திரை விமர்சனம்

‘டியர்’ – விமர்சனம்

அது போன வாரம்.. இது இந்த வாரம்.. கதையாக வெள்ளிக்கிழமை நாயகனாக மாறிவிட்டார் ஜி.வி.பிரகாஷ். அவர் நடித்த படங்கள் வரிசைக்கட்டி வெளியாகிறது. அந்த வரிசையில் இந்த வார ரிலீஸ் ‘டியர்’.

பக்கா காதல் கதைக்கான டைட்டில் என்று நீங்கள் நினைத்தால் அதுதான் இல்லை. இரு வேறு பழக்கங்களை கொண்ட இருவர், இல்லறத்தில் இணைந்தால் ஏற்படும் பிரச்சனைகளை அலசி காயப்போட்டிருக்கிறார் அறிமுக இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன்.

கதையை விரிவாக பார்க்கலாம்…

குன்னூரை சேர்ந்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறு வயதிலிருந்தே தூக்கத்தில் குறட்டைவிடும் பழக்கம். பெண் பார்க்க வரும் அனைவரிடம் இதை வெளிப்படையாகவே சொல்லிவிட, திருமணம் தள்ளிப்போய்க் கொண்டே இருக்கிறது.  சென்னையைச் சேர்ந்த ஜி.வி.பிரகாஷ் முழுமையான எட்டு மணிநேர தூக்கத்தை விரும்பும் செய்தி வாசிப்பாளர். குண்டூசி விழுகிற சத்தம் கேட்டால்கூட தூக்கத்திலிருந்து எழுந்துவிடுவார். இப்படியான இருவரும் திருமணம் செய்துகொண்டு கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சூழல். குறட்டை பிரச்சனையினால் இவர்கள் வாழ்விலும் மற்றவர்கள் வாழ்விலும் தூக்கம் கெடுகிறது. தொடர்ந்து நடப்பது மிச்ச திரைக்கதை.

கதையின் மையக்கரு ‘குட்நைட்’ படத்தை நினைவூட்டினாலும் ‘டியர்’  திரைக்கதை வேறொரு திசையில் பயணிப்பது சற்றே வித்தியாசம்.

கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்கள் ஐஸ்வர்யா ராஜேஷை இன்னொரு முறை தேடி வந்திருக்கிறது அல்லது அப்படியான கதையை ஐஸ்வர்யா டிக் அடித்துள்ளார். குறட்டை விடும்  கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கச்சிதமாக பொருந்தியுள்ளார். பல இடங்களில் நடிப்பில் ஸ்கோர் செய்து சிறப்பு சேர்க்கிறார்.

தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக ஜி.வி.பிரகாஷ் அந்த கேரக்டருக்கு நியாயம் சேர்த்துள்ளார். தனது இக்கட்டான சூழ்நிலையை சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவிக்கும் கட்டங்களில் நடிப்பு சிறப்பு.

இவர்களை தவிர படத்தில் பல கதாபாத்திரங்கள் அதில் பளிச்சென்று மனசில் பதிகிறார் ஜி.வி.பிரகாஷின் அண்ணனாக வரும் காளி வெங்கட். அதேபோல்  ஐஸ்வர்யாவின் பெற்றோராக இளவரசு, கீதா கைலாசம், சிங்கிள் மதர் கேரக்டரில் ரோகிணி, வீட்டை விட்டு செல்லும் தலைவாசல் விஜய் ஆகியோரும் தங்களது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஜி.வி.பிரகாஷின் இசை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் ஏமாற்றுகிறது. ஜெகதீஷ் சுந்தர மூர்த்தியின் ஒளிப்பதிவில் குன்னூர் அழகு கண்கொள்ளா காட்சி.  கிருபாதயவு தட்சனை பார்க்காமல் எடிட்டர் கிருபாகரன் சில காட்சிகளில் கச்சிதம் காட்டி இருந்தால் படத்தின் தொய்வு குறைந்திருக்கும்.

திரைக்கதையில் கூடுதல் அக்கறை காட்டி இருந்தால் ஆனந்த் ரவிச்சந்திரனுக்கு முதல் படமே பெரிய அங்கீகாரத்தை கொடுத்திருக்கும். சிறு சிறு தவறுகளால் ‘டியர்’ சில இடங்களில் தடுமாறுகிறதே தவிர, கொடுத்த காசுக்கு நிறைவை தரும் படமாகவே இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE