நகரச்செய்திகள்

போண்டா மணிக்கு திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் உதவி

தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் ஒவ்வொரு வருடமும் தீபாவளி திருநாளை முன்னிட்டு சிறப்பு மலர் வெளியிட்டு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கியும் விழா நடத்துவது வழக்கம். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால்  விழா நடத்த முடியாமல் இருந்த சூழ்நிலையில் இந்த வருடம் பிரசாத் லேபில் சிறப்பான விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக  பாடகி பத்மபூஷன் பி.சுசீலா, தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு, இயக்குனர் ஜெயம் ராஜா,  நடிகர் சதீஷ்,  பாடகர் வேல்முருகன், காமெடி நடிகர் ‘போண்டா’ மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ்விழாவை நடிகர் டேனி தொகுத்து வழங்கினார். விழாவின் முக்கிய அம்சமாக பாடகர்  வேல்முருகன்  குழுவினரின் இன்னிசை கச்சேரி நடந்தது.

தீபாவளி மலரை வெளியிட்டு  பி.சுசீலா பேசியதாவது :-

பத்திரிகையாளர்கள் தான் என்போன்ற கலைஞர்களுக்கு ஊக்கமாக இருந்துள்ளனர். என் தந்தை நான் பெரிய பாடகியாக வேண்டும் என ஆசைப்பட்டார். தெலுங்கிலிருந்து வந்த என்னை இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் என்னை பாடவைத்தார். நான் இதுவரை எழுபதாயிரம் பாடல்கள் பாடியுள்ளேன். எனக்கு மட்டுமல்ல கலைத்துறையினர் செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தியவர், இடையிடையே தனது பாடல்களை பாடி மகிழ்வித்தார்.

விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அவர்கள் பேசுகையில், “பத்திரிக்கையாளர்களின் தீபாவளி மலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அல்லவைகளை அகற்றி நல்லவைகளை மட்டும் எழுதும் பத்திரிக்கையாளர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்” என ரத்தின சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

இயக்குனர் ஜெயம் ராஜா பேசியதாவது:-
“என் சகோதரர் ஜெயம் ரவி யாரிடமும் அவ்வளவு ஆத்மார்த்தமாக நான் பேசிப் பார்த்ததே இல்லை. ஆனால் பத்திரிகையாளர்களிடம் ஒரு குடும்பமாக ஆத்மார்த்தமாக பேசுவதை பார்க்கும் பொழுது தான் உங்கள் மீது அவருக்கு எவ்வளவு மரியாதை இருக்கிறது என்பது தெரிகிறது.ரவிக்கு பதிலாக இன்று நான் வந்ததினால் தான் சுசிலா மேடம், தாணு சார் இவர்களுடன் மேடையை பகிர்ந்து கொள்ளும் பெருமை கிடைத்தது. பத்திரிகையாளர்களான நீங்கள் எங்கள் குடும்பத்தில் உறுப்பினர்களாகவே கிட்டத்தட்ட மாறி இருக்கிறீர்கள். உங்களின் விழாவில் கலந்து கொண்டதில் நான் பெருமைப்படுகிறேன். என் அப்பா அம்மாவிடம் ஒரு அங்கீகாரம் பெற வேண்டும் என வாழ்வின் குறிக்கோளாக நினைத்தவன். அவர்களுக்குப் பிறகு எனக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என நினைத்தது பத்திரிக்கையாளர்களான உங்களிடம் மட்டுமே. எங்களுடைய அத்தனை வளர்ச்சியிலும் உங்களின் பங்கு இருந்து வருவதை என்றைக்கும் மறக்க முடியாது. இந்த தீபாவளி இனிய தீபாவளியாக அனைவருக்கும் அமைய என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்”என்றார்.

நடிகர் சதீஷ் பேசுகையில், “மெரினா படம் வெளியானபோது ஒரு விமர்சனத்தில் படத்தின் மிகப்பெரிய ஆறுதல் காமெடி நடிகர் சதீஷ் என என் பெயரை குறிப்பிட்டு எழுதி இருந்தார் ஒரு பத்திரிகையாளர். அப்போது சிவகார்த்திகேயன் ‘எழுதியது யார் உன் நண்பனா’ எனக் கேட்டு கலாய்த்தார். அப்படி என்னுடைய ஒவ்வொரு படத்தின் போதும் என்னை அங்கீகரித்து வழிநடத்தி இந்த இடம் கிடைப்பதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் பத்திரிகையாளர்களான நீங்கள் மட்டுமே. அப்படிப்பட்ட உங்கள் விழாவில் கலந்து கொண்டது உங்களுக்கு பெருமை அல்ல எனக்குத்தான் பெருமை. அனைவருக்கும் என்னுடைய தீபாவளி வாழ்த்துக்கள்” என்றார்.

விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு சிறப்பு செய்து நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி மீண்டு வந்துள்ள நகைச்சுவை நடிகர் போண்டா மணிக்கு சங்கத்தின் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள்  வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE