும் படம் என்னவோ சீரியஸாகவே இருக்கிறது. இவரை தவிர பாலசரவணன், மொட்டை ராஜேந்திரன், சென்ட்ராயன், மகேஷ் இருந்தும் காமெடி பஞ்சம் தலை விரித்தாடுகிறது. நாயகி இனியா என்பதெல்லாம் போங்காட்டம். மற்ற கேரக்டர்களும் செயற்கையாகவே நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு, கிராபிக்ஸ் காட்சிகள், கலை இயக்கம், பின்னணி இசை போன்ற தொழில் நுட்பங்கள் படத்திற்கு பலம் சேர்த்துள்ளன.
கௌரவக் கொலையை மையபடுத்தி திகில்-நகைச்சுவை போன்ற காமெடிகளை உள்ளடக்கி பார்வையாளர்களை ரசிக்க வைக்க முயற்ச்சித்துள்ளார் டென்னிஸ் மஞ்சுநாத்.