திரை விமர்சனம்

‘ரெபல்’ திரை விமர்சனம்

மூணாறு தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் வாழ்வியலில் இன்றும்கூட துயரம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சுதந்திர இந்தியாவுக்கு முன்னதான கூலிக்கு கொத்தடிமைகளாக வாழும் வாழ்க்கை இப்போதும் முற்றுபெறவில்லை. அப்படியானவர்களின் அடுத்த தலைமுறையின் விடியலை சொல்லும் கதையே  ‘ரெபல்’.

உண்மை சம்பவமே கதை என்று சொல்லப்பட்டாலும் உண்மைக்கு நெருக்கமான காட்சியமைப்புகள் மிக சொற்பமாகவே சொல்லப்பட்டு திரைக்கதையின் வடிவம் படம் பார்ப்பவர்களை குழப்பி வைக்கிறது.

80 களின் காலக்கட்டத்தில் கதை தொடங்குகிறது. மூணார் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மகன்கள் உயர் கல்விக்காக பாலக்காடு கல்லூரியில் சேர்கிறார்கள். போன இடத்தில் மலையாள மாணவர்களால் ராக்கிங் கொடுமைக்கு  ஆளாகிறார்கள். அடிமேல் அடி வாங்கி படிக்க முடியாத சூழல் உருவாகும்போது கிளர்ச்சியில் குதிக்கும் தமிழ் மாணவர்களின் கனவு நனவாகிறதா இல்லையா என்பதை இழுத்தடித்து ஒருவழியாக மொட்டையாக முடிகிறது க்ளைமாக்ஸ்.

உலகத்திலேயே இப்படியொரு கல்லூரி இருக்குமா என்று அஞ்சுமளவுக்கு கொடூர கொலைகளமாக காட்டப்படும் கல்லூரியில் மலையாளிகளை கொலையாளிகளாக சித்தரிப்பது அநியாய இன வெறி. தமிழ் மாணவர்களுக்கான நியாயத்திற்காக போராடும் மாணவராக ஜீ.வி.பிரகாஷின் ஹீரோயிசம் உச்சக்கட்ட கொடுமை.

ஒரு கல்லூரி தேர்தலை கட்சி, கொடி என்று வீர வசனங்களை முழங்கி எதார்த்தத்தின் சுவடே இல்லாமல் கசாப்பு கடையாக காட்சிப்படுத்துவது காலக்கொடுமை. நாயகி மமிதா, மற்றொரு மலையாள மாணவர் மட்டும் திருந்துவது போன்ற காட்சிகள் படு செயற்கை. உரிமைக்கு போராடும் நாயகனுக்கு  மாசக்கணக்கில் முடிவெட்டாமல், சவரம் செய்யாத தோற்றம் ஏனப்பா?…

ஜீ.வியின் பின்னணி இசை எரிச்சல். ஒளிப்பதிவாளர் மட்டும் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். அட போங்கப்பா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE