‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ விமர்சனம்
ஆஹா ஓடிடி தளத்தில் வெளிவந்து பெரும் எதிர்பார்ப்பை பற்ற வைத்துள்ளது ‘ஆன்யா’ஸ் டுடோரியல்’ ஹாரர் வெப் சீரியஸ்.
ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் புதிதாக குடிபோகிறார் நாயகி நிவேதிதா. குடிபோனபிறகுதான் தெரிகிறது அந்த அடுக்குமாடி குடியிருப்பில் நிவேதிதா மட்டும் தன்னந்தனியாக இருப்பது.
ஆன்யாஸ் டுடோரியல் என்ற இன்ஸ்டா வகுப்பை தொடங்கி நடத்தும் நிவேதிதா, ஒருநாள் சாட்டிங்கில் இருக்கும்போது அவருக்கு பின்னால் மர்ம ஒருவம் ஒன்று வருவதை பார்த்து சாட்டிங்கில் இருப்பவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். நிவேதிதா திரும்பி பார்க்கும்போது அந்த உருவம் மறைகிறது. தொடர்ந்து அவர் வீட்டில் பயமுறுத்தும் வகையில் சில சம்பவங்கள் நடக்க தொடங்குகிறது. பேய் பிசாசு எதுமில்லை என்று சொல்லிக்கொள்ளும் நிவேதிதா ஒருக்கட்டத்தில் பயப்பட ஆரம்பிக்கிறார். அந்த பேய் வீட்டிலிருந்து நிவேதிதா தப்பிக்கிறாரா இல்லையா என்பதே மீதி கதை.
அமானுஷ்ய நடவடிக்கைகளில் சிக்கிக்கொண்டு தனக்கு நேர்ந்துகொண்டிருப்பது என்ன என்பது புரியாமல் தடுமாறுவது; நடனமாடிக்கொண்டே மாப் போடுவது; அக்கா ரெஜினாவிடம் வாய்ச்சண்டையிடுவது என நாயகி நிவேதிதா நடிப்பில் தங்கப் பதக்கம் வாங்குகிறார். சில காட்சிகளில் மர்ம உருவத்தை தான்டியும் நிவேதிதா காட்டும் முகபாவனை, உடல்மொழி படம் பார்ப்பவர்களை பயமுறுத்துகிறது. நடிப்புத் திறனை வெளிப்படுத்த நிறைய வாய்ப்புகள் கிடைக்க, அந்த இடங்களிலெல்லாம் சிக்ஸரும் பவுண்டரிகளுமாக விளாசித்தள்ளியிருக்கிறார் நிவேதிதா.
நிவேதிதாவின் அக்காவாக வரும் ரெஜினாவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலமாக ஒளிப்பதிவும் பின்னணி இசையும் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளரின் லைட்டிங் சென்ஸ் அமானுஷ்யத்தை உணரவைக்கிறது.
ஏ.ஆர்.முருகதாஸிடன் உதவி இயக்குனராக இருந்து இந்தப்படம் மூலம் இயக்குனராகியிருக்கும் பல்லவி கங்கிரெட்டி முதல், படத்திலேயே முத்திரை பதித்து பாராட்டு பெறுகிறார்.
திரைக்கதையில் வேகம் காட்டி பல திருப்பங்களை கதையில் கையாண்டிருந்தால் ’ஆன்யா’ஸ் டுடோரியல்’ கூடுதலாக பயமுறுத்தியிருக்கும்.