திரை விமர்சனம்

சத்யவான் சாவித்திரி – திரை விமர்சனம்!

நீதிமன்றம், வழக்கு,  தீர்ப்பு என்ற கோர்ட் டிராமாவுக்குள் சுடச்சுட வாதங்களையும் திக்திக் தீர்ப்புகளையும் பார்த்து சலித்த தமிழ் சினிமாவில் ‘சத்யவான் சாவித்திரி’ என்ன சொல்லப்போகிறாள் என்ற ஆவலுடன் படம் பார்க்கத்தொடங்கினால்… நீதிமன்றத்தையே ஒரு திரில்லர் களமாக மாற்றி, அதற்குள் ஈகோ, பழிவாங்கும் எண்ணம், குடும்பப் பாசம், நகைச்சுவை எனப் பல சுவைகளைக் கலந்து பரபரப்பாகப் பயணிக்கிறது சத்யவான் சாவித்திரி.

கோயம்புத்தூரில் வசிக்கும் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த கீர்த்தி சுரேஷுக்கு, ஒரு சிறந்த வழக்கறிஞராக உயர வேண்டும் என்பதுதான் கனவு. அந்தக் கனவை நோக்கி அவர் பயணிக்கும் வேளையில், எதிர்பாராத விதமாக சென்னையைச் சேர்ந்த பிரபல ஐடி நிறுவன உரிமையாளரைத் திருமணம் செய்து கொள்கிறார். ஒருபுறம் இல்லற வாழ்க்கை, மறுபுறம் வழக்கறிஞர் தொழில் என இரண்டையும் சமாளிக்கும் அவர், புகழ்பெற்ற வழக்கறிஞர் மிஷ்கினிடம் உதவி வழக்கறிஞராகப் பணியில் சேர்கிறார்.

ஆரம்பத்தில் குரு – சிஷ்ய உறவாகத் தொடங்கும் இவர்களது பயணம், போகப்போக கருத்து மோதல்களிலும் நகைச்சுவை கலந்த உரையாடல்களிலும் சுவாரஸ்யமாகிறது. ஒரு வழக்கில் இருவருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடு, நீதிமன்றத்தில் நேருக்கு நேர் மோதும் சூழலை உருவாக்குகிறது. தனது மூத்த வழக்கறிஞரையே எதிர்த்து வாதாடும் கீர்த்தி சுரேஷ், அந்த வழக்கில் வெற்றியும் பெறுகிறார். 22 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தோல்வியைச் சந்திக்காத மிஷ்கினுக்கு, இந்தத் தோல்வி சாதாரணமானதாக இல்லை. இளம் வழக்கறிஞரிடம் தோற்ற அவமானம், அவரது அனுபவத்தைவிட ஈகோவுக்கே அதிக வலியைத் தருகிறது. அந்தத் தோல்வியை மனதில் வைத்துப் பழிவாங்கத் துடிக்கும் மிஷ்கினுக்கு, அடுத்ததாகக் கிடைக்கும் வழக்கு இன்னும் சுவாரஸ்யமான திருப்பத்தை ஏற்படுத்துகிறது.

கீர்த்தி சுரேஷின் கணவர் கொலை வழக்கில் சிக்க, அரசு தரப்பு வழக்கறிஞராக மிஷ்கினே களமிறங்குகிறார். ஏற்கெனவே ஏற்பட்ட தோல்வியின் கணக்கை இந்த வழக்கில் தீர்த்துவிட வேண்டும் என்ற முனைப்பில், கணவருக்குத் தண்டனை பெற்றுத் தருவேன் என சவால் விடுகிறார். இப்போது கீர்த்தி சுரேஷுக்கு இது வெறும் வழக்கு அல்ல… தனது கணவரைக் காப்பாற்ற வேண்டிய போராட்டம். அனுபவம், அதிகாரம், ஈகோ என அனைத்தையும் ஆயுதமாக்கும் மிஷ்கினுக்கு எதிராக, சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து நீதிமன்றத்தில் மீண்டும் களமிறங்குகிறார். இந்த முறை வெற்றி யாருடைய பக்கம்? பழிவாங்கும் எண்ணம் சட்டத்தின் முன் வெல்லுமா? கணவரைக் காப்பாற்ற கீர்த்தி சுரேஷ் நடத்தும் போராட்டம் எந்தப் புள்ளியில் முடிகிறது? என்பதற்கான பதில்தான் படத்தின் மீதிக்கதை.

