பாஸ் ஆனாரா பாரதிராஜாவின் மகன் : ‘மார்கழி திங்கள்’-விமர்சனம்
நூற்றாண்டுகளை கடந்துகொண்டிருந்தாலும் தொழி நுட்பங்களில் வளர்ந்துகொண்டிருந்தாலும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற சாதிய மனோபாவம் மட்டும் இன்னும் மடிந்தபாடில்லை.
கிராமங்களில் அங்குமிங்குமாக அரங்கேறிக்கொண்டிருக்கும் ஆணவக்கொலையும் ஆதிக்க வெறியும்தான் ‘மார்கழி திங்கள்’ படத்தின் மையக்கரு. இயக்குனர் இமயத்தின் புதல்வரான மனோஜ் பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்தப்படம் எப்படி இருக்கு?…
திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமம். அப்பன் ஆத்தா இல்லாத நாயகி ரக்ஷனா, தாத்தா பாரதிராஜாவின் அன்பிலும் அரவணைப்பிலும் வளர்கிறார். பத்தாம் வகுப்பு படிக்கும் ரக்ஷனா, உடன் படிக்கும் ஷ்யாம் செல்வத்தைவிட அதிக மதிப்பெண் எடுக்க போட்டி போடுகிறார். அதுவே மோதலாகி பிறகு காதலாக மலர்கிறது.
ஆனால் ஆதிக்க வெறி பிடித்த ரக்ஷனாவின் தாய்மாமன் சுசீந்திரன் ரக்ஷனா கட்டிய காதல் கோட்டையை தகர்க்க நினைக்கிறார். பேத்தி மேல் உயிரையே வைத்திருந்தாலும் சாதி என்று வரும்போது தாத்தா பாரதிராஜாவின் மனசிலும் சைத்தான் சடுகுடு ஆட்டம் போடுகிறது. சாதி வளையத்தை தாண்டி ரக்ஷனா – ஷ்யாம் செல்வத்தின் காதல் வெல்கிறதா வீழ்கிறதா என்பதற்கு விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.
புதுமுகம் ரக்ஷனாவின் நடிப்பில் அத்தனை நேர்த்தி, காதலில் மூழ்கி திளைப்பது, காதலனை காணாமல் தவிப்பது, தாத்தா மற்றும் தாய்மாமனின் சூழ்ச்சி புரிந்து கொதிப்பது என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார்.
நாயகன் ஷ்யாமுக்கு நடிப்பில் போதிய பக்குவம் இல்லை. ஒருசில இடங்களில் மட்டும் தேறுகிறார். பேத்தி மீது பாசம் காட்டுவதும் பிறகு சாதி வெறியில் காதலுக்கு எதிராக மோசம் செய்வதுமாக பாரதிராஜா பிரமாதப்படுத்துகிறார். நடிகராக களமிறங்கி இருக்கும் இயக்குனர் சுசீந்திரன் வில்லத்தனத்தில் பார்டரில் பாஸாகிறார்.
வஞ்சிநாதன் முருகேஷனின் ஒளிப்பதிவு ஓஹோன்னு சொல்ல முடியவில்லை என்றாலும் ஓகே ரகம்தான். இளையராஜாவின் இசையில் பா ‘டல்’கள் ஈர்க்கவில்லை. பின்னணி இசையும் முந்தைய படங்களை நினைவூட்டுவதாக இருக்கிறது.
கடைசி இருபது நிமிட காட்சியில் இயக்குனர் இமயத்தின் வாரிசு என்பதை நிருபித்திருக்கும் மனோஜ் பாரதிராஜாவுக்கு வாழ்த்துகள். அடுத்தடுத்த படங்களில் புதிய கதை, புதிய களம் என்று புதிய ஏரியாவில் டிராவல் செய்தால் மட்டுமே நீடிக்க முடியும். எனவே அரைத்த மாவை அரைத்தது இந்தப்படமே உங்களுக்கு கடைசி படமாகவும் பாடமாகவும் அமையட்டும்.
‘மார்கழி திங்கள்’ மனதை தொட முயன்றுள்ளது.