எமோஷன் மிக்ஸிங்கில் ஒரு ஜாலிபாப் : ’ராஜாகிளி’ – விமர்சனம்
அப்பா இயக்கத்தில் மகன் நாயகனாக நடித்த படங்கள் வந்த தமிழ் சினிமாவில், மகன் உமாபதி ராமையா இயக்க, தந்தை தம்பி ராமையா கதையின் நாயகனாக நடித்து வெளிவந்திருக்கும் படம் ‘ராஜாகிளி’.
இருபது வருடங்களுக்கு முன் தமிழ் நாட்டை பரபரப்பாக்கிய ஒரு தொழிலதிபர்; அவரது கிளுகிளுப்பு பக்கங்கங்கள்; அதனால் ஏற்பட்ட ஒரு கொலை; அந்த வழக்கால் சரிந்த அவரது சாம்ராஜியம் எல்லாவற்றையும் கலக்கி அதனுடன் கொஞ்சம் கற்பனையை கலந்து செய்தால் ‘ராஜாகிளி’ ரெடி.
மிகப்பெரும் தொழிலதிபர் தம்பி ராமையாவுக்கு எல்லாம் இருந்தும் மனைவி தீபாவின் அன்பும் இல்லற உறவும் கிடைக்காமல் ஏங்குகிறார். செல்வாக்கு, புகழ் குவிந்திருந்தும் கெட்ட சகவாசம் இல்லாத உத்தம புத்தனாகவே வாழ்கிறார். ஆனாலும் மனைவியின் சந்தேக கொடுமையே அவரை சபலத்திற்கு ஆளாக்குகிறது. இரண்டாவது மனைவி, மூன்றாவது மனைவி என சபலத்தில் சஞ்சரிப்பவரின் சாம்ராஜியத்தை வீழ்த்துகிறது அவரது சல்லாப வாழ்க்கை. அதன்பின் நடப்பதெல்லாம் “சோதனை மேல் சோதனை போதுமடா சாமி”..
ஆதரவற்றோர் இல்லம் நடத்தும் சமுத்திரகனி, குப்பையில் உணவை தேடி திண்ணும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை அழைத்து வந்து அடைக்கலம் கொடுக்கிறார். அவர்தான் தம்பி ராமையா. அவர் வைத்திருக்கும் டைரியை படிப்பதுப்போல தொடங்கும் படத்தில் விரியும் காட்சிகள் கிளுகிளுப்பு, கலகலப்பு என கலந்துக்கட்டி முதல் பாதி முழுக்க முழுக்க இளசுகளை மயக்கும் சொக்குப்பொடி. அதற்கு எதிர்மாறாக இரண்டாம் பாதி மனதை நெகிழச்செய்யும் செண்டிமெண்ட் டிராமா.
மகன் இயக்கிய படத்திற்கு கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து நடித்திருக்கிறார் தம்பி ராமையா. இரண்டாவது, மூன்றாவது மனைவிகளின் வருகைக்கு பின் ஆளே மாறிப்போய் போடும் குத்தாட்டமும் குதுகலமும் ஜாலியோ ஜிம்கானா. அதே சமயம் எல்லாம் முடிந்து மனநலம் பாதிக்கப்பட்டவராக நடிக்கும்போது கல் மனதையும் கரைத்துவிடுகிறார்.
அன்னை இல்லம் நடத்தும் நல்ல மனிதராக சமுத்திரகனிக்கு சிறப்பு தோற்றம். அதனை திறம்படவே செய்திருக்கிறார். சந்தேகப் பிராணி மனைவியாக தீபா ஸ்கோர் செய்திருக்கிறார். மூன்றாவது மனைவி விசாகா கேரக்டரில் ஸ்வேதாவுக்கு அதிக முக்கியத்துவம். அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு விளாசி இருக்கிறார். போலீஸ் அதிகாரியாக அருள் தாஸ், கல்வியாளராக நரேன், ஸ்வேதாவின் லவ்வராக கிரிஷ், ஸ்வேதாவின் அம்மாவாக ரேஷ்மா என படத்தில் நிறைய கேரக்டர்கள். அவரவர் பாத்திரத்தில் சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
வாய்க்கு வந்ததெல்லாம் பாட்டு வரிகளாகும் காலக்கட்டத்தில் தம்பிராமையாயும் கவிஞராக மாறி பாட்டெழுதியுள்ளார். பெரிதாக ஈர்ப்பு இல்லை என்றாலும் பின்னணி இசையில் ஜெயித்திருக்கிறார்.
முதல்பாதி படத்தின் விறுவிறுப்பும் கலகலப்பும் இரண்டாம் பாதியில் காணாமல் போய் அழுக்காட்சி நாடகமாக மாறுவது படத்தின் குறை. இந்த குறைகளை சரி செய்து திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் இயக்குநராக உமாபதி வென்றிருப்பார்.
‘ராஜாகிளி’ எமோஷன் மிக்ஸிங்கில் ஒரு ‘ஜாலிபாப்’