கீர்த்தி சுரேஷ் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் இதுவரை பார்த்திராத ஒரு புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். நீதிமன்றத்தில் வாதாடும் காட்சிகளில் அவரது உடல்மொழி, வசன உச்சரிப்பு, தன்னம்பிக்கை என அனைத்தும் கதாபாத்திரத்திற்கு அழகாகப் பொருந்துகின்றன. மிஷ்கினுக்கு எதிராக நிற்கும் காட்சிகளில் நடிப்பில் தனி முத்திரை பதிக்கிறார். குறிப்பாக, உணர்ச்சிகளுக்கும் சட்டத்தின் நுணுக்கங்களுக்கும் இடையே அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, படத்தின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கிறது. இந்தப் படம் கீர்த்தி சுரேஷுக்கு ஒரு நல்ல கம்பேக் வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

மிஷ்கின் என்றாலே தனித்துவமான உடல்மொழியும், வித்தியாசமான அணுகுமுறையும் நினைவுக்கு வரும். அதற்கு ஏற்ற வகையில், அனுபவம் வாய்ந்த வழக்கறிஞராக கம்பீரத்தையும், தோல்வியால் துடிக்கும் ஈகோவையும், பழிவாங்கும் மனநிலையையும் கலந்து தனது நடிப்பில் அசத்துகிறார். கீர்த்தி சுரேஷுடன் அவர் மோதும் காட்சிகள் படத்தின் வேகத்தை அதிகரிக்கின்றன. இருவரும் மாறி மாறி நீதிமன்றத்தில் ஆதிக்கம் செலுத்தும் தருணங்கள் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமைகின்றன.

புதுமுகம் சாருகேஷும் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டு நம்பிக்கையான நடிப்பை வெளிப்படுத்துகிறார். கதையின் ஓட்டத்தில் தனது இருப்பை உணர்த்தும் வகையில் நடித்திருக்கிறார். கீர்த்தி சுரேஷின் உதவியாளராகவும் நண்பராகவும் வரும் பாலசரவணன், பரபரப்பான கதைக்குள் நகைச்சுவையைத் தூவி, ரசிகர்களை அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். அவரது இயல்பான டைமிங் படத்தின் கலகலப்புக்கு உதவுகிறது.

அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ். விஜய், முதல் படத்திலேயே நீதிமன்றப் பின்னணியில் வித்தியாசமான கதையைத் தேர்ந்தெடுத்து, அதை விறுவிறுப்பான திரைக்கதையாக மாற்றியிருக்கிறார். வழக்கமான கோர்ட் டிராமா பாணியில் காட்சிகளை நகர்த்தாமல், சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள், நகைச்சுவை, உணர்ச்சிகள் எனப் பல அம்சங்களை கலந்து கொடுத்திருப்பது பாராட்டுக்குரியது. குறிப்பாக, நீதிமன்ற மோதல்களை அமைத்திருக்கும் விதமும், கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும் வசனங்களும் படத்தின் சுவாரஸ்யத்தைத் தக்கவைக்கின்றன. முதல் படத்திலேயே ரசிகர்களை ஈர்க்கும் வகையில் ஒரு வித்தியாசமான முயற்சியை எடுத்திருக்கிறார்.

சாம் சி.எஸ். இசையும் பின்னணி இசையும் படத்தின் பரபரப்புக்கு பக்கபலமாக நிற்கின்றன. நீதிமன்றக் காட்சிகளிலும் திரில்லர் தருணங்களிலும் இசை காட்சிகளின் தீவிரத்தை அதிகரிக்கிறது. ஒளிப்பதிவும் கதையின் தன்மைக்கு ஏற்ற வகையில் அமைந்து, நீதிமன்ற மோதல்களுக்கும் உணர்ச்சிகரமான தருணங்களுக்கும் தேவையான அழுத்தத்தைத் தருகிறது. மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள்.

ஒரு வழக்கறிஞரின் ஈகோவும், இன்னொரு வழக்கறிஞரின் தன்னம்பிக்கையும் நீதிமன்றத்தில் மோதும்போது, அது வெறும் சட்டப் போராட்டமாக மட்டும் இல்லாமல், தனிப்பட்ட உணர்வுகளின் யுத்தமாகவும் மாறுகிறது. அதற்குள் குடும்பப் பாசம், நகைச்சுவை, சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள் என அனைத்தையும் கலந்து, வழக்கமான கோர்ட் டிராமாவிலிருந்து விலகி ஒரு திரில்லர் அனுபவத்தைத் தருகிறது சத்யவான் சாவித்திரி. நல்ல கதைக்களம், கீர்த்தி சுரேஷ் – மிஷ்கின் நடிப்புப் போட்டி, விறுவிறுப்பான திரைக்கதை என நீதிமன்றத்தில் தீர்ப்பு மட்டுமல்ல, திரையரங்கில் ரசிகர்களுக்கும் ஒரு சுவாரஸ்யமான தீர்ப்பு வழங்கும் படம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE