’கிஸ்’ திரை விமர்சனம்!
கதாநாயகன் கவினுக்கும் காதலுக்கும் ஏழாம் பொருத்தம். அப்படிப்பட்டவரின் கைக்கு வந்து சேர்கிறது ஒரு பழங்கால புத்தகம். காதலர்கள் யாராவது முதம் கொடுத்ததை பார்த்தால் அந்த காதல் ஜோடியின் எதிர்காலம் கண்முன்னே வந்து போகிறது.
தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தால் கலவரமாகிறார் கவின். தன்னிடம் இந்தப் புத்தகம் வந்து சேர்வதற்கு காரணமாக இருந்த ப்ரீத்தி அஸ்ராணியுடன் பழகத் தொடங்குகிறார். ஒருமுறை ப்ரீத்தி தன்னை முத்தமிட, ப்ரீத்தி இறந்துபோவது போன்ற காட்சியை காண்கிறார் கவின். இதனால் ப்ரீத்தியை வெறுப்பது போல நடிக்க, கவிப் காதல் பிரேக்கப் ஆகிறது. அதன்பின் அரங்கேறும் காட்சிகள் மிச்ச கதை.
காதலும் காமெடியும் கலந்த கதையென்றால் கவினுக்கு கற்கண்டு. அதை சரியாக செய்திருக்கிறார் கவின் எமோஷன் – செண்டிமெண்ட் – காமெடி – ஜாலி என எல்லா ஏரியாவிலும் ரவுண்டு கட்டி அடித்திருக்கிறார். ஆனால் அவரது உடல்மொழியில் மட்டும் ‘ப்ளடி பெக்கர்’ படத்தின் பாதிப்பு படம் நெடுக வருவது அலுப்பு!
‘அயோத்தி’யில் பார்த்த ப்ரீத்தி அஸ்ராணியா இது.. ஆச்சர்யமூட்டுகிறார் ஹீரோயின். நடிப்பு, நடனம் இரண்டிலுமே அசத்தி மனசை அள்ளுகிறார் ப்ரீத்தி! காமெடி காம்போவாக நிறையக் காட்சிகளைக் கரை சேர்த்திருக்கிறது மிர்ச்சி விஜய் – விடிவி கணேஷ் காம்பினேஷன்.
கவினுடன் இவர்கள் அடிக்கும் டைம்மிங், ரைம்மிங் கலாட்டா செம கலகலப்பு. கவினின் பெற்றோராக ராவ் ரமேஷ் – தேவயாணி, ப்ரீத்தி அஸ்ராணியின் அப்பாவாக கல்யாண், ராவ் ரமேஷின் முன்னாள் காதலியாக கெளசல்யா, கௌரவத் தோற்றத்தில் பிரபு என மற்ற கதாபாத்திரங்களும் கச்சிதமாக செதுக்கப்பட்டுள்ளது.
2கே கிட்ஸைக் கலாய்த்து வரும் திருமண மண்டப காட்சிகளில் தியேட்டரே குலுங்குகிறது. இடைவேளையில் எட்டிப் பார்க்கும் அந்த சீரியஸான பிரச்னையும் சுவாரஸ்யத் திருப்பம்!
ஜாலியான ரொமான்டிக் காமெடியில் ஃபேண்டஸி பூச்சை பூசி புதுமையான படைப்பாகக் கொண்டு வர முற்பட்டிருக்கிறார் இயக்குநர் சதீஷ் கிருஷ்ணன். படத்தின் தொடக்கத்தில் வரும் ஃபேண்டஸி ராஜா கதைக்கு குரல் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி. பிரபல வாய்ஸ் என்றாலும் உச்சரிப்புகளில் தெளிவின்மை.
ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகள் கலர்ஃபுல் ட்ரீட்! க்ளைமாக்ஸ் தீ விபத்து காட்சிகளின் கிராபிக்ஸ் தரம், டிரோன் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் ஆகியவை அருமை. ரொமான்டிக் காமெடிக்குத் தேவையான நிதானத்தையும் மிதவேகத்தையும் படத்தொகுப்பில் கொண்டு வந்திருக்கிறார் ஆர்.சி.பிரணவ்.
ஜென் மார்ட்டின் தனது பின்னணி இசையால் காட்சிகளின் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்திருக்கிறார்.
முதல்பாதி வரை “படத்தை போடுங்கப்பா” என்று அலுத்துக்கொள்ள வைத்தாலும் இரண்டாம் பாதியில் திரைக்கதையின் டெம்ப்போவை சரியான மீட்டரில் பொருத்தி படம் பார்ப்பவர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
‘கிஸ்’.. டேஸ்ட்!