‘ஆழி’ திரை விமர்சனம்!
ஆழிப் பேரலைகளுக்குள் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு படகில் நடக்கும் மர்ம விஷயங்கள்தான் இந்தப் படத்தின் கதை என்பதால் மிகப் பொருத்தமாக இந்தப் படத்துக்கு ‘ஆழி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
படத்தின் கதை களம் நாகர்கோவில். நாகர்கோவில் கடலோரம் இருக்கும் மீனவ குடியிருப்பு பகுதியில் சரத்குமார் ஒரு மிகப் பெரிய பணக்காரர். மீன் பிடி படகுகளை சொந்தமாக வைத்திருப்பவர். இந்த அறிமுகத்தோடு போதை மருந்து கடத்துகிறார். துப்பாக்கி போன்ற ஆயுதங்களையும் கடத்துகிறார். ஒரு கடத்தல் பேர்வழியாகவும் இருக்கிறார்.
இவருடைய மகள் தேவிகா சதீஷ், தன்னுடன் கல்லூரியில் படிக்கும் மாணவரான இந்திரஜித்தைக் காதலிக்கிறார். அவரது காதலியின் குடும்பத்திற்கும் அவர் குடும்பத்திற்கும் ஏணி வைத்தால்கூட எட்டாத ஒரு பொருளாதார நிலைமை.
இந்திரஜித் குடும்பம் மிக, மிக வறுமையில் வாழ்கின்ற ஒரு குடும்பம். அவருடைய அப்பாவான வையாபுரி உடல் நலக்குறைவால் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டில் இருக்கிறார். அதனால் இந்திரஜித் கல்லூரிக்கு போகும் இந்த சமயத்திலும் பார்ட் டைமில் ஒரு வேலையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
சரத்குமாருக்கு தன்னுடைய மகள் பரம ஏழையாக இருக்கும் இந்திரஜித்தை காதலிப்பது தெரிய வருகிறது. அவருக்கு இந்திரஜித்தைப் பிடிக்கவில்லை. இந்தக் காதலும் பிடிக்கவில்லை. இதை எப்படி தடுப்பது என்று யோசிக்கும்பொழுது அவருக்குள் தூங்கிக் கொண்டிருந்த மிருகம் விழித்து விடுகிறது.
இந்திரஜித்தை தன்னுடைய படகிற்குள் வைத்து கடத்திச் செல்கிறார் சரத்குமார். அந்தப் படகு தற்போது நடுக்கடலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறது. அந்த நேரம் இந்திரஜித்தை மிரட்டுவதற்காக வந்த சரத்குமாரை, இந்திரஜித் தாக்க… பதிலுக்கு சரத்தும் இந்திரஜித்தை கடுமையாக தாக்கிவிடுகிறார். இந்தத் தாக்குதலினால் கால் பகுதியில் பலத்த அடிபட்டு எழுந்திருக்கவே முடியாத நிலைமையில் படுத்திருக்கிறார் இந்திரஜித்.
அந்தப் பக்கமாக ரோந்து வந்த கஸ்டம்ஸ் படையினர் சரத்குமாரின் படகை சோதனையிடும் பொழுது அங்கே இருந்த இந்திரஜித்தையும் பார்க்கிறார்கள். ஆனால் அவனைக் காப்பாற்றாமல் சரத்குமாரிடம் பணம் வாங்கிக் கொண்டு வெளியேறுகிறது கடமை தவறாத கஸ்டம்ஸ் அதிகாரிகள் கூட்டம்.
போட்டின் எஞ்சின் அடிக்கடி தகராறு செய்வதால் அதை சரி செய்வதற்காக எஞ்சின் பக்கத்தில் சென்ற சரத்குமார் திடீரென்று எதிர்பாராதவிதமாக நடந்த ஒரு சிறிய விபத்தில் சிக்க… அவருடைய வலது கால், எஞ்சின் மிஷினின் ப்ரொபைலரில் மாட்டிக் கொள்கிறது.
