‘படையாண்ட மாவீரா’ : விமர்சனம்!
மறைந்த முன்னாள் வன்னியர் சங்க தலைவரும், எம்.எல்.ஏ-வுமான காடுவெட்டி குரு மீது பல வழக்குகளும், குண்டர் சட்டமும் பாய்ந்த நிலையில், அவர் மீதிருந்த தவறான கண்ணோட்டங்களை உடைத்து, அவர் மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடியதோடு, சாதி பாகுபாடுகளை தவிர்த்து, தமிழர்கள் என்ற ஒரு குடையின் கீழ் அனைவரையும் ஒன்றினைத்து தமிழ் தேசியத்தை உருவாக்க நினைத்த மாவீரன் என்று சொல்வது தான் ‘படையாண்ட மாவீரா’.
காடுவெட்டி குரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் வ.கெளதமன், விஜயகாந்த் சாயல் இருப்பதால், சண்டைக்காட்சிகள், நடனம் என அனைத்து ஏரியாவிலும் அவரைப் போலவே நடித்திருக்கிறார். உணர்ச்சிகரமான வசனங்கள் பேசும் காட்சிகளில் நெருப்பாக நடித்திருப்பவர், தான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரத்திற்கு ஒரு நடிகராக நியாயம் சேர்த்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் பூஜிதா பொன்னாடாவுக்கு பெரிய வேலை இல்லை. சில காட்சிகள் மற்றும் பாடல் காட்சியில் தலை காட்டுவதோடு சரி. காடுவெட்டி குருவின் தந்தையாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, குறைவான காட்சிகளில் வந்தாலும், தனது வழக்கமான பாணியிலான நடிப்பால் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.
பழிதீர்க்கும் தன் கோபத்தை கண்களில் மட்டும் இன்றி உடல்மொழியிலும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் காடுவெட்டி குருவின் இளம்பருவ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் கெளதமனின் திரை இருப்பு சிறப்பு. ஆடுகளம் நரேன், சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், இளவரசு, ரெடின் கிங்ஸ்லி, மதுசூதனன் ராவ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில், வைரமுத்துவின் வரிகளில் பாடல்கள் கமர்ஷியலாக இருப்பதோடு, சுமாராகவும் இருக்கிறது. சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசையில் சில இடங்களில் கவனம் ஈர்த்தாலும், பெரும்பாலான இடங்களில் பழைய படங்களை நினைவுப்படுத்துகிறது. ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன் படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, சண்டைக்காட்சிகளில் கடுமையாக உழைத்திருக்கிறார்.
படத்தொகுப்பாளர் ராஜா முகமது பணியிலும் குறையில்லை.காடுவெட்டி குருவின் வாழ்க்கை சம்பவங்களையும், சில கற்பனை சம்பவங்களையும் மையமாக கொண்டு எழுதி இயக்கியிருக்கும் வ.கெளதமன், ரவுடியாகவும், சாதி வெறியராகவும் பார்க்கப்படும் மறைந்த காடுவெட்டி குருவை, மக்களுக்காகவும், மண்ணுக்காகவும் போராடிய நேர்மையான மனிதராக காட்டும் ஒரு படைப்பாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்.
ரூ.100 கோடி பணத்தை காட்டி தன் பக்கம் இழுக்க முயற்சித்த பெரும் அரசியல் கட்சியின் அழைப்பை நிராகரித்தவர், தனக்கு துரோகம் இழைத்தாலும், உயிர் உள்ளவரை பா.ம.க-வில் மட்டுமே பயணிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தவர், மக்களுக்காகவும்,மண்ணிக்காகவும் போராடிய போது, விலை பேசிய கார்ப்பரேட் முதலாளியின் ரூ.1000 கோடியை நிராகரித்தவர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் மற்றவர்களுக்காக மட்டுமே யோசித்தவர், என்று அவரைப் பற்றி தெரியாத பல விசயங்களை சொல்லி, வீரமிக்கவராக மட்டும் இன்றி நேர்மையானவராகவும் வாழ்ந்தவர் காடுவெட்டி குரு என்பதை இயக்குநர் வ.கெளதம் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
காடுவெட்டி குரு மீதான தவறான பிம்பத்தை உடைக்கும் விதமாக திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கும் இயக்குநர் வ.கெளதமன், காடுவெட்டி குருவின் ஆதரவாளர்களை ஒரு கதையாசிரியராக கவர்ந்தாலும், கதை சொல்லல் மற்றும் ஒரு விசயத்தை காட்சி மொழியில் சொல்வதில் எந்தவித புதுமையையும் நிகழ்த்தாமல், ஒரு சாதாரண கமர்ஷியல் படமாக கொடுத்து சினிமா ரசிகர்களை சலிப்படைய செய்திருக்கிறார்.
மொத்தத்தில், ‘படையாண்ட மாவீரா’ காடுவெட்டி குருவின் உண்மையும், கற்பனையும்.
நன்றி : cinemainbox