‘வடக்குப்பட்டி ராமசாமி’ – திரை விமர்சனம்
குடும்பத்துடன் பார்த்து சிரித்து ரசிப்பதற்கான காமெடி கொண்டாட்டமாக வெளிவந்திருக்கும் படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.
வடக்குப்பட்டி என்ற ஊரில் கோயில் பெயரிலும் தெய்வத்தின் பெயரிலும் மக்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார் சந்தானம். இவரது தில்லுமுல்லு வேலையை தெரிந்துகொள்ளும் தாசில்தார் சந்தானத்திடம் வருமானத்தில் பங்கு கேட்கிறார். இதில் ஏற்படும் மோதலால் கோயிலே மூடப்படும் நிலை ஏற்படுகிறது. ஊர்மக்கள் ஒற்றுமையாக இருந்தால்தான் மீண்டும் கோயிலைத் திறக்கமுடியும் என்ற சூழலில் அதற்காக நாயகன் என்னவெல்லாம் செய்தான் என்பது ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் கதை.
வடக்குப்பட்டி ராமசாமியாக சந்தானம் தனது வழக்கமான காமெடி கவுன்ட்களை அள்ளிவிட்டு வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார் . அவருடன் காமெடிக்கு ஒரு பெரும் படையை களமிறங்கியிருக்கிறார்கள். மாறன், சேஷு வெளுத்துகட்டியிருக்கிறார்கள். இவர்கள் அல்லாமல் ஜான் விஜய், ரவி மரியா, நிழல்கள் ரவி, பிரசாந்த், கூல் சுரேஷ், எம்.எஸ்.பாஸ்கர் என பெரும் பட்டாளமே இருக்கிறது. அனைவருமே நிறைவான காமெடி கதாபாத்திரங்களாக மனதில் பதிகிறார்கள்.
டூயட் பாடும் நாயகியாக இல்லாமல் படத்தில் ஒரு கதாபாத்திரமாக மேகா ஆகாஷ் வருவது ஆறுதல். வில்லனாக வரும் தமிழ் அவருக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்திருக்கிறார். ஈகோ மோதலில் ரவி மரியா – ஜான் விஜய் செய்யும் அலப்பறைகள், குடிகார சேஷுவின் சேட்டைகள், ஸ்ட்ரிக்ட் ஆர்மி மேஜராக நிழல்கள் ரவி செய்யும் அட்டூழியங்கள், இடையில் ஊருக்குள் தனது அடியாட்களுடன் நுழையும் முட்டை ராஜேந்திரன் எனக் குறிப்பிட்டுச் சொல்ல அத்தனை காமெடிகள் படம் நெடுக நிறைந்து கிடக்கின்றன. அந்த கண்ணி வெடி காமெடியில் தியேட்டரே சிரிப்பலையில் அதிர்கிறது.
வடக்குப்பட்டி கிராமத்தின் அழகை ஒளிப்பதிவாளர் தீபக் காட்சிப் படுத்திய விதம் அருமை. காமெடியும் கதையும் ஒரே நேர்கோட்டில் பயணிப்பது எடிட்டர் சிவாநந்தீஸ்வவரனின் நேர்த்திக்கு எடுத்துக்காட்டு. குட்டி கோயில், பானையை வைத்து உருவாக்கப்பட்ட கடவுள் சிலை எனக் கலை இயக்குநரும் தன் வேலையைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஷான் ரோல்டனின் பின்னணி.. பல இடங்களில் பக்கபலமாக இருக்கிறது.
கிராமத்தில் சிலரைத் தவிர மற்றவர்களை விபரமற்றவர்களாக காட்டுவதும் அரசின் வேறெந்த துறையும் அந்த ஊருக்கு வராமலிருப்பதும் காதில் பூ.பகுத்தறிவு பகலவனை வம்புக்கு இழுத்திருப்பது தேவையற்ற செயல். க்ளைமாக்ஸில் மூட நம்பிக்கைக்கு தூபம் போட்டிருப்பதும் நெருடல்.
இப்படி சில குறைகள் இருப்பினும் ரொம்ப நாள் கழித்து தியேட்டரில் காமெடி திருவிழா நடத்தும் ‘வடக்குப்பட்டி ராமசாமி’யை ரசிக்கலாம்.