அவருடைய கால் மிகவும் நசுக்கி போய் கிடக்க இந்த நேரத்தில் அந்தப் போட்டில் சரத்குமாரின் நாயை தவிர வேறு யாருமே இல்லை. இந்தச் சூழலில் இதற்கு மேல் என்ன நடந்தது? சரத்குமாரும் இந்திரஜித்தும் தப்பித்தார்களா? இல்லையா? என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
சரத்குமார் சமீப படங்களில் அப்பா கேரக்டர்களிலேயே வெளுத்து வாங்குகிறார். இந்தப் படத்திலும் ஒரு வில்லன் பிளஸ் அப்பா என்கின்ற கதாபாத்திரத்தில் தன்னால் முடிந்த அளவுக்கான நடிப்பை காண்பித்து இருக்கிறார். சரத்குமாரை அதிகமாக நடிக்க வைக்காமலும் மிக இயல்பாக நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர்.
முதன்முதலில் தன்னுடைய மகளின் காதலை உணரும் சரத்குமார் மகளிடமே வந்து, அவளுடைய காதல் பற்றி அமைதியாக கேள்வி கேட்கும் அந்த இடத்தில் அவருடைய நடிப்பு அபாரம். அதேபோல் தன்னுடைய வருங்கால மருமகனான இந்திரஜித்திடம் அவர் இது பற்றி பேசும்பொழுதும் அமைதியாகவே பேசி அவன் மனதை கலைக்க முயல்கிறார். இந்த இடத்திலும் ஒரு அப்பாவாக சரத்குமார் சிறப்பாக நடித்திருக்கிறார்.
இறுதியில் அவரும் ஒரு சூழலில் மாட்டிக் கொண்டு தவிக்கும் பொழுது தன்னுடைய ஈகோ இடம் கொடுக்காமல் உதவி கேட்க மறுத்து அந்த துயரத்தை சகித்துக் கொள்ளும் அவருடைய மனோ தைரியம்… அவருடைய வெறுப்புணர்வு… இதை அவ்வளவு அழகாக காட்டியிருக்கிறார் இயக்குநர்.
காதலன் அருளாக நடித்திருக்கும் இந்திரஜித் ஒரு எளிமையான கல்லூரி மாணவனாகவும், பொறுப்பான மகனாகவும், ஒரு நல்ல காதலனாகவும் நடித்திருக்கிறார். கடைசியில் அவர் அடிபட்டு துன்பப்பட்டு, அதேவேதனையோடு சரத்குமாரை காப்பாற்றும் பொழுது கை தட்டலை பெற்றுவிட்டார்.
சரத்குமாரின் மகளாக நடித்திருக்கும் தேவிகா சதீஷ் மிக அழகாக இருக்கிறார். இளமையாகவும் தெரிகிறார். முதல் பாதியில் மட்டுமே அவருடைய பயணம் இருக்கிறது. இரண்டாம் பாதியில் இல்லை என்றாலும் தான் இருக்கும் காட்சிகளில் ஒரு கவன ஈர்ப்பை செய்திருக்கிறார் தேவிகா சதீஷ்.
இந்திரஜித்தின் அப்பாவாக நடித்த வையாபுரி, அம்மாவாக நடித்த தாமரை செல்வி இருவரும் தங்களுடைய கதாபாத்திரத்திற்கேற்ப நடித்திருக்கிறார்கள். மேலும், பிர்லா போஸ், ஸ்ரீஜித் ரவி, சர்ஜின், மைதிலி, பினிஷ்பாபு, பிஜி மோகன், வர்கீஸ் ஸ்ரீநாத் போன்றவர்கள் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் தலையைக் காட்டி வசனத்தை ஒப்பவித்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள், கடலிலும் மீன் பிடிப் படகிலும் மட்டுமே நடப்பதால் அந்த இடத்தில் சின்ன விளக்குகளை வைத்து பெரும்பாலான கட்சிகளை படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் இயக்குநர் ஆனந்த் என்.நாயர்.
படகுக்குள் நடக்கும் சண்டை காட்சிகளை வேறு வேறு கோணத்தில் வகை வகையாக காட்டி, காட்சிகளை போர் அடிக்காமல் கொண்டு சென்று இருக்கிறார்.
இசையமைப்பாளர் ஜாசி கிப்ட்டின் இசையில் ரொம்பவும் சுமாரான பாடல்கள்தான் ஒலிக்கின்றன. பாடல் வரிகளும் கவனிக்கும் வகையில் இல்லை. பின்னணி இசையில் ரொம்பவே அடித்து தள்ளி இருக்கிறார். கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
கடலில் படகில் காட்டப்படும் காட்சிகளிலெல்லாம் நடிகர்கள் கொஞ்சம் ஆடிக் கொண்டே இருப்பதும், படகும் தள்ளாட்டத்திலேயே இருப்பதையும் கவனித்து செய்து இருக்கிறார்கள். அந்த வகையில் ரசூல் பூக்குட்டியின் ஒலி வடிவமைப்பு மிகவும் சிறப்பு.
