‘சப்தம்’ விமர்சனம்
ஒரு தனியார் மருத்துவக் கல்லூரி. அதில் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்ளும் இரண்டு மாணவர்கள். எல்லாம் பேயின் வேலைகள் என வெளியே செய்தி பரவுகிறது. அதற்காக, அமானுஷ்ய சக்திகளை அதன் சத்தங்களை வைத்து, கண்டுபிடித்து, அதனுடன் உரையாடும் பாராநார்மல் இன்வெஸ்டிகேட்டர் ஆதி கல்லூரிக்கு வரவழைக்கப்படுகிறார். பேய் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் கருவிகள் மூலமாக மொத்த கல்லூரியையும் அலசும் ஆதிக்கும் நமக்கும் அடுத்தடுத்து காத்திருக்கும் அதிர்ச்சி ‘சப்தமாக’ இருக்கிறது!
வழக்கம்போல அலட்டல் இல்லாத கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார் ஆதி. மர்மமாக வடிவமைக்கப்பட்ட அவந்திகா கதாபாத்திரத்தின் தன்மையை அறிந்து, அதை ஓரளவிற்குக் கரைசேர்த்திருக்கிறார் லட்சுமி மேனன். சிம்ரனுக்குப் பெரிய வேலை இல்லை என்றாலும், கொடுத்த வேலையைக் குறையின்றி செய்திருக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன், விவேக் பிரசன்னா ஆகியோர் பட்டும் படாமல் வந்து போகிறார்கள். அழுத்தமும் ஆக்ரோஷத்தையும் கோரும் கதாபாத்திரத்திற்கு எவ்வகையிலும் பொருந்திப் போகாமல், சுமார் ரக நடிப்பை வழங்கியிருக்கிறார் லைலா.
அமானுஷ்ய கதகளிக்கிடையே, காமெடியைத் தூவிவிடப் போராடியிருக்கும் ரெடின் கிங்ஸ்லி, ஒன்றிரண்டு இடங்களில் மட்டுமே சிரிக்க வைக்கிறார். அமானுஷ்யமும் திகிலும் நிறைந்த திரைக்கதைக்குத் தேவையான மிரட்டலான ஒளிப்பதிவைத் தன் ஒளியமைப்பால் கொடுத்திருக்கிறது அருண் பத்மநாபனின் கேமரா. பதற்றத்தின் வீரியம் குறையாமல் காட்சிகளை நுணுக்கமாகக் கோர்த்திருக்கிறது வி.ஜே. சாபு ஜோஸப்பின் படத்தொகுப்பு. தமன் இசையில் ‘மாயா மாயா’ பாடல் மர்மத்தைக் கூட்ட உதவியிருக்கிறது. அவரே தன் பின்னணி இசையால், பல இடங்களில் பயத்தையும், பதைபதைப்பையும் திரியில்லாமல் பற்ற வைத்திருக்கிறார்.
சர்ச், மருத்துவக் கல்லூரி, பழைய நூலகம் என எல்லா ப்ரேமிலும் கலை இயக்குநர் மனோஜ் குமாரின் வேலைப்பாட்டை உணர முடிகிறது. ஒட்டுமொத்த தொழில்நுட்பக் குழுவும் படத்திற்கு ஆணிவேராக இருக்க, ஆடியோகிராபர் டி. உதய்குமார் மற்றும் சின்க் சினிமாவின் நேர்த்தியான ஒலியமைப்பு படத்திற்கு மகுடமாக மாறியிருக்கிறது. ஆனாலும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் இதே சப்தம் ஓவர்டோஸாவதைத் தவிர்த்திருக்கலாம்.
முதற்பாதியில் போடப்பட்ட முடிச்சுகளையும், மர்மங்களையும் இரண்டாம் பாதியில் பின்கதையின் உதவியால் அவிழ்த்து, விளக்குகிறது திரைக்கதை. ஆனால், அந்த பிளாஷ்பேக் போதுமான ஆழத்தோடு எழுதப்படாததால், அழுத்தமில்லாத சம்பிரதாய காட்சிகளாகக் கடந்து போகின்றன.
சுவையாக அல்லாமல் சுமையாகவே மாறியிருக்கிறது. முதற்பாதியில் சுவாரஸ்யத்தைக் கூட்ட உதவிய இசையும், ஒலியும் இரண்டாம் பாதியில் சில இடங்களில் ஓவர் டோஸாக மாறிவிடுகின்றன. கொலைகள், ஹீரோ வருகை, பின்கதை, பழிவாங்கல் என டெம்ப்ளேட் கதையாக முடிவதும் ஏமாற்றமே!
‘சப்தம்’ ஓவர் சவுண்ட்!