திரை விமர்சனம்

சிக்சர் அடித்த ‘ப்ளூ ஸ்டார்’ – திரை விமர்சனம்

விளையாட்டில்  பேயென பிடித்து உலுக்கிக்கொண்டிருக்கும் சாதி அரசியலை தோலுரித்து சமத்துவம் பேசும் இன்னொரு படைப்பு ‘ப்ளு ஸ்டார்’.

அரோக்கோணம் அருகே உள்ள சிற்றூரில் அசோக் செல்வன் தலையில் ஒரு கிரிக்கெட் அணியும் சாந்தனு தலைமையில் இன்னொரு கிரிக்கெட் அணியும் விளையாடி வருகின்றனர். அவர்களுக்கு இடையேயான போட்டி, நீண்டகால பாகுபாடு என வெவ்வேறு தடத்தில் அடிக்கடி மோதிக்கொள்கின்றனர். நீ பெரியவனா நான் பெரியவனா என முஷ்டி மடக்கிக்கொண்டிருக்கும் நிலையில் இரு அணிக்கும் பொது எதிரியாக வந்து நிற்கிறது க்ளப்பிற்காக விளையாடும் கிரிக்கெட் அணி.

க்ளப் அணியினரும் அந்த அணியின் பயிற்சியாளரும் அசோக் செல்வன் மற்றும் சாந்தனு அணியினரை அவமானபடுத்தி கீழ்த்தரமாக நடத்த, அந்த அணியை எதிர்த்து நின்று ஜெயிக்க இரு அணியினரும் ஒன்று சேர்கின்றனர். க்ளப் நடத்தும் டோர்னமெண்டில் ப்ளூ ஸ்டார் அணி கலந்துகொண்டு பயிற்சியும் பலமும் வாய்ந்த அணிகளுடன் போட்டி போடுகின்றனர். பல சூழ்ச்சி, வஞ்சங்களை தாண்டி ப்ளூ ஸ்டார் அணி வெற்றி கனியை பறிப்பதே கதை.

கதை, களம், கதாபாத்திரங்களில் எதார்த்தம் மிசகாத நேர்த்தியுடன் படத்தை இயக்கியிருக்கும் ஜெயக்குமாருக்கு இது முதல் படம் என்றால் நம்ப முடியவில்லை. பா.ரஞ்சித்தின் உதவி இயக்குனரான ஜெயக்குமாரிடமும் குருவின் சாயல் இருக்கிறது.

விளையாட்டில் இருக்கும் அரசியல், உள்ளூரில் இருக்கும் சாதி பாகுபாடு அனைத்தையும் தொட்டு திரைக்கதையை அழுத்தமாக எழுதி சபாஷ் போட வைத்திருக்கிறார். வசனத்தில் அவ்வப்போது சமுதாயத்திற்கு எதிரான கோபம் எட்டிப்பார்ப்பது நியாயமே.

ப்ளு ஸ்டார் அணியின் கேப்டனாக அசோக் செல்வன் வாழ்ந்திருக்கிறார். மீசை இல்லாத முகத்தில் அவ்வப்போது கொப்பளிக்கும் கோபம் அற்புத உணர்வு. கீர்த்தியுடன் காதலாவதும் அவருடன் இணைய முடியாத சந்தர்ப்பத்தில் தவிப்பது, அடக்குமுறை திமிருக்கு எதிராக ஜல்லிக்கட்டு காளையென துள்ளிக்குதிப்பது என படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார் அசோக் செல்வன்.

எதிரணி கேப்டன் கதாபாத்திரத்தில் சாந்தனுவும் அதகளம் செய்திருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சாந்தனுவின் நடிப்பாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு. அதை வீணடிக்காமல் அடித்து ஆடி ரசிகர்களின் இதயம் தொடுகிறார்.

அசோக் செல்வனின் காதலியாக கீர்த்தி அற்புதமான நடிப்பை தந்திருக்கிறார். அசோக் செல்வனிடம் கிரிக்கெட் பற்றிய தனது அறிவை, தெளிவை வெளிப்படுத்தும் காட்சிகள் ஆஹா.. அசோக் செல்வன் துவண்ட நேரங்களில் நம்பிக்கை வார்த்தைகளை சொல்லி தெம்பூட்டும் காட்சிகள் டச்சிங். உண்மையிலேயே அரோக்கோணம் மாணவி போலவே அத்தனை எளிமை. பாராட்டுகள் கீர்த்தி.

அசோக் செல்வனின் தம்பியாக ப்ருத்வி அட்டகாசம். காதலும் அவர் சொல்லும் கவிதைகளும் ஆஹா ரசனை. தந்தை கதாபாத்திரத்தில் குமரவேல், ப்ளு ஸ்டார் அணியை வழி நடத்தும் பக்ஸ், மேற்கிந்திய தீவு அணிக்கு விளையாட போவதாக சொல்லும் கிரிக்கெட் வீரர் என பல கதாபாத்திரங்கள் நடிக்காமல் நடித்து பாராட்டை பெறுகின்றனர்.

அரோக்கோணத்தின் நிறத்தை தனது ஒளிப்பதிவால் அள்ளி வந்து கண்முன் நிறுத்தும் ஒளிப்பதிவாளர் தமிழ் அ. அழகனுக்கு வாழ்த்துகள். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்துக்கு பெரிய பலம்.

விளையாட்டை மையமாக கொண்ட கதைதான் என்றாலும் அதில் இருக்கும் உள் அரசியலை இன்னொருமுறை வெளிச்சம் போட்டு காட்டியிருப்பதற்காக இயக்குனருக்கு வாழ்த்து பூங்கொத்து!

‘ப்ளூ ஸ்டார்’ சிக்சர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE