திரை விமர்சனம்

‘கூலி’ பார்க்கப்போறீங்களா? கொஞ்சம் பொறுங்க!

என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்.. எதை வேண்டுமானலும் செய்யலாம்.. மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற எகத்தாளம் லோகேஷ் கனகராஜிடம் கொடிக் கட்டி பறப்பதை மீண்டும் நிருபித்திருக்கும் படம் ‘கூலி’

என்னங்க ஆரம்பத்திலேயே இப்படியான்னு கேட்பவர்களுக்காக படத்திலிருக்கும் ஒரு காட்சி..

மிருகங்களை எரிப்பதற்காக சத்யராஜ் ஒரு நாற்காலியை கண்டுபிடித்திருப்பார். மிருங்களை எரிப்பதற்கு நாற்காலி எப்படி செட் ஆகும்? உதாரணத்திற்கு மாட்டை நாற்காலியில் வைத்து எரித்துவிட முடியுமா?..

தொடர் வெட்டுக்குத்து நடக்குது.. கொத்து கொத்தா கொலை நடக்குது.. ஆனா…   ஒரு போலீஸைகூட பார்க்கமுடியாத அளவுக்கு படம் பார்ப்பவர்களின் கண்ணை கட்டி லோகேஷ் கனகராஜ் காட்டியிருக்கும் வெற்று வித்தையே ‘கூலி’.

கதை என்ன?

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கடத்தல் சாம்ராஜ்யத்தை நடத்தி வருபவர் நாகார்ஜூனா. இவரது சாம்ராஜ்யத்தின்  கொடூர தளபதி செளபின் சாஹிர். இப்போதான் ரஜினி எண்ட்ரி. ரஜினிகாந்த் ஒரு மேன்சன் நடத்தி வருகிறார். தானுண்டு தனது வேலை உண்டு என்று இருக்கும் ரஜினியை சம்பவம் பண்ண வைக்க  வருகிறது ஒரு சூழ்நிலை.

அதாவது அவரது உயிர் நண்பரான சத்யராஜ் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். உயிர் நண்பனை கொன்றவனின் உயிரை எடுக்க முடிவெடுக்கிறார் ரஜினி . கொலையாளியை மோப்பம் பிடிப்பதற்காக நாகார்ஜூன் கோட்டைக்குள்ளேயே புகுந்து அவரது நம்பிக்கைக்குரிய ஆளாகிறார். சத்யராஜை கொன்றது யார்? எதற்காக கொல்லப்படுகிறார். நாகார்ஜூனாவின் கோட்டைக்குள் நடக்கும் மர்மங்கள் என்ன? ரஜினிக்கும் நாகார்ஜூனாவுக்குமான பகை என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது மீதி கதை.

கதைச் சுருக்கமே நல்லாதானே இருக்குன்னு நீங்க நம்பி படத்துக்குப் போனா ரஜினியின் மனசாட்சியே அதற்கு கேரண்டி தராது!

சரி ரஜினி எப்படி?

படத்தில் எத்தனை பான் இந்தியா ஸ்டார்கள் இருந்தாலும் இது ரஜினி படமே.  ஸ்டைலில் ஈர்த்து,  செண்டிமெண்ட்டை பிழிந்து, எதிரிகளை துவம்சம் செய்யும் ரஜினியின் மேஜிக்கை  லாஜிக்கெல்லாம் பார்க்கலைன்ன்னா ரசிக்கலாம்!

கொடூர வில்லனாக வரும் செளபின், நடிப்பு பிசாசாக மிரட்டி இருக்கிறார். ‘மோனிகா’ பாட்டிலும் கலக்கி இருக்கிறார். சிறந்த வில்லன் நடிப்புக்கான விருது பார்சல் சாரே…

அரசாங்கம், காவல் துறை கண்களில் மண்ணை தூவிவிட்டு சட்டவிரோத வேலைகளை செய்பவராக வரும் நாகார்ஜூனா கதாபாத்திரம் ரொம்ப லேசியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் பவர் ஃபுல் மிஸ்ஸிங்!  சத்யராஜின் மகளாக ஸ்ருதிஹாசன் .பெரும்பாலான காட்சிகளில் அழுக்காச்சியாகவே வந்தாலும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார்.

நாகார்ஜுனாவின்  மகன் கண்ணா ரவியின் காதலியாக வரும் ரச்சிதா ராமின் கேரக்டர், படத்தின்   எதிர்பாராத திருப்பத்திற்கு  உதவியிருக்கிறது. இந்தப் பூனையும் பீர் குடிக்குமா என்பதுபோல் செம ஷாக்கிங் கொடுக்கும்  ரச்சிதா அட்டகாசம்!

சமீப காலமாக நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்கும் காளி வெங்கட்டை சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.

உப்புக்கு சப்பாணியாக வரும் அமீர்கான், உபேந்திரா கேரக்டர்கள் வெறும் பில்டப்புகளே!  ‘மோனிகா’ பாட்டுக்கு  மட்டும் அட்டனென்ஸ் போட்டிருக்கிறார் பூஜா ஹெக்டே.. இவர்கள் தவிர படத்தில் கோயம்பேடு மார்க்கெட்டைவிட அதிக கூட்டம்.

லோகேஷ் கனகராஜ் சினிமா உலகத்தை பொறுத்தவரை ஒரு பக்கம் வெட்டிக்கொண்டும் சுட்டுக்கொண்டும் இருப்பார்கள். இன்னொரு பக்கம் செத்துக்கொண்டே இருப்பார்கள். அப்புறம் விதவிதமான ஆயுதங்களை குவியல் குவியலாக பார்க்கலாம். கொஞ்சமும் லாஜிக் இல்லாத அந்த உலகத்தின் ஷட்டரை இதிலும் திறந்துவைத்து தன்னிடம் அழுத்தமான கதை இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறார்.

கிரீஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு, அனிருத்தின் இசை, அன்பறிவின் ஸ்டெண்ட் டிசைன்; பிரமாண்ட செட் மற்றும் பிரபல நடிகர்களை நம்பியே நான் இருக்கிறேன் என்பதுபோல் இருக்கிறது அவரது கதை, திரைக்கதையின் பலம்.

1000 கோடி அடிக்குமா? அடிக்காதா? என்ற பட்டிமன்றத்திற்கெல்லாம் தீனி போடும் லோகேஷ் கனகராஜ் மெகா ஸ்டார்களை இயக்கும்போது கொஞ்சம் நல்ல கதைக்கும் இடம் கொடுத்தால் நல்லது!

இன்னொருமுறை  ‘கூலி’க்கு மாரடித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE