சொத்து வரியை உயர்த்த மத்திய அரசு சொல்லவில்லை…திரும்ப பெறுங்கள் – எடப்பாடி பழனிச்சாமி
சொத்து வரி உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என்பதால் சொத்துவரியை திரும்பப் பெற வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். சொத்துவரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்வு குறித்து சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தது. அதன்படி, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி , சொத்துவரி தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அவர் பேசுகையில், சொத்து வரி மக்கள் மீது பெரும் சுமையை சுமத்தியுள்ளது. மத்திய அரசு சொத்துவரியை உயர்த்த எந்த அறிவிப்புகள் செய்யவில்லை என்றும் தமிழக அரசு உயர்த்திய சொத்து வரியை திரும்ப பெறவேண்டும் எனவும் கூறினார். இந்நிலையில், அதிமுக சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தது. இதேபோல சொத்து வரி உயர்வை கண்டித்து பாஜகவும் வெளிநடப்பு செய்தது.
சட்டசபையில் இருந்து வெளியே வந்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், ஏற்கனவே கொரோனாவால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சொத்து வரி உயர்வு மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். எனவே, சொத்துவரியை திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறினார்.
சொத்துவரியை கண்டிப்பாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு எந்த இடத்திலும் சொல்லவில்லை. வாடகை வீட்டில் வசிப்போரும் சொத்துவரி உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு தி.மு.க.வின் தேர்தல் பரிசே, சொத்துவரி உயர்வு என்று கூறினார். இதனையடுத்து அதிமுகவினர், தமிழக அரசு சொத்து வரியை திரும்பப் பெற வேண்டும் என முழக்கமிட்டனர்.