திரை விமர்சனம்

‘ஜெடூசி’ திரை விமர்சனம்!

திருவண்ணாமலை மலைப்பகுதிகளில் அடுத்தடுத்து அரங்கேறும் ஏழு மர்மக் கொலைகள்… காணாமல் போகும் சிலர்… ஒரே பாணியில் தொடரும் கொலைகளால் பதற்றமடையும் மக்கள்… குற்றவாளியைத் தேடி அலையும் காவல்துறை! இப்படியொரு பரபரப்பான தொடக்கத்துடன் களமிறங்குகிறது ‘ஜெடூசி’.

டி.எஸ்.பி விக்ரமாக வரும் அருவி மதன் தலைமையிலான காவல்துறையின் விசாரணை, ஒரு பைக் திருடனிடம் கிடைக்கும் துப்பு வழியாக எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சிசிடிவி பணியாளரான சக்தி (ஸ்ரீதர்) பக்கம் திரும்புகிறது. கைது செய்யப்படும் சக்தி யார்? மலைக்கிராமத்துப் பெண்கள் கொண்டையில் அணியும் ‘ஜெடூசி’ என்ற கொண்டை ஊசிக்கும், தொடர் கொலைகளுக்கும் என்ன தொடர்பு? என்ற கேள்விகளுடன் முதல் பாதி விறுவிறுப்பாக நகர்கிறது.

 

சக்தியின் பின்னணியும், காவேரி (ஸ்வேதா) உள்ளிட்ட பெண்களின் வாழ்வில் நிகழ்ந்த அநீதிகளும் இரண்டாம் பாதியில் விரிகின்றன. அதிகாரத்தின் ஆணவமும், பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் ஒரு இளைஞனின் மனதில் எத்தகைய பழிவாங்கும் நெருப்பை உருவாக்குகின்றன என்பதை உணர்வுப்பூர்வமாகச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் நட்ராஜ் ஏகாம்பரம்.

சக்தியாக வரும் ஸ்ரீதர் அமைதியான இளைஞன், ஆவேசமான பழிவாங்குபவன் என இரு பரிமாணங்களிலும் கவனம் ஈர்க்கிறார். குறிப்பாக நீதிமன்றக் காட்சியில் அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். காவேரியாக வரும் ஸ்வேதா, வெகுளித்தனமும் வலியும் கலந்த நடிப்பால் மனதில் நிற்கிறார். அருவி மதனின் காவல்துறை அதிகாரி தோற்றம், ஏ. வெங்கடேஷின் வில்லத்தனம், பிளாக் பாண்டியின் இயல்பான நகைச்சுவை ஆகியவை படத்துக்குப் பலம் சேர்க்கின்றன.

விக்னேஸ்வரனின் பின்னணி இசை மர்மத்துக்கும் உணர்வுகளுக்கும் துணை நிற்கிறது. நாக அர்ஜுனின் ஒளிப்பதிவு மலைப்பகுதியின் அழகையும் மர்மச் சூழலையும் நேர்த்தியாகப் பதிவு செய்கிறது. முதல் பாதியின் வேகத்துக்கு இரண்டாம் பாதியின் பின்கதைக் காட்சிகள் ஈடுகொடுக்கவில்லை. பழிவாங்கும் கதையும் நீதிமன்றத்தில் ஒலிக்கும் சமூகநீதிக் கருத்துகளும் ஏற்கெனவே பார்த்த சினிமா அனுபவத்தை நினைவுபடுத்துகின்றன.

பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகக் கோபத்தைக் கொப்பளிக்கும் ஒரு பழிவாங்கும் திரில்லர் ‘ஜெடூசி’. மர்மக் கொலைகளுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் வலியும், ஒரு கொண்டை ஊசி சுமந்து வரும் நீதிக்கான குரலும் படத்தின் மையம். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் புதுமையும் வேகமும் இருந்திருந்தால், இந்தக் கொண்டை ஊசி இன்னும் ஆழமாகக் குத்தியிருக்கும்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE