‘இடி மின்னல் காதல்’ – விமர்சனம்
ஒரு விபத்து , அதில் இறந்து போகும் ஒரு மனிதன், காணாமல் போன அப்பாவை தேடும் சிறுவன், வேலைக்காக வெளிநாடு செல்லும் நேரத்தில் தெரியாமல் செய்த தவறுக்காக குற்ற உணர்வில் தவிக்கும் இளைஞர். வெவ்வேறு கிளைகளாக பிரியும் கதை ஒரு புள்ளியில் சந்திப்பதே ‘இமிகா’.
கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்தும் இளைஞராக சிபி நாயகனாக நடித்திருக்கிறார். நடிக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தனது பங்கை சிறப்பாக செய்திருந்தாலும் க்ளைமாக்ஸில் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாப்பான் என்கிற ரேஞ்சில் தோற்றத்திற்கேற்ற ஆக்ஷன் செய்யாதது மைனஸ்.
சிபியின் பணக்கார காதலியாக பவ்யா ட்ரிக்கா அழகு. குற்ற உணர்வில் தவிக்கும் சிபியை தேற்றுவதிலேயே பாதி நேரம் போகிறது. அந்த கார் ஒர்க் ஷாப்பில் இருக்கும் ரகசிய அறைக்குள் சிபியுடன் அவ்வப்போ சென்று வரும்போது “என்ன நடந்திருக்கும்னு எங்களுக்கும் தெரியும்ல” என்று ஆடியன் கமெண்ட் அடிக்கிறார்கள்.
தந்தையை காணாமல் ஏங்கும் சிறுவன் ஆதித்யா, ஒரு கட்டத்தில் இறுக்கமான மனநிலைக்கு தள்ளப்பட்டு டெரர் முகத்தை காட்டும்போது வருங்கால வில்லன் ரெடி என்பதுபோல் பிரமாதமாக ஸ்கோர் செய்கிறார். ஒருகாலத்தில் பணக்கார சேட்டுவாக இருந்து இப்போது தானே வட்டிக்கு பணம் வாங்கி பிரச்சனைகளை சந்திக்கும் சிறுவனின் தந்தையாக வரும் மனோஜ் முல்லத்தின் நடிப்பு கொஞ்சம் ஓவர் டோசேஜ்.
ஹோமோ செக்ஸ் வில்லனாக வின்சென்ட் நகுல் அங்கங்கே சோபிக்கிறார் ஆங்காங்கே சோதிக்கிறார். பாலியல் தொழிலாளியாக யாஸ்மின் பொன்னப்பா. தொழிலை தாண்டி இரக்க மனதுடன் சிறுவனை அரவணைக்கும் காட்சிகளில் ‘டச்சிங்’.
ஒர்க்ஷாப் ஓனராக வரும் ஜெகன், சிரிக்க வைக்க கடும் முயற்சி எடுத்திருக்கிறார். பாதிரியாராக ராதாரவி, போலீஸ் ஏட்டாக பாலாஜியும் ஓகே. ஜெயச்சந்தர் பின்னம்னேனியின் ஒளிப்பதிவு சிறப்பு, சாம் சி.எஸ் ஸின் பின்னணி இசையில் சப்தம் அதிகம் சாரே…
‘ஏ’கப்பட்ட இடங்களில் கெட்ட வார்த்தைகள் அள்ளி வீசப்படுவதை தவிர்த்திருக்கலாம். இன்னும் வித்தியாசமாக சிந்தித்து திரைக்கதையின் வேகத்தை கூட்டி இருந்தால் இயக்குனர் பாலாஜி மாதவனை பாராட்டியிருக்கலாம்.
‘இடி மின்னல் காதல்’ ஒதுங்கலாம்.