‘மாமன்’ – விமர்சனம்
தமிழ் கலாச்சாரத்தை பொறுத்தவரை வீட்டில் எந்த நிகழ்வாக இருந்தாலும் தாய் மாமனுக்குதான் முதல் மரியாதை. அப்படி தாய் மாமன் உறவு பற்றி பேசும் படத்தை உணர்வு பொங்க இயக்கி இருக்கிறார் பிரஷாந்த் பாண்டியராஜ்.
பத்து வருடங்கள் பிள்ளை பேறு இல்லாமல் இருந்த சூரியின் அக்கா சுவாசிகாவுக்கு குழந்தை பிறக்கிறது. அக்கா மீது கொள்ளை பாசம் கொண்ட சூரிக்கு, அக்கா மகன் மீதும் அளவு கடந்த பாசம் பிறக்கிறது. பிறர் மீது சூரி காட்டும் அக்கறை ,அன்பை பார்த்து டாக்டரான ஐஸ்வர்யா லட்சுமிக்கு காதல் பிறக்கிறது. சூரி – ஐஸ்வர்யா காதல் கல்யாணத்தில் முடிகிறது. சூரியை விட்டு எப்போதும் பிரியாமல் இருக்கும் அக்கா மகனால் சூரி வாழ்க்கையை சோதனைக்கு உள்ளாகிறது. சூரியின் இல்லற வாழ்வு இனிப்பா கசப்பா என்பதற்கு விடை தருகிறது க்ளைமாக்ஸ்!
தாய் மாமன் பாசத்தில், அதற்கு இடையூறு வந்தால் ஏற்படும் கோபத்தில் மன்னிக்க முடியாத தவறு செய்திருந்தாலும் அக்கா மீது குறையாத நேசத்தில் என சூரியின் நடிப்பு மேலும் மெருகேறியுள்ளது. கதாநாயகனாவோ, கதையின் நாயகனாகவோ மாறும் காமெடியனுக்கு எமோஷன் என்பது அத்தனை சீக்கிரம் வராது.. ஆனால் சூரிக்கு அந்த லாவகமும் தெரிந்திருக்கிறது. புண்பட்ட நெஞ்சத்து உணர்வை பன்பட்ட நடிப்பால் இறக்கி வைத்து ஈர்க்கும் சூரிக்கு பாராட்டுகள்!
அக்கா கதாபாத்திரத்தில் ’லப்பர்பந்து’ சுவாசிகா அட்டகாசம். சூரியிடம் கைகூப்பி நீ என் தம்பி இல்லடா.. என்னோட அப்பா.. என்னோட சாமி.. என உருகி அழும் இடத்தில் படம் பார்ப்பவர்களையும் கலங்கடிக்கிறார்.
சூரியின் மனைவியாக ஐஸ்வர்யா லட்சுமி பிரமாதம்.. ’கட்டா குஸ்தி’ படத்திற்கு பிறகு வலுவான கதாபாத்திரம் அமைந்துள்ளது. உணர்ச்சி பெருக்கில் சூரியின் சட்டை பிடித்து உலுக்கி கேள்வி கேட்கும் இடத்தில் கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்.
சூரியின் மருமகனாக மாஸ்டர் பிரகீத் சிவன், வாழ கற்றுத்தரும் வயதான தம்பதிகளாக ராஜ்கிரண் – விஜி சந்திரசேகர், நண்பனாக பால சரவணன், ஐஸ்வர்யா லட்சுமியின் தந்தையாக ஜெயபிரகாஷ், சூரியின் அம்மாவாக கீதா கைலாசம் என அத்தனை பெருமே நடிப்பில் மின்னுகிறார்கள்.
ஹேஷாம் அப்துல் வஹாப்பின் பிண்ணனி இசையும் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் படத்தின் பலம்.
உறவுகளின் பெருமையும் அருமையும் புரியாத இளைய தலைமுறையின் இதயத்தில் ஈரம் வார்க்கும் தரமான குடும்ப கதையை எழுதியதற்காகவே இயக்குநரை பாராட்டலம்.
அதேசமயம் லிட்டர் கணக்கில் வழியும் செண்டிமெண்டில் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் செயற்கைத்தனம் படத்தின் மைனஸ்.
மாமன் மீது என்னதான் பாசம் இருந்தாலும் அப்பா ஸ்பரிசத்தை உணராத மகனாக இருப்பதெல்லம் நம்பும்படியாக இல்லை. திரைக்கதையின் நீளத்தில் எடிட்டர் தயவு தாட்சண்யம் காட்டாமல் இருந்திருந்தால் இன்னும் அழுத்தம் நிறைந்திருக்கும்.
இப்படி சில குறைகள் இருப்பினும் இந்த ‘மாமனை’ பார்க்க உறவுகள் வண்டி கட்டும்.