‘ராயன்’ : நடிகனாக தனுஷ் அபாரம்
‘ராயன்’ பார்க்கலாமா?
இயக்குனர், ஹீரோ என தனுஷ் இரண்டாவது முறையாக இரட்டை சவாரி செய்திருக்கும் படம் ‘ராயன்’
கதை…
சின்ன வயசிலேயே பெற்றோர் இல்லாத இரண்டு தம்பிகள், ஒரு தங்கையுடன் சென்னைக்கு வந்து பிழைப்பு நடத்துகிறார் தனுஷ். வடசென்னையை கலக்கிக்கொண்டிருக்கும் தாதாக்களான எஸ்.ஜே.சூர்யா, ‘பருத்திவீரன்’ சரவணன் ஆகியோருக்கிடையே உள்ள பகையில் சந்தர்ப்ப சூழ்நிலையில் சிக்கிக்கொள்ளும் தனுஷ், தம்பி, தங்கையை காப்பாற்ற நடத்தும் ருத்ரதாண்டவமே ‘ராயன்’.
தனுஷ்..
ஒரு படத்தை எப்படி மேக்கிங் செய்வது என்ற லாவகம் தனுஷுக்கு நன்றாகவே வருகிறது. நடிப்பிலும் ஒரு பார்வையிலேயே உள்ளுணர்வை ஆடியன்சுக்கு கடத்தும் இடங்களிலும் தான் தேசிய விருது நடிகன் என்பதை மெய்ப்பிக்கிறார். அதேபோல் மற்ற கதாபாத்திரங்களுக்கும் போதிய இடங்கள் கொடுத்து நடிக்க வைத்து அழகு பார்க்கிறார்.
ஆனால் பல படங்களில் பார்த்த ரவுடிசம், பழிவாங்கள், வெட்டு, குத்து, கொலை, ரத்தம் என திரையரங்கை கசாப்பு கடையாக மாற்றும் வன்முறை ஆட்டம், குடும்ப பார்வையாளர்களை தியேட்டருக்கு அழைத்து வராத வேகத்தடையாக இருப்பது பெரும் குறை.
மற்ற கேரக்டர்கள்…
தனக்கு எதிராக இருந்த ரவுடியை தனுஷ் போட்டுத்தள்ளியது தெரிந்ததும் முதல்முறையாக தனுஷை அழைத்து எஸ்.ஜே.சூர்யா பேசும் இடங்களில் வழக்கம்போலவே மிரட்டுகிறார். ‘பருத்தி வீரன்’ சரவணனுகு சொற்ப காட்சிகள் என்றாலும் சோபிக்கிறார். தனுஷின் முதல் தம்பியாக சந்தீப் கிஷனுக்கு அடித்து ஆட கதையில் செம ஸ்கோப். அதை வீணடிக்காமல் வெளுத்து வாங்கி இருக்கிறார். இரண்டாவது தம்பியாக காளிதாஸும் நிறைவாக செய்திருக்கிறார். தங்கை கேரக்டரில் துஷாரா விஜயன் எதிர்பாராத நடிப்பில் ஆச்சர்யமூட்டுகிறார். பத்து நிமிடமே வந்தாலும் எஸ்.ஜே.சூர்யாவின் முதல் மனைவி கேரக்டரில் வரலட்சுமி அட்டகாசம். இவர்களுடன் செல்வராகவன், பிரகாஷ் ராஜும் தங்களது பங்களிப்பை பிசகாமல் செய்து மிரட்டுகின்றனர்.
ஏ.ஆர்.ரஹ்மான்..
இரண்டு பாடல்களில் ஸ்கோர் செய்திருக்கும் இசைப்புயல்,பின்னணியிலும் பங்கம் செய்திருக்கிறது. ஓம்.பிரகாஷின் ஒளிப்பதிவு.. கதை களத்திற்கேற்ப நிறம் மாறி (லைட்டிங்) தரம் சேர்த்திருக்கிறது.
நெகட்டிவ்…
வெற்றிமாறன், செல்வராகவன் ஃபார்முலா மிக்ஸிங்கில் ‘ராயனில்’ விளையாடி விடலாம் என்ற தனுஷின் பிளானிங்கே படத்தின் முதல் சறுக்கல். வடசென்னை களம் என்றாலும் அதில் புகுந்து விளையாட ஏகப்பட்ட வாழ்வில் இருக்கிறது. ஆனால் அதை மிஸ் பண்ணி, ரத்த சகதியில் ‘ராயனை’ குளிக்க வைத்தது வெகுஜன ரசிகர்களை அதிருப்திப்படுத்துகிறது.
வன்முறையை அடக்கி வாசித்திருந்தால் ‘ராயன்’ அனைவரையும் ரசிக்க வைத்திருப்பான்.