‘மர்மர்’ விமர்சனம்
‘ஃபவுண்ட் புட்டேஜ்’ என்ற நேரடியாக கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கொண்டு படமாக்கப்பட்ட முதல் தமிழ் திகில் படம் இது.
கதை என்ன?
ஜவ்வாதுமலை வனப் பகுதியில் ஏழு கண்ணிமார்கள் பெளணர்மி தினத்தில் அங்கிருக்கும் குளத்தில் குளிப்பதாகவும், அந்த கண்ணி தெய்வங்களுக்கு செய்ய வேண்டிய பூஜையை செய்யவிடாமல், அங்கிருக்கும் சூனியக்காரியின் ஆவி தடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. குழந்தைகளை பலி கொடுத்த அந்த சூனியக்காரி அமானுஷ்யமாக காட்டில் அலைவதாகவும், அதனால் அந்த காட்டுக்குள் சென்றவர்கள் திரும்பி வருவதில்லை, என்றும் கிராம மக்கள் சொல்கிறார்கள்.
அட இப்படியொரு விஷயமா? அதையும் பார்த்துட்டா போச்சு என்று காமிராவும் கையுமாக ஜவ்வாது மலைக்கு திகில் ட்ரிப் அடிக்கிறது ஐந்துபேர் கொண்ட குழு. அங்கு போனவர்களுக்கு ஏற்படும் அதிர்ச்சி அனுபவம் என்ன? சூனியக்காரி இருப்பது உண்மையா? அப்படி இருந்தால் அந்த ஐவரும் உயிரோடு திரும்புகிறார்களா இல்லையா என்பது மிச்ச கதை.
தனிச்சிறப்போடு உருவாகியிருக்கும் இப்படத்தின் கதைக்களம் மற்றும் திகில் காட்சிகளை கையாண்ட விதம் அனைத்துமே உண்மைக்கு நெருக்கமாக இருப்பதால், படம் முழுவதுமே பெரும் பயத்தை கொடுக்கிறது.
ரிச்சி கபூர், தேவ்ராஜ் ஆறுமுகம், சுகன்யா ஷண்முகம், யுவிகா ராஜேந்திரன், அரியா செல்வராஜ் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள். ஒரு காட்டுக்குள் சிக்கிக்கொண்டு பயத்தில் உரைந்து போகும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களையும் பதற வைக்கும் அளவுக்கு தங்களது பயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், இரவு நேரத்தில் மிக குறைந்த வெளிச்சத்தில் காட்சிகளை படமாக்கியிருந்தாலும், காட்சிகளை மிக தரமாக படமாக்கியிருக்கிறார். அதிலும் கேமராவில் பதிவு செய்யப்படும் காட்சிகளை கண்ணுக்கு உறுத்தாத வகையில் காட்சிப்படுத்தி திரைக்குள் இருக்கும் பயத்தை பார்வையாளர்களிடத்திலும் கடத்தியிருக்கிறார்.
ஒலி வடிவமைப்பாளர் கேவ்ய்ன் பிரெடெரிக் இசையமைப்பாளர் இல்லை என்ற உணர்வே ஏற்படாத வகையில் நேர்த்தியாக பணியாற்றியிருக்கிறார். ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியின் பகல் மற்றும் இரவு நேரங்களில் கேட்கப்படும் ஓசைகளை துல்லியமாக பதிவு செய்திருப்பவர், நடுநடுவே வரும் அமானுஷ்ய ஒலிகள் மூலம் நெஞ்சை பதற வைக்கிறார்.
வழக்கமான திகில் படங்கள் போல் அல்லாமல், ஒருவித பதட்டத்துடன் படத்தை பயணிக்க வைத்து, பயத்துடன் பார்க்கும்படி காட்சிகளை தொகுத்திருக்கும் படத்தொகுப்பாளர் ரோஹித், அப்படியே காட்சிகளின் நீளத்தை குறைத்து படத்தின் நீளத்தையும் குறைத்திருந்தால் வித்தியாசமான திகில் படம் பார்த்த அனுபவம் கிடைத்திருக்கும்.
எழுதி இயக்கியிருக்கும் ஹேம்நாத் நாராயணன், தொழில்நுட்ப ரீதியாகவும், கதை சொல்லல் மற்றும் காட்சி அமைப்புகள் மூலமாகவும் வித்தியாசமான திகில் படத்தை கொடுக்க முயற்சித்திருக்கிறார் படத்தின் நீளம்தான் அயற்சி தருகிறது.
‘மர்மர்’ சூனியம்!