அரசியல்

தமிழக காவல் துறைக்கு ஜனாதிபதி சிறப்புக் கொடி

தமிழ்நாடு காவல்துறையை கௌரவப்படுத்தும் விதமாக ஜனாதிபதியின் சிறப்புக் கொடி வழங்கும் விழா, இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில், கொடியை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழ்நாடு காவல்துறை சார்பில் வழங்கப்பட அணிவகுப்பு மரியாதையைத் துணை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார்.

பின்னர், துணை ஜனாதிபதி வெங்கைய நாயுடு கொடுத்த `ஜனாதிபதியின் சிறப்புக் கொடி’யை, முதல்வர் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார். இதனையடுத்து, முதல்வர் அந்த கொடியை டி.ஜி.பி.சைலேந்திர பாபுவிடம் கொடுத்தார். இந்தியாவில் இந்த சிறப்புக் கொடியை இதுவரை பத்து மாநிலங்கள் மட்டுமே பெற்றுள்ளன. அதிலும், தென் மாநிலங்களில் இந்த சிறப்புக் கொடியைப் பெறும் முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே முதல் காவல்துறை கடந்த 1856-ம் ஆண்டு அன்றைய சென்னை மாகாணத்தில்தான் தொடங்கப்பட்டது. பல்வேறு வரலாற்றுப் பெருமைகளைக் கொண்ட தமிழ்நாடு காவல்துறையில்தான், முதன் முதலில் தடயவியல் பிரிவு, கைரேகை பிரிவு, கடலோர காவல்படை போன்ற பல்வேறு பிரிவுகள் உருவாக்கப்பட்டன. தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக இருந்துவருகிறது. இத்தனைப் பெருமைமிக்க தமிழ்நாடு காவல்துறைக்கு ஜனாதிபதியின் சிறப்புக் கொடி வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அன்றைய முதல்வர் கருணாநிதி முன்வைத்திருந்தார்.

இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, கடந்த 2009-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையின் 150-ம் ஆண்டில் ஜனாதிபதியின் சிறப்புக் கொடி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களினால், அந்த கொடியானது 13 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் வழங்கப்படுகிறது. இந்த சிறப்புக் கொடி, தமிழ்நாடு காவல்துறையின் சின்னத்துடன், வாய்மையே வெல்லும் என்ற வாசகத்துடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. பெருமைமிக்க இந்த கொடிய தமிழகத்தில் உள்ள 1.3 லட்சத்துக்கும் அதிகமான அனைத்து காவலர்களும் தங்களது வலது தோள்பட்டையில் அணிந்துகொள்வார்கள். மிக விரைவில் அனைத்து காவலர்களின் சீருடைகளிலும் இந்த கொடி இடம்பெறும்.

இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், “தமிழ்நாட்டில், துப்பாக்கிச்சூடு, சாதி மோதல்கள், கள்ளச்சாராய மரணம் போன்றவை இல்லை. காவல் நிலைய மரணங்கள் குறைந்திருக்கின்றன. குறைந்திருக்கின்றதே தவிர முற்றிலும் இல்லை என்று சொல்லவில்லை. தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணம் இல்லாத நிலையை ஏற்படுத்தவேண்டும். போக்சோ வழக்குகளில் சிக்குபவர்கள் உடனடியாக கைதுசெய்யப்பட வேண்டும். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக இருக்கிறது” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE