நகரச்செய்திகள்

2026 தேர்தலில் தனித்து போட்டி : நடிகர் விஷால் அறிவிப்பு

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் சார்பில் உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு கொடுக்கும் நிகழ்வு சென்னை மியூசிக் யூனியனில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு சங்கத் தலைவர் கவிதா தலைமை தாங்கினார். சங்க பொருளாளர் ஒற்றன் துரை முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் விஷால் கலந்து கொண்டு மூத்த உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கி செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது விஷால் பேசியதாவது:-

அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். இதுபோன்ற பண்டிகை நாட்களை குடும்பத்தோடு கொண்டாட வேண்டும். இந்த சங்கத்தில் இருக்கிற நீங்களெல்லாம் என் குடும்பத்தினர் மாதிரி. அதனால்தான் இங்கு வந்துள்ளேன்.என்னுடைய முதல் படத்திலிருந்து இன்று வரை ஆதரவு தருகிறீர்கள். இப்போது துப்பறிவாளன் 2 மூலம் இயக்குநராகவும் அறிமுகமாகப் போகிறேன். அதற்கும் அதே ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்.
இந்த சங்கத்தின் நிகழ்ச்சிக்கு தலைவி கவிதா அவர்கள் இதுவரை மூன்று முறை என்னை அழைத்தார்கள். மூன்று முறையுமே வர முடியவில்லை. வரக்கூடாது என்பதில்லை. அப்போதெல்லாம் தவிர்க்க இயலாத கமிட்மென்டில் இருந்தேன். இறுதியாக இப்போது வந்துவிட்டேன்.
வரும் ஏப்ரல் 26 ரத்னம் பட ரிலீஸ். அதற்கான புரொமோஷன் வேலை. அது இதுவென்று ஓடிக் கொண்டேயிருக்கும் சூழலில்தான் வந்துள்ளேன். இன்று ஹைதராபாத் போக வேண்டியிருந்தது. அதை தள்ளிவைத்து விட்டு வந்திருக்கிறேன். நான் துப்பறிவாளன் படத்தில் மட்டும்தான் ‘துப்பறிவாளன்’. ஆனால், பத்திரிகையாளர்களாகிய நீங்கள் எல்லோரும் தான் உண்மையான துப்பறிவாளர்கள். உங்களிடமிருந்து எதையும் மறைக்க முடியாது. அப்படியானவர்கள் இருக்கற இந்த சங்கத்தின் வளர்ச்சிக்கு என்னால் இயன்றதை செய்வேன் என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்டக் கேள்விகளுக்கு விஷால் பதில் அளித்தார்.

நடிகர் சங்க கட்டடப் பணிகள் எப்படி போய்க்கிட்டிருக்கு. உங்களின் திருமணம் எப்போது என்பதையும் சொல்லுங்கள்?

நடிகர் சங்க கட்டடம்கிறது சாதாரண விஷயமில்லை. ரொம்ப பெரிய பணி. நல்லபடியா வேலைகள் போய்க்கிட்டிருக்கு. அடுத்த வருஷம் முடிஞ்சுடும். பெரியளவுல விருது நிகழ்ச்சிகள் நடத்தணும்னா ஹைதராபாத் மாதிரியான இடங்களுக்குப் போக வேண்டியிருக்கு. இந்த கட்டடம் திறந்தாச்சுன்னா அதுலயே பிரமாண்டமான நிகழ்ச்சிகள் நடத்திக்கலாம். தவிர ஒரு மெகா தியேட்டரும் இருக்கும். எந்த மாதிரியான சினிமா நிகழ்ச்சிகளையும் அதுல நடத்தலாம். தவிர சங்க உறுப்பினர்கள் வீட்டு கல்யாணங்களை இலவசமா நடத்திக்கிற மாதிரி மினி கல்யாண மண்டபமும் கட்டுறோம். 130 கார்கள் நிறுத்துற அளவுக்கு பார்க்கிங் ஏரியாவும் இருக்கு. வெளியூர்ல இருந்து சென்னைக்கு வர்றவங்க, எப்படி எம் ஜி ஆர் சமாதிக்கு போய் பார்த்துட்டு திரும்பிப் போற மாதிரி, நடிகர் சங்க கட்டடத்தையும் வந்து பார்த்துட்டு போகணும். அந்தளவுக்கு தனித்துவமான கட்டடமா, தமிழ்நாட்டோட அடையாளமா இருக்கும்.
இப்போதைக்கு ரத்னம் பட ரிலீஸுக்கான வேலைகள் போய்க்கிடிருக்கு. அடுத்ததா நான் இயக்கப்போற துப்பறிவாளன் 2 படத்துக்கான வேலைகள்ல கவனம் செலுத்த வேண்டியிருக்கு. நடிகர் சங்க கட்டடம் சார்ந்து நிறைய பொறுப்புகள் இருக்கு. இந்த விஷயங்களை முடிச்சபிறகுதான் கல்யாணம் பத்தி சிந்திக்கணும்.’

ரத்னம் எப்படியான படம்?

‘தாமிரபரணி நடிச்சு எட்டு வருஷம் கழிச்சு பூஜை, அடுத்த எட்டு வருஷம் கழிச்சு ரத்னம்.எட்டு வருஷத்துக்கு ஒரு முறை இயக்குநர் ஹரியோட இணையுற வாய்ப்பு கிடைக்கிறதுல என்ன சந்தோஷம்னா அவரோட படங்கள் குடும்பத்தோட பார்க்கிற படமா இருக்கும்கிறது தான். தாமிரபரணி, பூஜை படங்கள் எப்படி குடும்பத்தோடு பார்க்கிற மாதிரி இருந்துச்சோ அதேபோல, ரத்னமும் எல்லா தரப்பு ஆடியன்ஸையும் திருப்தி படுத்துற படமா இருக்கும்.”

லயோலா கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலரும் தொடர்ந்து தேர்தலில் இடம் பிடித்துள்ளனர். 2026 பட்டியலில் லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவரான உங்கள் பெயரும் இடம் பிடிக்குமா?

‘லயோலா கல்லூரியின் நிறைய மாணவர்கள் இன்று அரசியலில் இருக்கிறார்கள் , என்பதை நானே இப்போதுதான் கவனிக்கிறேன். நிச்சயம் 2026 இல் இந்த பட்டியலில் இன்னும் நிறைய நபர்கள் சேர்வதற்கும் வாய்ப்புகள் அதிகம். நிச்சயம் நானும் அரசியலில் போட்டியிடுவேன்.

உங்களின் அரசியல் பிரவேசம் எப்போது?

இப்போது சமுதாய பணி மற்றும் எனது திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். 2026 தேர்தல் வேட்பாளர் பட்டியலில் எனது பெயரும் இருக்கும். நான் கட்சி தொடங்கினால் யாருடனும் கூட்டணி வைக்கமாட்டேன். பிறர் ஆதரவு தேடும் அளவுக்கு நான் பலமற்றவன் இல்லை. என்னுடைய பலத்தை அறிய தனித்து போட்டியிடுவேன்.

பொதுமக்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?

மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற செய்தியை கேட்க விரும்புகிறேன். நாம் அனைவரும் எது எதற்கோ வரிசையில் இருக்கின்றோம். ஐந்தாண்டுக்கு ஒரு முறை வரும் ஜனநாயக திருவிழாவில் வரிசைகள் இன்று நமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE