திரை விமர்சனம்

சிட்டுக்குறிஞ்சி – விமர்சனம்!

1983-ல் சந்தித்த மனிதர்களும், இடங்களும் 2025-ல் முற்றிலும் வேறொரு அடையாளத்தில் இருப்பதாகத் தோன்றினால், அதை நம்புவது எப்படி? இப்படியொரு சுவாரஸ்யமான மர்ம முடிச்சை காதல், குற்ற உணர்வு, சமூகப் பிரச்சினை ஆகியவற்றோடு இணைத்து சொல்லும் படம்தான் ‘சிட்டுக்குறிஞ்சி’.

கொடைக்கானல் கிராமத்தில் தான் சந்தித்த மனிதர்களையும், இடங்களையும் மீண்டும் சந்திக்கும்போது அவர்கள் யாருமே தன்னை அடையாளம் காணாததால் குழப்பத்தில் சிக்கிக்கொள்ளும் ரஜித் மேனனின் பயணத்தில், சஸ்பென்ஸும் திருப்பங்களும் சுவாரஸ்யமாக இணைகின்றன. இரண்டு காலகட்டங்களையும் இணைக்கும் திரைக்கதையில், இயக்குநர் வி.ஜெ.மீனாட்சி சுந்தரம் மிக முக்கியமான சமூகப் பிரச்சினையை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். அதேநேரம், அதை பிரசாரமாக்காமல் திரில்லர் பாணியில் சொல்லியிருப்பது சிறப்பு.

மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பும், இயல்பான தயக்கமும், குழப்பமும் நிறைந்த நடிப்பால் ரஜித் மேனன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கிறார். நக்‌ஷா சரண் எளிமையான தோற்றத்திலும் வசீகரமான நடிப்பிலும் கவனம் ஈர்க்கிறார். தீப்ஷிகாவும் இரட்டை பரிமாணங்களைக் கொண்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்ற நடிகர்களும் கதைக்கு வலு சேர்க்கிறார்கள்.

1983-ன் பழமைக்கும் 2025-ன் நவீனத்துவத்துக்கும் இடையிலான வேறுபாட்டை ஒளிப்பதிவு, வண்ணக் கலவை, கலை இயக்கம் ஆகியவை அழகாகப் பதிவு செய்கின்றன. மாறாவின் இசையும் பின்னணி இசையும் மலைக்கிராமத்தின் இயற்கைச் சூழலுக்கும் மர்ம உணர்வுக்கும் துணை நிற்கின்றன. படத்தொகுப்பும் கதையின் சுவாரஸ்யத்தைத் தொய்வின்றி நகர்த்துகிறது.

காதல், மர்மம், சமூக விழிப்புணர்வு என மூன்றையும் அளவோடு கலந்து, அதிகம் பரிச்சயமில்லாத நடிகர்களைக் கொண்டே சுவாரஸ்யமான திரை அனுபவத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். சில குறைகள் இருந்தாலும், திரைக்கதையின் புதுமையும் சொல்ல வந்த கருத்தும் ‘சிட்டுக்குறிஞ்சியை’ கவனிக்க வைக்கின்றன!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE