‘தண்டகாரண்யம்’ திரைப் பார்வை!
கிருஷ்ணகிரி மாவட்டம் பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவரது தம்பி கலையரசன், தற்காலிக வனக்காவலர் பணியில் இருக்கிறார். நிரந்தர பணியாளராக ஆக வேண்டுமென்பது கலையரசனின் கனவு. ஆனால் வனத்துறையின் அராஜகங்களை தினேஷ் தட்டிக்கேட்டதால், கலையரசனின் தற்காலிக பணியும் பறிபோகிறது.
நக்சலைட்டுகளை அழித்தொழிப்பு செய்ய உருவாக்கப்பட்ட சிறப்பு ஆயுதப்படையில் ஆள்சேர்ப்பு நடப்பதாக அறியும் தினேஷ், விவசாய நிலத்தை விற்று, அதற்கான பயிற்சிக்கு தம்பியை அனுப்புகிறார். ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள ஒரு பயிற்சிப் பள்ளியில் சேர்கிறார் கலையரசன்.
அங்கே நடக்கும் சம்பவங்கள் இதனால் பாதிக்கும் கலையரசனின் குடும்பம் என நெஞ்சை பாரமாக்கும் படமாக வந்திருக்கிறது அதியன் ஆதிரை இயக்கியிருக்கும் ‘தண்டகாரண்யம்’.
காதல், வனத்தின் மீதான அக்கறை, அண்ணன் மீதான மரியாதை, உயரதிகாரிகளிடம் பணிந்துக்கிடக்குமிடம், ஆற்றாமையில் உடையுமிடம், நண்பனுக்காகத் தவிக்கும் தருணம் என அழுத்தமான இளைஞனாக கலையரசன் தனது கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
வனத்துறையின் அராஜகங்களைக் கண்டு வெகுண்டெழும் தினேஷ், வழக்கம் போலவே தோற்றத்திலும் ஆக்ரோஷத்திலும் பிரமாதமாக பொருந்திப்போகிறார். ஆனால், மிகப்பெரிய மன மாற்றங்களையும், சமூகப் பிரதிபலிப்புகளையும் உள்ளடக்கிய அந்தக் கதாபாத்திரத்திற்கு, நியாயம் செய்ய போதுமான காட்சிகள் எழுதப்படாதது மைனஸ்.
முதல் பாதியில் ஆதிக்க மனப்பான்மை, இரண்டாம் பாதியில் எமோஷன் என வஞ்சிக்கப்படும் வேற்று மாநில இளைஞராக சபீர் கல்லரக்கல், கலக்கல்! யுவன் மயில்சாமி, அருள்தாஸ், ரித்விகா, வின்ஸு சாம், பாலசரவணன், வேட்டை முத்துக்குமார் கதாபாத்திரங்களும் கச்சிதம்!
வனத்தின் அழகையும், கொடூரமான பயிற்சிக் களத்தின் தகிப்பையும் மிக நேர்த்தியக பதிவு செய்திருக்கிறார் ஒளியமைப்பால் கடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில், உமா தேவி வரிகளில் ‘காவக் காடே’, தனிக்கொடி வரிகளில் ‘நான் பொறந்த சீமையிலே’ பாடல்களில் உணர்ச்சிக் குவியல்!
அரசுகளும், கட்சிகளும் அரசியல் ஆதாயங்களுக்காக, ‘போலி நக்சல்’களை, உருவாக்கிய சம்பவம், 2014ஆம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது. அச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, கதை, திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் அதியன் ஆதிரை.
பழங்குடிகளை நிர்மூலமாக்கும் வனத்துறையின் கைகள், 2006 வன உரிமைச் சட்டம், நக்சல் வேட்டைகளுக்குப் பின்னான அரசியல், ஒரு நக்சல் உருவாகும் சூழல் எனச் சுட்டெரிக்கும் உண்மைகள் பலவற்றைப் பேச முயன்றிருக்கும் மையக்கதை படத்தின் பலம்!
கதை, அதற்கான களம், சுதிசுத்தமான தொழில்நுட்பம் படத்தின் கதாபாத்திரங்களில் ஒன்றாகிப்போகிறது. ஆனாலும் நேர்த்தியில்லா திரைக்கதையால் கொஞ்சம் தடுமாறவும் செய்கிறது இந்த ‘தண்டகாரண்யம்’.