‘எலக்சன்’ மூன்றாவது பாடல் வெளியீடு
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நட்சத்திர நடிகரான விஜய்குமார் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தீரா..’ எனத் தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘சேத்துமான்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘எலக்சன்’ எனும் திரைப்படத்தில் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, ‘வத்திக்குச்சி’ திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் மற்றும் நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுத மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி. எஸ். பிரேம்குமார் மேற்கொண்டிருக்கிறார். வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.
மே மாதம் 17ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற
‘தீரா என் ஆசை என் ஓசைகள் நீ..’ என தொடங்கும் மூன்றாவது பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடலை பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா எழுத பின்னணி பாடகர் கபில் கபிலன் பாடியிருக்கிறார். மெலோடி பாடலாக தயாராகி இருக்கும் இந்தப் பாடல் திரையிசை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்தப் பாடல் இணையத்தில் வெளியாகி அனைத்து ரசிகர்களின் பிளேலிஸ்டில் இடம் பெற்று சார்ட் பஸ்டர் ஹிட்டாகியிருக்கிறது.