அந்த சமுத்திரத்தின் ஒளியையும், ஒலியையும், அலைகள் ஆர்ப்பரிப்பதையும் கச்சிதமாக படத்தில் இணைத்து கொடுத்திருக்கிறார் இயக்குநர். ஆனால், இது கதைக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதுதான் உண்மை.
இடைவேளைக்கு பின்னால் படகில் நடக்கும் திரைக்கதை போர் அடிக்காதவகையில் தொகுக்க நினைத்து கொஞ்சம் தவறிவிட்டார் படத் தொகுப்பாளர்.
சரத்குமாரை இந்திரஜித் காப்பாற்றுகின்ற அந்தக் காட்சியில் இன்னும் கொஞ்சம் கவனத்துடன் எடிட் செய்திருந்தால் ஒரு விறுவிறுப்பு கிடைத்திருக்கும்.
இயக்குநர் மாதவ ராமதாசன் வித்தியாசமாக எடுக்க வேண்டும் என்று நினைத்துதான் இப்படி ஒரு கதையில் படமாக்கி இருக்கிறார். ஆனால் படம் போகப் போக ஒரே இடத்தில் நடப்பதால் பார்வையாளர்களுக்கு போர் அடிக்க வைத்துவிட்டது.
கடலை மையமாக வைக்காமல் இந்த காதலை முறிக்க தரையிலேயே சரத்குமார் பல சதி வேலைகளை செய்தார் என்பதாக கொண்டு சென்று இருந்தால் நிச்சயமாக இந்தப் படம் இதைவிடவும் அதிகமாக கவனத்தை ஈர்த்திருக்கும்.
படத்தில் இயக்குநர் கடைசியாக காட்டி இருக்கின்ற இரண்டு விஷயங்களினால் படம் நம்மை கவனிக்க வைத்திருக்கிறது.
இந்திரஜித் சரத்குமாரின் ரத்தத்தை எடுத்து அதில் “முகிலா.. அருள்..” என்ற தங்களுடைய காதலை வெளிப்படுத்தும்விதமாக எழுதி காட்டுவது அழகோ அழகு.
ஆனால், இந்த இடத்தில் நிச்சயமாக இயக்குநர் ஒரு வசனத்தை வைத்திருந்திருக்க வேண்டும். “உன் ரத்தத்தில் எழுதினாலும் இதே பெயர்தான். என் ரத்தத்தில் எழுதினாலும் இதே பெயர்தான். எங்கே வித்தியாசத்தை காட்டுங்க பார்ப்போம்..” என்று இரண்டு வரி வசனத்தை இதில் வைத்திருந்தால் முதல் வரிசை சினிமா ரசிகர்களுக்கு நிச்சயமாக இந்தப் படம் புரிந்திருக்கும்.
ஆனால் புரியாத மாதிரியே படத்தைக் கொண்டு சென்று கடைசியில் சரத்குமார் தன்னுடைய நெஞ்சு பகுதியில் அவருடைய மகளின் பெயரை பச்சை குத்தி இருப்பதை காட்டி “நானும் உன்னைவிட என் மகள் மீது அதிக பாசம் வைத்திருக்கிறேன்..” என்று சொல்லாமல் சொல்வதைப்போல இந்தக் காட்சியைப் படமாக்கி இருக்கிறார் இயக்குநர்.
இது நிச்சயமாக எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்று தெரியவில்லை. இதிலும் வசனத்தை சேர்த்து சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
காதல் திரைப்படங்களில் காதலனோ காதலியோ கடைசியாக பலியிடப்படுவது வாடிக்கை. அதில், இந்தப் படமும் தப்பவில்லை. இதில் சரத்குமார் இறந்து காதலர்கள் சேர்ந்திருந்தால் நிச்சயமாக பாராட்டலாம். ஆனால், காதலனை பலிகடாவாக்கி இயக்குநர் படத்தை முடித்திருப்பதால் நமக்கு எந்த ஒரு பீலிங்கும் வரவில்லை என்பதுதான் உண்மை.
நன்றி : tamilcinetalk

