திரை விமர்சனம்

‘எலக்‌ஷன்’ எதிர்பார்க்கலாம் நல்ல கலெக்‌ஷன் : விமர்சனம்

அரசியல் கட்சியில் மாடாய் உழைத்து ஓடாய் தேயும் கடைக்கோடி தொண்டனுக்கு, கடைசி வரை தலைமை பொறுப்பு என்பது எட்டாக்கனியாகத்தான் இருக்கவேண்டுமா? என்ற ஒற்றை கேள்விக்கு இதுவரை பார்த்திராத ஒரு திரைக்கதை பதில்தான் இந்த  ‘எலக்‌ஷன்’.

கதை என்ன?…

ஒரு கட்சியின் அப்பழுக்கற்ற அக்மார்க் ரக தொண்டனாக இருக்கிறார் ஜார்ஜ் மரியன். அவரது நண்பர் சுயேச்சையாக நிற்கும்போது கட்சிக்கே ஆதரவைத் தெரிவித்து நட்பை முறித்துக் கொள்கிறார். 40 வருட அரசியல் பணி இருந்தும் ஜார்ஜ்மரியானுக்கு சொந்த கட்சியில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. இதனால் உள்ளூரில் அவமானப்படும் தந்தையின் மானத்தைக் காப்பாற்ற அடுத்த தேர்தலில் சுயேச்சையாகக் களமிறங்குகிறார் அவரின் மகன் விஜய் குமார். அரசியல் களத்துக்குப் புதிதாக வரும் அவர் சந்திக்கும் பிரச்னைகளே  ‘எலக்‌ஷன்’ கதை.

அப்பாவின் அவமானத்தை துடைக்க அரசியல் களமிறங்கும் மகனாக, கோபக்கார இளைஞராக  விஜயகுமார் ( ‘உறியடி’ புகழ்) புகுந்து விளையாடி இருக்கிறார்.காதல் மனைவி ப்ரீத்தி அஸ்ரானியுடன் தானுண்டு தன் ரொமான்ஸ் உண்டு என்று இருப்பவர் அப்பாவின் அவமானத்தால் வெகுண்டெழுந்து அரசில் காய்களை நகர்த்தும் காட்சிகள் துடிப்பு. அரசியல் தந்திரத்தில் சிக்கி தோற்கும்போது தனது இயலாமையை வெளிப்படுத்தும் இடங்களில் ஈர்க்கிறார். க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வசனம் பேசும்போது அவரது நடிப்பில் துடிப்பும், எதார்த்தமும் எட்டிப்பார்க்கிறது.   ‘அயோத்தி’ புகழ்  ப்ரீத்தி அஸ்ரானிதான் படத்தின் நாயகி. எதார்த்த முகம் இயல்பான நடிப்பில் இதயம் தொடுகிறார். இரண்டாம் பாதியில்  அவரின் பாத்திரம்  வலுவாக அமைக்கப்பட்டது ஆறுதல்.கிறது. கதையின் அஸ்திவாரமே  ஜார்ஜ் மரியான்தான்.  அவமானப்படுவது, மகனையே எதிர்த்து இன்னொருவரை தேர்தலில் நிறுத்தி ஜெயிப்பது என நிறைய இடங்களில் நிறைவான நடிப்பை வழங்கி இருக்கிறார்.

கதையின் போக்கில் திடீர் திருப்பமாக விளையும் ‘வத்திக்குச்சி’ தீலிபன் கதாபாத்திரம் படத்தின் முதுகெலும்பு. வில்லனாக தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வாய்ப்பிருக்கு பிரதர்.  முக்கிய பாத்திரத்தில் பாவல் நவகீதன் நடிப்பு அடடே… எத்தனை விதமான பாவனை என்றாலும் அசால்ட்டாக கடந்து செல்லும் பாவலுக்கும் நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது.

கோவிந்த் வசந்தாவின் பாடல்களில் அத்தனை இயல்பு. பின்னணி இசையும் பிரமாதம். ஒளிப்பதிவாளர் மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவும் கலை இயக்குநர் ஏழுமலை ஆதிகேசவனின் உழைப்பும் படத்திற்கு பலம்.

‘சேத்துமான்’ படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தமிழ்,  இந்த படத்தில் வேறொரு பாதையில் எந்த பந்தை போட்டாலும் அடிப்பேன் என்பதுபோல் சாதித்திருக்கிறார். வழக்கமான கமர்ஷியல் மசாலாவையும் நன்றாகவே அரைத்திருக்கிறார்.  க்ளைமக்ஸில் “அரசியல் என்பது குடும்ப சொத்தோ, குடும்ப பிரச்சனையோ இல்லை அரசியல் என்பது மக்கள் சேவை மக்கள் நலம்” என்ற வசனத்துடன் முடிப்பது நச்!

‘எலக்ஷ்ன்’ எதிர்பார்க்கலாம் நல்ல கலெக்‌ஷன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE