நிகழ்வுகள்

மக்களுக்கு பிடித்தால்தான் மாஸ் ஹீரோ : ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’ பூஜையில் பேரரசு பளார்

வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் (VVS Suprem Films) சார்பில் வினோத் வி சர்மா தயாரிப்பில் உருவாகும் படம் ‘சதுரங்க ஆட்டம் ஆரம்பம்’. M.V ராமச்சந்திரன் இயக்குனராக அறிமுகமாகும் இந்தப்படத்தில் நடிகர் அஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் மரகதக்காடு படத்தில் நடித்தவர். மேலும் கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பான மெகா ஹிட் ஆன ஜமீலா மற்றும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நள தமயந்தி தொடர்களிலும் நடித்தவர். கதாநாயகியாக சோனியா நடிக்க முக்கிய வேடத்தில் முருகா அசோக் குமார் நடிக்கிறார்.

இந்தப்படத்தின் பூஜை நேற்று ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் பேரரசு கலந்து கொண்டு படக்குழுவினரை கவுரவித்து வாழ்த்தினார். மேலும் இந்த நிகழ்வில் இயக்குநரும் நடிகருமான ஆர்.அரவிந்தராஜ்,, நடிகர் சக்தி குமார், லொள்ளு சபா மாறன், இயக்குநர் பாரதி கணேஷ், நடிகர் ரோபோ கணேஷ், விநியோகஸ்தர் ஆக்சன் ரியாக்சன் ஜெனிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வில் இயக்குநர் பேரரசு பேசும்போது, “இந்த படத்தின் தயாரிப்பாளர் வினோத் வி சர்மா என்னிடம் சொல்லும்போது இயக்குநர் ராமச்சந்திரனின் தன்னம்பிக்கை மற்றும் கதையை நம்பித்தான் இந்த படத்தை ஆரம்பித்துள்ளேன் என்று சொன்னார். இப்போதுள்ள சூழ்நிலையில் நல்ல கதை இருந்தாலே மக்கள் வரவேற்பு கொடுத்து விடுவார்கள். இன்றைக்கு ஓப்பனிங் என்பது ஒரு நான்கைந்து ஹீரோக்களுக்கு மட்டும் தான் இருக்கிறது. மற்றபடி என்ன தான் பெரிய பட்ஜெட்டில் படம் எடுத்தாலும் வேறு பெரிய ஹீரோக்கள் நடித்தாலும் மக்களுக்கு பிடித்திருந்தால் தான் அந்த படம் வெற்றி அடைகிறது.

அன்று ஒரு படம் பரவாயில்லை என்று சொல்லப்பட்டாலே அது கிட்டத்தட்ட வெற்றி படம் போல தான். ஓரளவுக்கு வசூலித்தும் விடும். ஆனால் இப்போது நிலைமை மாறி உள்ளது. ஒரு முதல் படத்தின் இயக்குநராக நாம் மிகப்பெரிய வெற்றியை பெறுகிறோம் என்பதைவிட நம்மை நம்பிய தயாரிப்பாளரின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும். அதை செய்தாலே அவர் மிகப்பெரிய ஆளாகி விடுவார். அந்த வகையில் இயக்குநர் ராமச்சந்திரன் கடின உழைப்பாளி. தயாரிப்பாளரின் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவார்.

என் முதல் படத்தில் நடிகர் விஜய்யிடம் சென்று கதை கூறியபோது மூன்றாவது முறை அவர் ஓகே என்று சொன்னார். அவர் அப்படி சொன்னவுடன் தான் எனக்கு மிகப்பெரிய பயம் வந்தது. நான் ஒரு அறிமுக இயக்குனர். அவர் மாஸ் ஹீரோ. நம்மை நம்பி, கதையை நம்பி நம்மிடம் ஒப்படைத்து இருக்கிறார் என்று. ஆனால் படம் முடித்து விட்டு விஜய் சார் பார்த்துவிட்டு நீங்கள் கதை சொன்னதை விட மூன்று மடங்கு நன்றாகவே எடுத்திருக்கிறீர்கள் என்று சொன்னார். அப்போதுதான் எனக்கு திருப்தி வந்தது. ஒரு தயாரிப்பாளர், ஒரு உதவி இயக்குநருக்கு கொடுப்பது வாய்ப்பு அல்ல வாழ்க்கை. அதை வாய்ப்பாக நினைக்காமல் வாழ்க்கையாக நினைக்க வேண்டும்.

இப்போதைய காலகட்டத்தில் ஒரு படத்தை முதல் நாளில் இருந்தே விமர்சனங்கள் ரொம்பவே பாதிக்கின்றனவோ என்கிற பயம் தயாரிப்பாளர்களுக்கு வந்திருக்கிறது. அதனால் தான் அவர்கள் நீதிமன்றத்தை நாடினார்கள். ஆனால் ஒரு படத்திற்கு நல்ல விமர்சனத்தை சொல்லும்போது ஏற்றுக்கொள்ளும் உங்களுக்கு அதே நபர்கள் உங்களுக்கு எதிராக விமர்சனம் சொல்லும்போது ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்கிற ஒரு கேள்வியை நீதிமன்றம் கேட்டுள்ளது. சரியான கேள்விதான். அதே சமயம் விமர்சனங்கள் நாகரிகமாக, ஆரோக்கியமாக, நேர்மையாக இருக்க வேண்டும். விமர்சனம் அவதூறாக இருந்தால் காவல்துறையில் புகார் அளிக்கலாம் என்றும் நீதி மன்றம் கூறியுள்ளது.

முன்பெல்லாம் பத்திரிகை, டிவி விமர்சனங்களை பார்த்துவிட்டு மக்கள் படத்திற்கு சென்றார்கள். இப்போது மக்களே விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள். மக்களுக்கு பயந்து நாம் படம் எடுக்க வேண்டும். நிறைய சிறு தயாரிப்பாளர்கள் இப்படி நிறைய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது ஒரு மிகப்பெரிய புண்ணியம். அந்த புண்ணியமே உங்களுக்கு வெற்றியாக அமையும்” என்றார்.

நடிகர் முருகா அசோக் குமார் பேசும்போது, “தயாரிப்பாளர் வினோத் வி சர்மாவை வேறு ஒரு சந்திப்பில் இருந்து எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. அதன் பிறகு சினிமாவில் அவர் அடி எடுத்து வைப்பதாக என்னிடம் கூறியதுடன் நீங்களும் இந்த படத்தில் இருக்கிறீர்கள் என அழைத்தார். அதேபோல இயக்குநர் ராமச்சந்திரனையும் ஒரு போராடும் உதவி இயக்குனராக நான் பார்த்திருக்கிறேன். ஹைபர் லிங்க் முறையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த கதையை அவர் சொல்லும்போதே எனக்கு பிடித்து விட்டது” என்று கூறினார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

தயாரிப்பு ; வி வி எஸ் சுப்ரீம் பிலிம்ஸ் / வினோத் வி சர்மா

இணை தயாரிப்பு ; இந்தியன் ஜிம்கலி & PVR புருசோத் பாண்டியன்

டைரக்சன் ; எம் வி ராமச்சந்திரன்

ஒளிப்பதிவு ; டேனியல் ஜே வில்லியம்ஸ்

இசை ; பாலசுப்ரமணியம் ஜி

படத்தொகுப்பு ; ராம் சுதர்சன்

பாடலாசிரியர் ; மதுர கவி –பொத்துவில் அஸ்வின் – கானா சமீலு – கவி மகேஷ்

நடனம் பாபா பாஸ்கர்

உடையலங்காரம் ; V. மூர்த்தி

ஒப்பனை ; ராஜூ

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE