‘குபேரா’ திரை விமர்சனம்
தேசத்திற்கு சொந்தமான எண்ணெய் வளத்தை அரசியல்வாதிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெற நினைக்கிறார் தொழிலதிபர் ஜிம் சர்ப். இதற்காக மத்திய அமைச்சர் ஹரிஸ் பெரடியிடம் டீல் பேசுகிறார். லஞ்சமாக கொடுக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக்க யாசகம் எடுத்து வாழும் நான்கு பேர் பினாமியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். அதில் ஒருவர்தான் தனுஷ். ஒட்டுமொத்த இந்த திட்டத்துக்கும் மூளையாக செயல்படுகிறார் முன்னாள் சிபிஐ அதிகாரி நாகார்ஜுனா.
திட்டம் நிறைவேறியதும் பினாமியாக நியமிக்கப்பட்ட யாசகர்களை போட்டுத்தள்ளுவதும் பிளானில் ஒன்று. இதை தெரிந்துகொள்ளும் தனுஷ் வில்லன் ஆட்களிடமிருந்து தப்பிக்கிறார். தனுஷால் விஷயம் வெளியே தெரிந்துவிடும் என்பதால் அவரை விடாமல் துரத்துகிறார்கள் வில்லன் ஆட்கள். ஒரு கட்டத்தில் தனது கணக்கில் பத்தாயிரம் கோடி இருப்பதை தெரிந்துகொள்ளும் தனுஷ்.. எதிர்த்து நின்று களமாடுவதே கதை.
இன்னொரு முறை ஆகச்சிறந்த கலைஞன் என்பதை நிருபித்திருக்கிறார் தனுஷ். ஒரு யாசகனின் உடை, உடல் மொழி எப்படி இருக்கவேண்டுமோ அதே மீட்டரில் தன்னை பொருத்திக்கொண்டு யாசகனாகவே மாறியிருக்கும் தனுஷின் நடிப்புக்கு மீண்டும் ஒரு தேசிய விருது நிச்சயம். சினிமாவுக்காக செயற்கையாக உருவாக்கப்படாத நிஜமான குப்பை கிடங்கில் விழுந்து புரண்டு நடித்துள்ள அந்த சகிப்பு தன்மைதான் தனுஷின் உயர்வுக்கு காரணம்.
வாழ்றதுக்காகதான் பொறந்திருக்கோம். ஏன் சாகனும்? என்று பல சந்தர்ப்பங்களில் தனுஷ் எழுப்பும் கேள்வி நம்பிக்கையால் நெய்யப்பட்ட தத்துவம்!
வழக்கமான கதாநாயகி டெம்பிளேட்டில் இல்லாத கதாபாத்திரத்தில் ராஷ்மிகாவுக்கும் அவரது ரசிகர்களுக்கும் புது அனுபமாக அமைந்துள்ளது அவரது கேரக்டர். கழற்றிவிட்டுச் சென்ற காதலனுக்காக காத்திருக்கும் இடத்தில் தனுஷுடனான சந்திப்பு நிகழ்கிறது. ஒரு கட்டத்தில் இவர்களுக்குள் காதல் பூக்கும்; பிரமாண்ட செட்டில் இருவருக்குமிடையே ரொமான்ஸ் சொட்ட சொட்ட ஒரு டூயட் இருக்கும் என்று எதிர்பார்ப்பவர்களை “இது என்னோட சினிமாடா..” என்பதுபோல் யூஸ்வல் ஃபார்முலாவை உடைத்தெரிவதுபோன்ற தனுஷ் – ராஷ்மிகாவுக்கான ஸ்கிரீன் ப்ளே செய்திருக்கிறார் இயக்குநர் சேகர் கமுலா.
குடும்பத்திற்காக மனசாட்சியை கழற்றிவைத்துவிட்டு மனிதமற்ற செயலை செய்கிறோமே என்று குற்ற உணர்வில் உருகும் நாகார்ஜுனா சூப்பர். ஹாலிவுட் நடிகரின் சாயலில் இருக்கும் வில்லன் ஜிம் சர்ப் நடிப்பும் செம. மத்திய அமைச்சராக ஹரிஸ்பெரடி, நாகார்ஜூனாவின் மனைவியாக சுனேனா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்துள்ளனர். யாசகர்கள் கூட்டத்தில் சீனியரக பாக்யராஜ். பரிதாபமாக இருக்கிறது.
தேவிஸ்ரீ பிரசாத் இசையில் ‘போய் வா நண்பா’ பாடலும் பின்னணி இசையும் சிறப்பு. கார்ப்பரேட் பிரமாண்டம், குப்பை மேடு, யாசகக்காரர்களின் உலகம் என எந்த இடத்தில் கேமரா வைத்தாலும் அந்தந்த ஸ்பாட்டின் ஒளிக்கலவையில் கச்சிதம் காட்டியுள்ளார் ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி.
ஒரு பிச்சைக்காரன் குபேரனாக மாறும் ஒருநாள்; கோடீஸ்வரனாக இருக்கும் ஒருவன் பிச்சைக்காரனாக மாறும் ஒருநாள் என்ற ஒன்லைனுக்கு அருமையான திரைக்கதை செய்திருக்கிறார் இயக்குநர் சேகர் கமுலா. ஆனால் அது மூன்றுமணி நேரமாக இழுத்திருப்பது படத்தின் பெரிய மைனஸ்.
பிச்சைக்காரர்களை பினாமியாக்குவது, வெளி உலகம் தெரியாமல் வாழ்ந்த தனுஷ் திடீர் திடீரென தெளிவான அறிவாளியாக மாறுவது, நேர்மையான அதிகாரியாக இருந்த நாகார்ஜுனாவின் தெளிவற்ற முடிவுகள், நாட்டையும் நாட்டு மக்களையும் ஏமாற்றி, நன்றாகவே சுரண்டி பிழைக்கத் தெரிந்த தொழிலதிபர் யோசிக்க தெரியாதவர்போல நாகார்ஜுனா ஐடியாவை நம்பி நிற்பது என்று படத்தில் இருக்கும் நிறைய லாஜிக் ஓட்டைகள் அயற்சியை தருகிறது.
ஒன்லைனின் இருக்கும் ருசிகரம் ஒட்டுமொத்த படத்திலும் இருந்திருந்தால் ‘குபேரா’ கூடுதலாக கொண்டாடப்பட்டிருக்கும்.