இப்படியொரு தேவதை நமது வாழ்க்கையில் வந்தால் வாழ்க்கை சொர்க்கமே.. ‘கப்புள் ஃபிரண்ட்லி’ திரை விமர்சனம்!
திருச்சி பையன் – திருநெல்வேலி பொண்ணு. இருவரையும் சந்திக்க வைக்கிறது சென்னை மண்ணு. நாயகன் சந்தோஷ் சோபன் இண்டீரியர் டிசைனர். நாயகி மானசா வாரணாசி ஐடி துறை வேலைக்காக காத்திருக்கிறார். மானசாவுக்கு மகளிர் விடுதியில் தங்க இடம் கிடைக்காத சூழலில் சந்தோஷ் அறையில் தற்காலிகமாக தங்குகிறார். அதுவே நிரந்தரமாகும் நேரத்தில் மனதளவிலும் உடலளவிலும் நெருக்கமாகிவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் அது லிவிங் டு கெதராக மாறுகிறது. மானசா வந்த யோகம் சந்தோஷ் வாழ்க்கையில் ஏற்றமும் நிம்மதியும் கைகூடுகிறது. ஆனால் அதை சுக்குநூறாக்கி போட வருகிறது ஒரு பிரச்சனை. அந்த பிரச்சனை என்ன? முடிவு சுகமா? சோகமா? என்பதற்கு விடை தருகிறது க்ளைமாக்க்ஸ்.

பக்கத்து வீட்டு பையன், எதிர் வீட்டு , பின் வீட்டு பையன் என்று எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம் என்பதுபோல் இருக்கிறார் நாயகன் சந்தோஷ் சோபன். தமிழில் இது அவரது முதல் படம் என்று தெரியாத அளவுக்கு நடிப்பில் பழுத்த பக்குவம். தன் வாழ்வில் மானசா வசந்தம் வீசத் தொடங்கும்போது காட்டும் மகழ்ச்சியாகட்டும் அதுவே அவரை பிரிந்துவிடுவோமோ என்று நினைத்து வெடித்து அழுவதாகட்டும் மனிதர் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
நடிகை அபிநயா சாயலில் தேவதை போல் இருக்கிறார் மானசா வாரணாசி. இப்படி ஒரு பெண் நமது வாழ்க்கையில் வந்தால் வாழ்க்கை சொர்க்கமே என்று இளைஞர்களை ஏங்க வைப்பதுபோன்ற ஒரு கேரக்டரில் மானசா மனதை பறிக்கிறார். சிக்கலான நேரங்களில் அதற்கு எளிய தீர்வு காண்பது. தனது ஆசைக்கு, லட்சியத்துக்கு குறுக்கே காதல் வந்தாலும் காதலன் வந்தாலும் ஏன் சொந்த அப்பாவாக இருந்தாலும் அதை தூக்கி எறிந்துபோகும் கோபமும் தன்மானமும் கொண்டவராக மானசா நடிப்பு அக்மார்க் தரம்.
சொற்ப காட்சிகளில் வந்தாலும், யோகிபாபு, லிவிங்ஸ்டன், நாயகனின் அண்ணியாக வருபவரின் கதாபாத்திரங்கள் மனசில் பதிகின்றன.
காதல் கதைக்கு கவிதை போல பொருந்தும் அற்புத ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன். அதேபோல் காதலின் மகிழ்வான தருணங்க, நெகிழ்வான நிமிடங்கள், நெஞ்சமெல்லாம் சுமையாக மாறும் நேரங்கள் என காட்சிகளுக்கு ஏற்ற பின்னணியையும், பாடலையும் தந்து ரசிக்க வைக்கிறார் இசையமைப்பாளர் ஆதித்யா ரவீந்திரன்.
லிவிங் டூ கெதர் வாழ்வை கொச்சைப்படுத்தாத எழுத்தை கொடுத்து படமுழுவதும் காட்சிகள் வாயிலாக கவிதை எழுதி இருக்கும் இயக்குநர் அஸ்வின் சந்திரசேகரின் டீசண்ட் படைப்புக்காக பாராட்டுகள்.
‘கப்புள் ஃபிரண்ட்லி’ காதல் கவிதை.

