தமிழக ஆளுநருடன் ரஜினி திடீர் சந்திப்பு
நடிகர் ரஜினிகாந்த், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். ஆர்.என்.ரவியுடனான சந்திப்புக்கு பின்னர் ரஜினிகாந்த், தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது சந்திப்பு குறித்து பேசிய ரஜினிகாந்த், “இது ஒரு மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு. கிட்டத்தட்ட 20, 25 நிமிஷம் பேசினோம். தமிழ்நாட்டை அவர் மிகவும் நேசிக்கிறார். முக்கியமாகத் தமிழ் மக்கள், அவர்களுடைய நேர்மை, கடின உழைப்பு எல்லாம் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இங்கே இருக்கிற ஆன்மீக உணர்வு அவரை ரொம்பவும் ஈர்த்திருக்கிறது. தமிழ்நாட்டின் நல்லதுக்காக பணி செய்ய தயாராக இருக்கேன்-னு சொன்னார்” எனக் கூறினார்.
அதைத்தொடர்ந்து ரஜினிகாந்த்திடம், இந்த சந்திப்பில் அரசியல் சம்பந்தமாக பேசினீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினார். அதற்கு “அரசியல் பற்றியும் நாங்கள் விவாதித்தோம். அதைப்பற்றி இப்போது உங்களிடம் பரிந்துக்கொள்ள முடியாது” என ரஜினிகாந்த் பதிலளித்தார்.
மேலும், அத்தியாவசியப் பொருள்கள் மீதான ஜி.எஸ்.டி வரி உயர்வு குறித்து கேட்டதற்கு, `நோ கமெண்ட்ஸ்’ என கூறிய ரஜினி, மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தார்.