திமுகவில் இணைந்தது ஏன்? வைத்திலிங்கம் பேட்டி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆதரவாளர்களுடன் வந்து திமுகவில் இணைந்த வைத்திலிங்கம், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதியில் நான்கு முறை நின்று வென்றவர் வைத்திலிங்கம். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சரான எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி எந்தச் சிக்கலும் இல்லாமல் நிறைவுபெற வைத்திலிங்கம் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் காரணம்..
அதன்பிறகு அதிமுகவிலிருந்து விலகிய வைத்திலிங்கம் ஓ.பி.எஸ் அணியில் பலமானவராக இருந்தார். ஓபிஎஸ் அணியில் இருந்த மருது அழகு ராஜ், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் தி.மு.க-வில் இணைந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால், எந்த கட்சியில் இணைவது என்று முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருந்த வைத்திலிங்கத்திற்கு தவெக தரப்பிலிருந்துகூட கொக்கி போடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளார்.
திமுகவில் தன்னை இணைத்துக்கொண்ட பிறகு பேட்டியளித்துள்ள வைத்திலிங்கம், “முதலமைச்சர் செயல்பாட்டை தமிழ்நாட்டு மக்கள் போற்றுகிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் மனதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார். திமுகதான் தமிழ்நாடு, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்கு பாடுபடுகிறது. எனவே திமுகவில் இணைந்துள்ளேன்.” என்றார்.

