இந்திய சினிமாவில் இதுவரை சொல்லப்படாத வாழ்வியல் : ‘தூவல்’ விமர்சனம்
இந்திய சினிமாவில் இதுவரை சொல்லப்படாத வாழ்வியலை கதையாக நெய்த படம் ‘தூவல்’. அதை சொல்லவந்ததில் ஜெயித்திருக்கிறார்களா? அதென்ன தூவல்?… பார்க்கலாம்…
கிருஷ்ணகிரி அருகே ஆற்றை நம்பி இருக்கும் ஒரு மலை கிராமம். ஆற்றில் நீர் வரும் சீசன் தவிர்த்து மற்ற நாட்களில் சிறு சிறு வேலை செய்து பசியாற்றிக்கொள்ளும் ஊர்க்காரர்கள் ஆற்றில் நீர் வந்துவிட்டால் கடவுள் கண்முன் வந்துவிட்டதுபோல மகிழ்ச்சியில் நீந்துவார்கள். ஏனெனில் அப்போதுதான் மீன் பிடித்து விற்பதன் மூலம் கொழுத்த வருமானம் கிடைக்கும். இப்படியாக நகரும் அவர்களது வாழ்க்கையில் சட்டவிரோத செயலில் ஈடுபடும் சிவம்; கடமை மறந்து காசை குறியாக கொண்ட வன சரக அதிகாரி ராஜ்குமார் இருவருக்கும் இடையே வளரும் பகை ஊர் வாழ்வாதாரத்தை சேதாரம் ஆக்குகிறது. அந்த இருவரின் பிழையும் ஊர்க்காரர்களின் நிலையுமே ‘தூவல்’.
தூவல் என்றால் பண்டை கால மீன் பிடிக்கும் முறை. அதாவது தண்ணீர் கொட்டும் இடங்களில் மூங்கில் மரங்களை தடுப்புகளாக கட்டி வைத்து மீன் பிடிக்கும் பண்டை கால தொழில் நுட்பம்.
இதுபோன்ற வாழ்வியல் சினிமாவுக்கு புதியது என்றாலும் அதை சொல்ல வந்த இடத்தில் சறுக்கியுள்ளனர். கதாபாத்திரங்கள் அனைத்துமே சினிமாத்தனம் இல்லாத எதார்த்த முகங்கள். ஆனால் அவர்களை கையாண்ட விதமும் கதை சொன்ன திரை மொழியும் தோற்றிருப்பதால் சுவாரஷ்யம் குறைந்து சோதிக்கிறது நம்மை.
ஒளிப்பதிவு, இசை உள்ளிட்ட தொழில் நுட்ப கலைஞர்கள் பட்ஜெட்டிற்குள் அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது. மீன் பிடிக்க நினைக்கும் சிறுவனின் எபிசோட் தேவையற்ற பக்கங்கள்.
இயக்குநர் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ‘தூவலின்’ வெற்றியில் நனைந்திருக்கலாம்!