திரை விமர்சனம்

வெறும் டூயட் மெட்டீரியல் இல்லை என்பதை… ‘காதலிக்க நேரமில்லை’ : விமர்சனம்

கட்டுமான நிறுவனங்களில் வேலை செய்யும் ரவிமோகன் –  (ஜெயம் ரவி பெயரை மாற்றிக்கொண்டார்) நித்யா மேனன் இருவருக்கும் தங்களது காதல் பயணத்தில் வெவ்வேறு சிக்கலை சந்திக்கின்றனர். அதாவது நிச்சயதார்த்தம் அன்று கருத்துவேறுபாடு காரணமாக காதலியை (டிஜே) பிரிகிறார்  ரவிமோகன். திருமணமாக சில தினங்களே இருக்கும் நிலையில் நித்யாமேனன் உருகி உருகி காதலித்த காதலன் வேறொரு பெண்ணுடன் இருப்பதை பார்த்துவிட இந்த திருமணமும் நின்றுபோகிறது.

வாழ்வை தனியாகவே கடப்பது என்ற முடிவில் இருக்கும் இருவரையும் பெங்களூரில் சந்திக்கவைக்கிறது  சூழ்நிலை. இதற்கிடையே உயிரணு தானம் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் நித்யா மேனனை எட்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் சந்திக்கிறார் ரவி மோகன். இருவருக்குள்ளும் ப்ரஸ்பரம் பூக்கும் இனம்புரியா காதலின் அடுத்தடுத்த கட்டங்களே கதை.

சொல்லத்தயங்கும் சில விஷயத்தை தைரியமாகவும் தரமாகவும் சொல்லியிருப்பதற்காகவே இயக்குநர் கிருத்திகாவுக்கு பாராட்டும் வாழ்த்தும்!

வெறும் டூயட் மெட்டீரியல் இல்லை என்பதை படத்துக்குப் படம் நிரூபித்துவரும் நித்யாவுக்கு இதிலும் ஸ்கோர் செய்யும் வாய்ப்பு. சடங்கு சம்பிரதாய புடலாங்காவை பார்க்காமல் ஆண் துணையின்றி குழந்தைக்கு அம்மாவாகி அதற்காகவே வாழும் அருமையான கேரக்டர். துரோக காதலனின் உண்மை முகம் தெரிந்து கொதிப்பது, பார்க்கும் வேலையின் சவால்களை அசால்ட்டாக எதிர்கொள்ளும் நம்பிக்கை, மகன் காணாமல் போனதும் ஏற்படும் பரிதவிப்பு என நித்யா மேனன் அபாரம்.

ரொம்ப நாளைக்குப் பிறகு நடிப்பில் கம் பேக் கொடுத்திருக்கிறார் ரவி மோகன். நிச்சயதார்த்தம் அன்று காதலி பரிசாக தரும் ஏமாற்றத்தால் தடுமாறுவது… நித்யா மேனனை சந்தித்தப்பிறகு மனதில் துளிர்க்கும் புதுக்காதல்.. சிறுவன் ரோஹானின் முதல் சந்திப்பில் சண்டையாக தொடங்கும் உறவில் புது அர்த்தம் பூப்பது.. உதறிச்சென்ற காதலி திரும்ப வந்து ஒட்டிக்கொள்ள நினைக்கும்போது திணறும் நிலை.. என உடல்மொழியிலும் முக உணர்வுகளிலும் ஜெயம்ரவி அநாயசம். பாராட்டுகள் ரவி!

ரவியின் நண்பர்களாக வினய், யோகி பாபு. ஆரம்பத்தில் கச்சேரி கலகலப்பு என இருப்பவர்கள் ஒரு கட்டத்தில் காணாமல் போய் மீண்டும் வந்து இணைகிறார்கள். இதில் தன் பாலின ஈர்ப்பாளர் கேரக்டரில் வினய் துணிச்சலாக நடித்திருக்கிறார். யோகி பாபு அவ்வப்போது காமெடி செய்கிறார். இனியாவது யோகிபாபு காமெடி என்ற பெயரில் அதிகமாக உருவ கேலி செய்வதை தவிர்க்க வேண்டும்!

ரவியின் காதலியாக டிஜெ. மாடலுக்கான உடல் வாகு, உடல் மொழியில் கவனம் ஈர்க்கிறார். மத்தபடி பெரிதாக வேலை இல்லை. நித்யாவின் மகனாக ரோஹான் சிங் பிரமாதமான தேர்வு. கோபப்படுவது, குறும்புத்தனம் செய்வது, ஜெயம்ரவி மீது அளவற்ற அன்பை காட்டுவது என அத்தனை உணர்வுகளையும் அளவாக கடத்தும் உத்தி தெரிந்த கெட்டிக்கார சிறுவன்.

நித்யாவின் சித்தியாக வினோதினி தன் பங்குக்கும் ஆங்காங்கே ஸ்கோர் செய்து அசத்துகிறார். ரவியின் தந்தையாக லால், நித்யாவின் பெற்றோர்களாக மனோ – லஷ்மி ராமகிருஷ்ணன் என படத்தின் அத்தனை கேரக்டர்களும் சோடை போகாமல் சிறப்பு சேர்த்துள்ளனர்.

கதைக்கு தேவையான கலர் டோனில் கேவ்மிக் ஆரியின் ஒளிப்பதிவு வண்ண கவிதையாக எண்ணம் பறிக்கிறது. குறிப்பாக கலை இயக்குநர் ஷண்முக ராஜாவின் கைவண்ணமும் படத்திற்கு பலம்.

வழக்கம் போல இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை ஈர்க்கிறது.  ‘இழு இழு இழுவென.. “ பாடல் கிறங்கடிக்கிறது. பின்னணி இசையும் பிரமாதம்!

உயிரணு தானம் கொடுக்கப் போகும் இடத்தில் நடக்கும் உரையாடல்கள் ஓவர் டோஸ். அடிக்கடி ஓபன் செய்யப்படும்  ‘பாட்டில்’ காட்சிகளையும் குறைத்திருக்கலாம்.

நல்ல தொழில் நுட்ப கலைஞர்கள் கிடைத்துவிட்டால் மட்டும் இயக்கத்தை சரியாக செய்துவிட முடியாது. திரைக்கதை கட்டமைப்பில்தான் படத்தின் பலமே உள்ளது. அந்த வகையில் துணிச்சலான ஒரு கதை கருவுக்கு அழுத்தமான திரைக்கதை வடிவும் கொடுத்து இயக்கத்தில் நான் கைத்தேர்ந்துவிட்டேன் என நிரூபித்திருக்கும் கிருத்திகா உதயநிதிக்கு வாழ்த்துகள்!

‘காதலிக்க நேரமில்லை’ கவிதை!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE