திரை விமர்சனம்

‘ஸ்பைடர்-மேன்’ பிராண்ட் நியூ டே : திரை விமர்சனம்!

மார்வெலுக்கு ஸ்பைடர்-மேன் என்றால் பொன்முட்டையிடும் வாத்து. டாம் ஹாலண்டுக்கு ஸ்பைடர்-மேன் என்றால் நிரந்தர வேலை. அந்தக் கூட்டணியின் ஏழாவது சந்திப்புதான் பிராண்ட் நியூ டே. ஆனால், பெயரில் மட்டும் ‘புதிய நாள்’. திரையில் ஓடுவது பெரும்பாலும் பழைய பாடம்தான்.

30 வயதை நெருங்கிய டாம் ஹாலண்ட், இன்னும் கல்லூரி ஃபிரஷர் போலவே தெரிகிறார். அது அவரது வெற்றி. ஆனால், பத்து வருடங்களாக அதே சிலந்தி வலையில் சுற்றிக்கொண்டிருக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்கு வயது தெரிந்துவிட்டது.

‘நோ வே ஹோம்’ முடிவில், நெட், எம்.ஜே. இருவரின் நினைவிலிருந்தும் தன்னை அழித்துவிடுகிறார் பீட்டர் பார்க்கர். அதன் பிறகு அவரது வாழ்க்கை? காலை எழுந்து குற்றவாளிகளை அடிப்பது… வீட்டுக்குத் திரும்பி புதிய கருவிகள் செய்வது… ஒரு விர்ச்சுவல் அசிஸ்டென்ட்டிடம் பேசுவது… எம்.ஜே.வின் சமூக வலைதளப் பதிவுகளைப் பார்த்து பெருமூச்சு விடுவது! உலகத்தைக் காப்பாற்றும் ஹீரோவாக இருந்தாலும், காதலில் தோற்ற இளைஞனின் தனிமையை படம் அழகாகப் பதிவு செய்கிறது.

மீண்டும் எம்.ஜே.வை சந்திக்கும் காட்சியில், அவள் வேறொருவருடன் இருப்பதைப் பார்த்து பீட்டரின் முகத்தில் தெரியும் ஏமாற்றம்… அந்த ஒரு காட்சிக்கே டாம் ஹாலண்டுக்கு தனியாக கைதட்டலாம். ஆனால், அதற்குப் பிறகு படம் சொல்வது, “உணர்ச்சிகள் போதும்… வாங்க சண்டைக்குப் போகலாம்!” என்பதுதான்.

அதன்பிறகு வழக்கமான மார்வெல் சமையல் தொடங்குகிறது. அரசாங்க அமைப்பு, உலகைக் காப்பாற்றும் பணி, உடலுக்கு உடல் தாவும் வில்லன், சிக்கலான அறிவியல் விளக்கங்கள்… இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, “நான் இதை ஏற்கெனவே எங்கோ பார்த்தேனே?” என்ற உணர்வு அடிக்கடி எட்டிப்பார்க்கிறது.

சேடி சிங்கின் கதாபாத்திரம், யார் உடலுக்குள் போனாலும் அதே மாதிரி நடந்துகொள்வதால், இரண்டு காட்சிகளுக்குப் பிறகு சஸ்பென்ஸ் எல்லாம் காற்றில் கரைந்துவிடுகிறது.

அதற்குள் ஹல்க் வருகிறார். டி.என்.ஏ., காமா கதிர்வீச்சு, எம்-ஆர்.என்.ஏ. என்று அறிவியல் பாடம் எடுக்கிறார். அவர் சொல்வதைப் புரிந்துகொள்ளும் முன்பே அடுத்த கட்டிடம் இடிந்து விழுகிறது. “ஹல்க் இல்லாமலேயே இந்தக் கதை ஓடியிருக்கும் போல?” என்ற கேள்வியும் எழுகிறது.

பிளாக் விடோவாக ஃப்ளாரன்ஸ் பியூ வருகிறார். உலகின் மிகப்பெரிய சைபர் ரகசியங்களை தெரிந்துகொண்டிருக்கிறார். ஆனால் அவற்றைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, திரைக்கதைக்கு தேவையான நேரத்தில் வந்து தேவையான வசனத்தைச் சொல்லிவிட்டுப் போகிறார். சூப்பர் ஹீரோக்களுக்குக்கூட ‘கெஸ்ட் அபியரன்ஸ்’ கலாச்சாரம் வந்துவிட்டது போல!

இயக்குநர் டெஸ்டின் டேனியல் கிரெட்டனின் திறமை ஆக்ஷன் காட்சிகளில் தெரிகிறது. கட்டிடங்கள் இடிகின்றன… கார்கள் பறக்கின்றன… ஹீரோ பத்து முறை தூக்கி வீசப்படுகிறார்… பதினொன்றாவது முறையும் எழுந்து நிற்கிறார். இந்த விஷயத்தில் மட்டும் மார்வெல் இன்னும் தனது தரத்தை விடவில்லை.

டாம் ஹாலண்ட் மட்டும் படத்தைத் தாங்க முயற்சிக்கிறார். காதலில் தோற்ற இளைஞன், தனிமையில் தவிக்கும் மனிதன், விஞ்ஞானி, சூப்பர் ஹீரோ என்று எல்லா முகங்களையும் அழகாக வெளிப்படுத்துகிறார். ஆனால், ஒரு நடிகரின் தோள்களில் மட்டும் ஒரு முழுப் படத்தையும் சுமத்திவிட முடியாதே!

இந்தப் படத்தின் மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால்… இது ஸ்பைடர்மேன் படம் என்பதையே சில நேரங்களில் மறந்துவிடுகிறது.

ஸ்பைடர்-மேன் என்றாலே குறும்பு, கலகலப்பு, நக்கல், எதிரிகளைப் பார்த்து ஜோக் அடித்துக்கொண்டே சண்டையிடும் அந்தத் துள்ளல். அதுதான் இந்தக் கதாபாத்திரத்தின் உயிர். ஆனால் இங்கே பீட்டர் பார்க்கர், உலகத்தின் கவலைகளையும் காதல் தோல்வியையும் ஒரே நேரத்தில் சுமக்கும் சீரியஸ் மனிதராக மாறிவிடுகிறார்.

அதனால், படம் பறக்க வேண்டிய இடத்தில்… வலையிலேயே சிக்கிக்கொள்கிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE