திரை விமர்சனம்

அழகுக்குள் ஒளிந்திருக்கும் ஆபத்து: ‘இம்மார்ட்டல்’ விமர்சனம்!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு… ராட்சச உருவத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. அதைப் பார்த்து அதிர்ச்சியடையும் பிரசவம் பார்த்த மூதாட்டி, அந்தக் குழந்தையை அங்கிருந்து அப்புறப்படுத்தச் சொல்கிறார். வேறு வழியின்றி குழந்தையைத் தூக்கிச் செல்லும் தந்தை, தொலைதூரத்தில் அதை விட்டுவிட்டு வருகிறார்.

கட் பண்ணினால் 2026!

தனது மாமாவின் பிரிண்டிங் பிரஸில் வேலை பார்க்கும் ஜி.வி. பிரகாஷ், வாடகைக்கு வீடு தேடுகிறார். அப்போது கயாடு லோஹர், தனது வீட்டில் ரூம் ஷேரிங் இருப்பதாகவும், மாதம் ரூ.5,000 மட்டுமே வாடகை என்றும் சொல்கிறார். வாடகை குறைவு… கயாடுவின் அழகு அதிகம்! அதற்குப் பிறகு யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? ஜி.வி. அந்த வீட்டில் குடியேறிவிடுகிறார்.

முதல் சில நாட்கள் வாழ்க்கை ரொம்பவும் சந்தோஷமாகத்தான் செல்கிறது. ஆனால், வீட்டில் நடக்கும் சில விசித்திரமான சம்பவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஜி.வி.யின் சந்தேகத்தைத் தூண்டுகின்றன. தான் குடியேறியது சாதாரண வீடு இல்லை என்பதும், கயாடுவும் சாதாரணப் பெண் இல்லை என்பதும் தெரியவருகிறது.

பயந்துபோன ஜி.வி., ‘இந்த வீட்டை விட்டே ஓடிவிடலாம்’ என்று முடிவெடுக்கிறார். ஆனால் அங்கேதான் கதையே வேறு திசைக்குத் திரும்புகிறது. அந்த வீடு மட்டுமல்ல… அந்தப் பகுதியே கயாடுவின் கட்டுப்பாட்டில் இருப்பது தெரியவருகிறது!

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த அந்தக் குழந்தைக்கும் கயாடுவுக்கும் என்ன தொடர்பு? கயாடு யார்? இந்த அமானுஷ்ய உலகத்திலிருந்து ஜி.வி. தப்பித்தாரா? என்பதுதான் ‘இம்மார்ட்டல்’.

ஜி.வி. பிரகாஷுக்கு இது வித்தியாசமான முயற்சி. குறிப்பாக கயாடுவிடம் சிக்கிக்கொண்டு தப்பிக்கப் போராடும் காட்சிகளில் பயம், பதற்றம், குழப்பம் என இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். வழக்கமான ஹீரோ பிம்பத்தைத் தாண்டி, சூழ்நிலையின் பிடியில் சிக்கிய ஒரு சாதாரண மனிதனாக அவர் நடித்திருப்பது கவனிக்க வைக்கிறது.

ஆனால், படத்தின் மொத்த கவனத்தையும் தன் பக்கம் இழுத்துக்கொள்பவர் கயாடு லோஹர்! அழகான தோற்றத்துக்குள் ஆபத்தை ஒளித்து வைத்திருக்கும் கதாபாத்திரத்தை கயாடு சிறப்பாக உள்வாங்கியிருக்கிறார். கதை முழுவதும் இவரைச் சுற்றியே நகர்வதால், நடிப்பிலும் அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார். படத்தின் ஷோ ஸ்டீலர் இவர்தான்.

இயக்குநர் மாரியப்பன் சின்னா, பாண்டஸி கதையை சுவாரஸ்யமாகக் கடத்த முயன்றிருக்கிறார். குறிப்பாக முதல் பாதி நன்றாக வேலை செய்கிறது. ஒவ்வொரு காட்சியிலும் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி, பதற்றத்தைத் தக்கவைத்திருக்கிறார்.

இரண்டாம் பாதியில் பரபரப்பு இருந்தாலும், சில இடங்களில் கதை சொல்லும் விதத்தில் குழப்பங்கள் ஏற்படுகின்றன. பாண்டஸி கதையாக இருந்தாலும், அதன் உலகத்தையும் விதிகளையும் இன்னும் அழுத்தமாக நிறுவியிருந்தால் நம்பகத்தன்மை கூடியிருக்கும்.

தொழில்நுட்ப ரீதியாக சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலம். அமானுஷ்யக் காட்சிகளுக்கு இசை கூடுதல் பயத்தைத் தருகிறது. ஒளிப்பதிவும் படத்தின் இருண்ட மனநிலைக்கு கைகொடுக்கிறது.

ஆனால் மான்ஸ்டர் CG மட்டும் ஏமாற்றம். அது கிராபிக்ஸ் என்பது சில காட்சிகளில் அப்பட்டமாகத் தெரிகிறது. கதையின் முக்கியமான அம்சமே அதனுடன் தொடர்புடையதாக இருப்பதால், இன்னும் தரமான காட்சியமைப்பு இருந்திருக்க வேண்டியது அவசியம்.

மொத்தத்தில், ‘இம்மார்ட்டல்’ – கதை சொல்லலில் சில தடுமாற்றங்கள் இருந்தாலும், கயாடுவின் நடிப்பு, ஜி.வி.யின் புதிய முயற்சி, முதல் பாதையின் பதற்றம், சாம்.சி.எஸ்-ன் இசை ஆகியவற்றால் கவனம் ஈர்க்கும் பாண்டஸி ஹாரர்.

அழகு அழைக்கிறது என்று வீட்டுக்குள் போகலாம்… ஆனால் அந்த அழகுக்குப் பின்னால் ஆயிரம் வருட மர்மம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள்வது நல்லது!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE