‘வேட்டையன்’ – விமர்சனம் : 1000 கோடி வசூல் என்ற ஏலம் வேகாது
லைகா, ரஜினி, அமிதாப், ஏற்கனவே ஹிட் கொடுத்திருக்கும் இயக்குனர் என எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் வெளிவந்த ‘வேட்டையன்’ வச்ச குறியில் இரை விழுந்ததா? இல்லையா?.. பார்க்கலாம்…
கன்னியாகுமரியில் போலீஸ் எஸ்.பியாக இருக்கும் ரஜினி, எதிரிகளுக்கு எமனாக இருக்கும் என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். அதே மாவட்டத்தில் அரசு பள்ளி ஆசிரியையாக இருக்கும் துஷாரா விஜயன் கற்பழித்து கொலை செய்யப்படுகிறார். அந்த கொலையாளியை தேடுதல் வேட்டையில் என்க்கவுன்ட்டர் செய்கிறார் ரஜினி. ஆனால் என்க்கவுன்ட்டர் செய்யப்பட்டது உண்மையான குற்றவாளி இல்லை என்று தெரியவருகிறது. அப்படியெனில் உண்மையான குற்றவாளி யார்? துஷாரா கொலை செய்யப்பட்டதின் பின்னணி காரணம் என்ன? தவறான என்கவுன்ட்டர் செய்த ரஜினி சந்திக்கும் பிரச்சனைகள்? என்ற அடுக்கடுக்கான கேள்விக்கு விடை தருவதே ‘வேட்டையன்’ கதை.
“குறி வச்சா எர விழணும்”.. என்ற பன்ச்சுடன் எண்ட்ரி கொடுக்கும் ரஜினியின் நடிப்பு வழக்கம்போலவே கொண்டாட்டம். ஓபனிங்கில் ‘மனசிலாயோ’ பாடலில் திருவிழா எனர்ஜியில் தீப்பிடிக்கும் தியேட்டர்… க்ளைமாக்ஸ் வரை சூப்பர் ஸ்டாரின் மாஸ் நடிப்பில் மனதை பறிகொடுக்கிறது. டயலாக் டெலிவரி, நடந்துவரும் ஸ்டைல் என இந்த வயதிலும் இளமை கொப்பளிக்கும் ரஜினியை கொண்டாடி தீர்க்கலாம். அப்பாவியை கொன்றுவிட்ட குற்ற உணர்வில் கலங்கும் காட்சியில் சூப்பர் ஸ்டார் தி கிரேட்!
ஹுமன் ரைட்ஸ் அதிகாரியாக அமிதாப்பச்சன் அலட்டல் இல்லாத நடிப்பில் அசத்துகிறார். என்க்கவுன்ட்டருக்கு எதிரான அவரது கருத்தும் மனித நேயமும் நெகிழ்வு. அரசு பள்ளி ஆசிரியையாக துஷாராவுக்கு பெரிய வாய்ப்பு. அதை கச்சிதமாக பயன்படுத்தி தனது கேரக்டரில் பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
ரஜினியின் மனைவியாக மஞ்சுவாரியர். நடிப்பை பொறுத்தவரை மஞ்சு ஒரு காட்டு யானை. அதற்கு தீனியாக சோளப்பொரியை தந்து ஏமாற்றப்பட்டிருக்கிறார். ‘மனசிலாயோ’ பாட்டு, அப்புறம் வீட்டுக்குள் நுழையும் எதிரிகளை சுட்டுத்தள்ளும் காட்சி தவிர பெரிதாக வேலை இல்லை.
திருடனாக இருந்து பிறகு ரஜினியால் திருத்தப்பட்டு காவல் துறைக்கு உதவும் பேட்டரி கேரக்டரில் பகத் பாசில் பக்கா. படத்தில் காமெடியும், காமெடியனும் இல்லாத குறையை போக்கியிருப்பது சிறப்பு. வில்லனாக ராணா. இடைவேளைக்குப் பிறகே எண்ட்ரி. இருந்தாலும் கொடுத்த வேலையில் கச்சிதம். அபிராமி, ரோகினி உள்ளிட்ட நட்சத்திரங்களும் தங்கள் பணியை சரியாக செய்துள்ளனர்.
அனிருத்தின் இசையில் மனசிலாயோ பாடல் மட்டும் ஈர்ப்பு. பின்னணி இசையிலும் ஏற்கனவே பழக்கப்பட்ட ஒலியை கொடுத்து ஏமாற்றுகிறார். ரஜினி நடந்து வரும் காட்சியில் மட்டும் சிறப்பு சேர்த்திருக்கிறார். எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவில் ரஜினி இளமை புதுமை. ஓபனின் சாங், சண்டை காட்சியில் கூடுதல் உழைப்பு. அன்பறிவ் சண்டை பயிற்சியில் வழக்கம்போல் இருக்கும் கம்போஸிங் இதில் மிஸ்ஸிங். ஒருவேளை ரஜினியின் உடல்நிலையை கருத்தில்கொண்டு லைட்வெயிட் ஃபைட் வைத்திருக்கலாம்.
‘ஜெய்பீம்’ படத்தில் தானொரு சமூக பொறுப்புள்ள இயக்குனர் என்பதை நிருபித்திருக்கும் த.செ.ஞானவேல்.. ‘வேட்டையன்’ கதையிலும் அக்கறை காட்டி இருக்கிறார். சட்டம், கல்வி எல்லோருக்கும் சமமானதாக இருக்கவேண்டும் என்ற கதையின் அடிநாதத்தை திரைக்கதையில் அழகாக கோர்த்திருக்கிறார். ஆனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மசாலாவை குறைவாகவே தடவி இருப்பது சற்றே ஏமாற்றம்.
ராணா தப்பித்துப்போகும் காட்சியில் ரஜினி திடீரென ஹெலிகாப்டரில் வந்து இறங்குவது தவறான என்கவுன்ட்டர் செய்த அவருக்கு கிடைக்காத தண்டனை என படத்தில் நிறைய ஓட்டைகள் இருப்பதால் 500 கோடி 1000 கோடி வசூல் என்ற ஏலம் இதில் வேகாது.
‘வேட்டையன்’ மங்கலான வெற்றி!