சமூகத்திற்கு தேவையான சிகிச்சை.. ‘ராம் அப்துல்லா ஆண்டனி’ : திரைப்பார்வை!
அரசுப் பள்ளியில் படிக்கும் மூன்று மாணவர்கள், தொழிலதிபர் வேலராமமூர்த்தியின் 12 வயது பேரனை கடத்தி கொடூரமாக கொலை செய்கிறார்கள். அடப்பாவிகளா.. பச்ச பிள்ளைங்க கையில் இப்படி கத்தியை கொடுத்து கதை பண்ணியிருக்காங்களே என ஓபனிங் சீனே படம் பார்ப்பவர்களின் அடிவயிற்றில் நெருப்பு பற்ற வைக்கிறது. ஆனால் அந்த கொலைக்கான பின்னணி மெல்ல மெல்ல அவிழும்போது ச்சே.. இன்று சீரழிந்துகொண்டிருக்கும் சமூகத்திற்கு தேவையான சிகிச்சையை அல்லவா இந்த படம் செய்திருக்கிறது.. என்று பாராட்ட தோன்றுகிறது. தோன்றுகிறது என்ன?.. பாராட்டியே ஆகவேண்டும்.

ராம், அப்துல்லா, ஆண்டனி என்ற பள்ளி மாணவர்களாக பூவையார், அர்ஜுன், அஜய் அர்னால்டு நடித்துள்ளனர். இணை பிரியாத நண்பர்களாக வேற்றுமையில் ஒற்றுமையை எடுத்துச்சொல்லும் கதாபாத்திரத்தில் மூவரின் நடிப்பும் சிறப்பு. க்ளைமாக்ஸில் இவர்கள் எடுக்கும் முடிவு கண் கலங்க வைக்கிறது. பூவையார் நடிப்பு ஒரு படி மேலே என்று சொல்லலாம்.
கதையின் அடிநாதமே காவலராக வரும் செளந்தரராஜாவின் கதாபாத்திரம்தான். இதற்குமுன் பல படங்கள் நடித்திருந்தாலும் இந்தப் படம் செளந்தரராஜாவுக்கு முக்கியமான படமாக அமைந்திருக்கிறது. எமோஷன், ஆற்றாமை, பிரச்சனையின் தீவிரத்தை புத்திசாலித்தனமாக கையாளும் திறன்என காவலர் கேரக்டரில் நடிப்பே தெரியாத அளவுக்கு நிஜத்துக்கு நெருக்கமாய், நெஞ்சுக்கு நெருக்கமாய் நடித்து கவனம் ஈர்க்கிறார். அடுத்தடுத்த படங்களில் வானம் வசப்பட வாழ்த்துகள் செளந்தரராஜா!

படத்தின் அடுத்த மிரட்டல்.. இன்ஸ்பெக்டராக வரும் சாய்தீனா. விசாரணை கைதிகளிடம் காட்டும் கொடூர முகம், சிறுவர்கள் என்றும் பாராமல் இரக்கமே இல்லாமல் நடந்துகொள்ளும் விதம் என படம் பார்ப்பவர்களுக்கு கோபம் வரும் அளவுக்கு வில்லத்தனம் காட்டியிருக்கிறார்.
தொழிலதிபராக வேல ராமமூர்த்தி மாணவர்களின் பெற்றோர்களாக தலைவாசல் விஜய், ஜாவா சுந்தரேஷன், வினோதினி, கிச்சா ரவி, செளந்தரராஜாவின் அம்மாவாக ரமா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பு! நர்ஸாக வருபவர் லட்சணமாக இருக்கிறார். லாஜிக் இல்லாத ஒரு குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்டு ஈர்க்கிறார்.
பெரிய ஹீரோக்கள் படத்திற்கு காட்டும் தரமும் உழைப்பும் எல்.கே.விஜயின் ஒளிப்பதில் தெரிகிறது. இசையமைப்பாளர் டி.ஆர்.கிருஷ்ண சேட்டன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசையும் ஓவர் சப்தம்.

ஒரு கொலை; அதன் பின்னணியில் விரியும் திரைக்கதை; அந்த கொலைக்கான காரணம் என்னவென்ற எதிர்பார்ப்பை பற்றவைக்கும் சஸ்பென்ஸ்; அதை சுற்றிய பரபரப்பு; கதை போதிக்கும் கருத்து என படத்தை சிறப்பாக செதுக்கி இருக்கும் இயக்குநர் ஜெயவேலை பாராட்டலாம்!
‘ராம் அப்துல்லா ஆண்டனி’ தேர்ச்சி பெற்றவர்கள்!

