சைடு சத்யாவாக மாறும் ஆடியன்ஸ்… ‘கேம் சேஞ்சர்’ – விமர்சனம்
கதை என்னவோ கார்த்திக் சுப்புராஜ்தான். ஒன் லைன் என்னவோ நல்லாதான் இருக்கு. ஆனால் பழைய டெம்ப்ளேட்டுக்கு ஷங்கர் புது பெயிண்ட் அடித்தால் எப்படி இருக்கும்?.. அப்படித்தான் வந்திருக்கிறது ‘கேம் சேஞ்சர்’.
ஓபன் பண்ணினா…
ஓடும் ரயில். அதில் இருக்கும் ராம் சரணை போட்டுத்தள்ள ஒரு கும்பல் நுழைகிறது. அந்த கும்பலின் தலைவனாக இருப்பவனுக்கு ஒரு போன் வருகிறது. போன் குரல் : எத்தனை பேர அனுப்பியிருக்க? இவன் : அஞ்சு பேர. போன் குரல் : என்னது அஞ்சு பேர்தானா? இவன் : ஆமா. போன்குரல் : ”டேய் அதெல்லாம் அவனுக்கு பத்தாது. அவன் இப்பதான் ஐஏஎஸ். இதுக்கு முன்ன ஐபிஎஸ்டா…” என்று சொல்லி முடிக்கும்முன் போடுத்தள்ள போன அஞ்சு பேரும் அந்தரத்தில் பறக்க மாஸ் எண்ட்ரி கொடுக்கிறார் ராம் சரண்.
கட் பண்ணினா..
ராம் சரண் ஒரு கலெக்டர். அவருக்கும் அமைச்சர் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் ஒரு அக்கப் ‘போர்’. யார் பவர்? என நடக்கும் மோதலில் ஒரு கலக்டரின் பவரும், அமைச்சரின் பவரும் பட்டிமன்றம் ஏறுகிறது. இறுதி தீர்ப்பு என்ன என்பதற்கு நடுவராய் இருந்து க்ளைமாக்ஸை முடித்து வைக்கிறார் இயக்குநர் ஷங்கர்.
தெலுங்கு ரசிகனுக்கு ஏற்ற கரம் மசாலா பார்மெட்டில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ராம் சரண். ரவுடிகளையும், நேர்மையற்ற அதிகாரிகளையும் பந்தாடி ஆக்ஷன் ஏரியாவில் அட்டகாசமாக கோல் அடிக்கிறார். எஸ்,ஜே.சூர்யாவுடன் மோதல், க்யாரா அத்வானியுடன் காதல் என மாறி மாறி தடதடக்கும் படத்தின் இடையில் விரிகிறது ஒரு பிளாஷ்பேக். அதில் மக்களுக்கான போராட்டத்தை நடத்தும் இன்னொரு ராம் சரண். அந்த கேரக்டர் எதுக்கு? ஏன்? என்கிற விளக்கமெல்லாம் படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். பிளாஷ்பேக் கேரக்டரில் ராம் சரண் நடிப்பு சிறப்பு.
மோசமான அமைச்சர் என்ற வழக்கமான கேரக்டர்தான் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. ஆனால் அவருக்கே உரித்தான மிரட்டல் நடிப்பில் தூள். முதலமைச்சர் நாற்காலி ஆசையில் அவர் நடத்தும் நாடகம், வெல் பிளே. சூப்பர் சாரே!
எஸ்.ஜே.சூர்யாவின் அண்ணனாக ஜெயராம். வறட்சியாக நகரும் திரைக்கதையில் ஆங்காங்கே சிரிப்பு பொங்கல் வைத்து திருப்திப்படுத்துகிறார். முதலமைச்சர் இருக்கும் மேடை ஏறி அவரையே அவன் இவன் என ஏக வசனத்தில் சபிக்கும் மூதாட்டியாக வரும் அஞ்சலியும் தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.
கோபக்கார நாயகனை கூல் செய்யும் நாயகியாக கியாரா. ராம் சரணுக்கு ஈடு கொடுத்து ஆடுகிறார். ஐந்தாறு காட்சிகளில் வசனம் பேசுகிறார். அவ்வளவுதாங்க.
ஷங்கரின் பிரமாண்டத்திற்கு ஏற்ப பிரமாதமாய் உழைத்திருக்கிறார் இயக்குநர் திருநாவுக்கரசு. குறிப்பாக பாடல் காட்சிகளை படமாக்கிய விதம் அட்டகாசம். தமனின் பின்னணி இசையில் டெசிபல் அளவு எக்கச்சக்கம். ரெண்டு பாடலுக்கு ஆட்டம் போடுவதுபோன்ற மெட்டை போட்டிருக்கிறார்.
ஒரு கலக்டருக்கு முதலமைச்சராகும் வாய்ப்பு கிடைத்தால் என்ன நடக்கும்? என்ற ஒற்றை வரி கதை கூட்டும் சுவாரஸ்யம், மொத்த திரைக்கதையிலும் தெறித்திருந்தால் ‘கேம் சேஞ்சர்’ இயக்குநர் ஷங்கருக்கு கம்பேக் கொடுத்திருக்கும். ஆனால் கிழித்த கோட்டை தாண்ட மாட்டேன் என்பதுபோல் தனது முந்தைய படங்களின் சாயலிலேயே படத்தை கொண்டு செல்வதால் இப்படி பண்றீங்களே ஷங்கர்?… என்று பகடி செய்யதான் தோன்றுகிறது.
படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களும் சைடு சத்யா சுனிலை போலவே ஒரு பக்கமாக நடந்துவருவதுதான் ஷங்கர் செய்த சக்சஸ்!