மல்லிகா ஷெராவத் ராணியாக மிரட்டும் ‘பாம்பாட்டம்’
வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தயாரிப்பில் பிரம்மாண்ட படைப்பாக உருவாகியிருக்கும் படம் ‘பாம்பாட்டம்’. ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘பொட்டு’, ‘சவுகார் பேட்டை’ உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்கி வரும் இப்படத்தில் ஜீவன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
வரலாற்று பின்னணி கொண்ட ஒரு சாம்ராஜ்யத்தின் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் ராணியாக முக்கியமான கதாபாத்திரத்தில் மல்லிகா ஷெராவத் நடித்துள்ளார். மேலும் ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய்பிரியா, சுமன், கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலா, பருத்திவீரன் சரவணன், ரமேஷ் கண்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். இனியன் ஜே ஹாரீஸ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரிஷ் இசையமைக்கிறார்.
தமிழ் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் ‘பாம்பாட்டம்’ படம் குறித்து இயக்குனர் வி.சி.வடிவுடையான் கூறியதாவது:-
“ ‘பாம்பாட்டம்’ ஒரு சாம்ராஜ்யத்தின் கதை. அந்த சாம்ராஜ்யத்தின் ராணியாக ரசிகர்களை நடிப்பால் கவர்ந்திழுக்கப்போகிறார் மல்லிகா ஷெராவத். கவர்ச்சி புயலான அவர் இந்த படத்தில் ராணி, இளவரசி என 2 வேடங்களில் நடித்துள்ளார். அவரது நடிப்பு இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம். ‘தசாவதாரம்’ படத்துக்கு பிறகு ‘ஒஸ்தி’ படத்தில் குத்தாட்டம் போட்ட அவரை மீண்டும் திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தோற்றம், நடிப்பு என இதில் மாறுபட்ட ஜீவனை பார்க்கலாம். மற்ற கதாபாத்திரங்களும் திறம்பட நடித்துள்ளனர். குறிப்பாக படத்தில் 120 அடி நீள ராட்சத பாம்பு செய்யும் அட்டகாசம் படம் பார்ப்போரை மிரட்டும். இந்திய சினிமாவில் இதுவரை இதுபோன்ற பாம்பு காட்சி இடம்பெறவில்லை என்று உறுதியாக சொல்லலாம். அந்தளவு கிராபிக்ஸ் காட்சிகளை பிரமாண்டமாக வடிவமைத்துள்ளோம்.
மும்பையில் பல கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்கினோம். மல்லிகா ஷெராவத் நடிக்கும் காட்சிகளும், 1,000 குதிரைகள் கொண்டு எதிர் படைகளை வீழ்த்தி தப்பிக்கும் காட்சிகளும் மிக பிரமாண்டமாக வந்துள்ளது. இந்த காட்சிகள் திரையில் பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருக்கும். ஹாலிவுட் தரத்தில் பான் இந்தியா படமாக உருவாகிவரும் ‘பாம்பாட்டம்,’ நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த படைப்பாக பேசப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன” என்றார்.