திரை விமர்சனம்

 ‘29’  திரை விமர்சனம்!

புரிதல்.. இந்த மந்திரத்தை தெரிந்துகொள்ளும் காதல் ஒருபோதும் உடையாது உயிர்வாழும். அதனை புரியாத காதல், காயங்களை சந்திக்கும் என்ற ஒற்றை முடிச்சிற்கான திரைக்கதையே ‘29’.

சேலத்தை சேர்ந்த 29 வயது இளைஞனான விது, வேலைக்காக சென்னை வருகிறார். 29 வருட பயணத்தில் தனது அடையாளம் இன்னதென்று தெரியாமல் திக்கற்றவராக திணறும் நேரத்தில் அவரது வாழ்வின் அடையாளமாக வந்து சேர்கிறார் உடன் பணிபுரியும் ப்ரீத்தி அஸ்ராணி. இவர்களை காதலில் மூழ்கடித்த அந்த மழை நாள் போலவே அவர்களின் காதலும் கவிதையென தொடரும்போது அவர்களுக்கிடையேயான புரிதலை தொலைத்தபின் ஏற்படும் சம்பவங்களின் தொகுப்பே படத்தின் கதை.

 

இதுவும் ஒரு காதல் படம் என்று அத்தனை எளிதாக கடந்துவிட முடியாதபடி புதிய கோணத்தில் காதலை சொல்ல முயற்சித்திருப்பதற்காகவே எழுதி இயக்கியிருக்கும் ரத்னகுமாரை பாராட்டலாம்.

முதல் முறையாக காதலை சொல்லும் இடம், ”உனக்கு ஏன் என்னை பிடிச்சிருக்கு?..” என்று காதலர்கள் பரஸ்பரம் கேட்டுக்கொள்ளும் இடத்தில் வழக்கமான அல்லது போலித்தனமற்ற பதில்களால் காதலை இன்னும் இறுக்கமாக்கிக்கொள்வது, தனிமை பொழுதில் காதலுக்கும் காமத்துக்கும் இடையிலான உணர்ச்சிகளில் மூழ்கி ததும்புவது என படத்தின் பல காட்சிகள் அழகிய கவிதையாக கண்களுக்கும் மனதுக்கும் தீனி போடுகிறது.

தான் யாரென்ற தேடலில் குழப்பிக்கொள்ளும் கதாபாத்திரத்தில் நாயகன் விது சரியாக பொருத்திக்கொள்கிறார் நடிப்பை. காதலி மீதான அதீத அன்பு, அந்த அதீத அன்பே காதலுக்கு வில்லனாக நிற்கும்போது ஏற்படும் பதற்றம், ஏக்கம், சோகம் என சத்யாவாக வாழ்ந்திருக்கிறார். சில இடங்களில் நடிப்பில் கொஞ்சம் செயற்கைத்தனமும் எட்டி பார்ப்பது திருஷ்டி பொட்டு.

ஐஏஎஸ் கனவு ஒரு பக்கம்; காதலின் தவிப்பு மறுபக்கம் என மீண்டும் நடிப்பில் பேயென நடித்திருக்கிறார் ப்ரீத்தி அஸ்ராணி. முந்தையை படங்களை காட்டிலும் நடனம், க்ளாமர் இரண்டிலும் அடுத்த கட்டத்திற்கு தன்னை நகர்த்தி கிறங்கடிக்கிறார்.

நாயகனின் கல்லூரி வில்லனாக வரும் மாஸ்டர் மகேந்திரன் கல்யாண விருந்து காட்சியில் மட்டும் அடித்து ஆடியிருக்கிறார். ஒரு கட்டத்தில்  “போங்கடா புள்ளகுட்டிங்கள போயி படிக்க வைங்க” என்பதுபோல பொசுக்கென்று முடிவது அதிருப்தி.

விதுவின் அறை நண்பராக வருபவர், நாயகனின் அம்மாவாக வரும் ஆதிரா பாண்டியலட்சுமி, நாயகியின் அம்மாவாக சிந்து ஷியாம் உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பு.

முதிர்ச்சியான காதலை போலவே காட்சிகள் ஒவ்வொன்றையும் கவிதையென செதுக்கியிருக்கும் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு அற்புதம்.

ஷான் ரோல்டனின் இசையில் ‘பொல்லாத ஆசைகள்’ பாடல் பிரமாதம். இந்தப்பாடலில் வீணையின் நாதம் ஆஹா.. ஆஹா.. ரகம். பின்னணி இசையிலும் புதிய ஒலியமைப்புகள் காட்சிகளுக்கு வலுவூட்டியுள்ளது. ஆனாலும் மூக்கால் படுவதுபோல பாடும் ஷான், மூன்று பாடல்களை பாடி மற்ற பாடகர்களுக்கான வாய்ப்பை பறித்திருக்கிறார்.

OYO இல்லாத காலத்தில் என டைட்டில் கொடுத்துவிட்டு நிகழ்காலத்தை நினைவூட்டும் காட்சியமைப்புகள் என்ன லாஜிக்?.. OYO இல்லாத காலம் ஏன் அவசியம் என்றும் புரியவில்லை.

நீ

நான்

மழை

குடை…

கவிழ்த்துப் போடப்பட்ட

ரோஜாக்கள்..

பேருந்தும்

கிறுக்கல்களும்..

என ஒவ்வொரு அத்தியாயமாக திரைக்கதையை கோர்த்திருப்பது ரசனை. ஆனால் காதலும், காதலர்கள் சார்ந்ததுமான கதையின் போக்கில் ஏரி, குளம், ஆக்கிரமிப்பு, தூர்வாரல் என ஒருக்கட்டத்தில் வயலும் வாழ்வும் நோக்கி டிராக் மாறியது ,பெரிய மைனஸ். அந்தக் காட்சிகளே படத்தின் இழுவைக்கு சாட்சி.

இப்படி தேவையற்ற ஆணிகளை பிடுங்கியிருந்தால் இளைஞர்களின் மனதில் ‘29’ இன்னொரு காதல் கீதமாக பதிந்திருக்கும்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE