‘பன் பட்டர் ஜாம்’ விமர்சனம்
காதல் கான்செப்ட்டை கற்கண்டு காமெடியில் நனைத்து எடுத்தால் ‘பன் பட்டர் ஜாம்’ ரெடி’.
நாயகன் ராஜுவின் (பிக்பாஸ் புகழ்) அம்மா சரண்யா பொன்வண்ணன், நாயகி ஆதியாவின் அம்மா தேவதர்ஷினி இருவருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் தங்கள் பிள்ளைகள், பெரியவர்களாகும்போது அவர்களுக்கு ‘அரேஞ்ச்டு லவ் மேரேஜ்’ செய்துவைக்க வேண்டும் என்பது லட்சியமாகவே இருக்கிறது.
இருவரும் கல்லூரி பருவத்தை எட்டுகிறார்கள். ராஜுவுக்கு பாவ்யாவுடன் காதலாகிறது. ஆதியாவுக்கு வேறொரு பையனுடன் காதலாகிறது. இரண்டுக்கும் இடையில் ராஜுவின் உயிர் நண்பனான மைக்கேல் பாவ்யாவை ஒருதலையாக காதலிக்கிறார். சரண்யா பொன்வண்ணன் – தேவதர்ஷினியன் திட்டம், ராஜு – மதுமிதாவின் காதல் கைகூடுகிறதா கலைந்து போகிறதா என்பதற்கு விடை சொல்கிறது ‘பன் பட்டர் ஜாம்’.
நகைச்சுவைக்கான உடல் மொழி, ஆங்காங்கே போடும் ஒன்லைனர்கள், எமோஷனல் காட்சிகளில் அழுத்தம் என நாயகனாக நல்ல அறிமுகம் தந்திருக்கிறார் ராஜு ஜெயமோகன். இருப்பினும் ஆங்காங்கே எட்டிப்பார்க்கும் செயற்கைத்தனங்களை இன்னும் குறைக்க வேண்டும். இன்ஃப்ளூயன்ஸராக வரும் பாவ்யா நடிப்பு எந்த இன்ஃப்ளூயன்ஸையும் ஏற்படுத்தவில்லை.
துணை நாயகர்களாக வரும் பப்பு, மைக்கேல் இருவரின் கதாபாத்திர வளைவுகளும் முழுமையில்லாமல் இருப்பது படத்தின் பெரிய மைனஸ்! இருவரும் நடிப்பில் பாஸ் மார்க் வாங்கப் போராடுகிறார்கள். அனுபவ நடிகர்களான சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி ஓவர் ஆக்டிங்.
சார்லி சிகரெட்டைப் பிடித்துக்கொண்டு ஓரமாக உட்கார்ந்திருக்கிறார், அவ்வளவே! கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் மகனுக்கு அவர் சொல்லும் ‘சிகரெட்’ அறிவுரைகள் எல்லாம் நம் கையையே சுடுகின்றன. கேமியோ அட்டென்டன்ஸ் போடும் விக்ராந்துக்கு பில்டப் கொஞ்சம் ஓவர்டோஸ்!
வண்ணமயமான ஒளியமைப்பு, மழைக் காட்சிகள் ஆகியவற்றைப் படம்பிடித்த விதத்தில் ஒளிப்பதிவாளர் பாபுகுமார் படத்தின் தரத்தைக் கூட்டியிருக்கிறார். இருப்பினும் கல்யாண வீடு என்கிற பரந்த இடத்தில் ஆரம்பிக்கும் முதல் படத்தில் எக்கச்சக்க ஃபில்லர்களைக் கத்தரிக்காமல் அப்படியே விட்டிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜான் ஆபிரஹாம்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையில் “கண்ணே என் காதல் சிறகே” பாடல் சித் ஸ்ரீராம் குரல் வழி செவியில் ஜாம் தடவுகிறது. பின்னணி இசையும் மீட்டருக்குப் பொருந்திப் போகிறது.
வார்த்தைகளில் மட்டுமே ‘ட்ரெண்டிங்’ வைத்துக்கொண்டு, அதே பழைய காதல் கதையைத்தான் படம் முழுக்க அரைத்திருக்கிறார்கள். படத்தின் தலைப்பைப் போட்டு ஆரம்பிக்கும் இடத்திலேயே, இப்படி ஒரு ‘பன் பட்டர் ஜாம்’ கடையைப் பார்த்ததே இல்லையே என்கிற பிளாஸ்டிக் தன்மை ஒட்டிக்கொள்கிறது. நாயகின், நாயகி வீடு அப்பட்ட செயற்கை.
டிஷ்யூ பேப்பரை வைத்து வரும் ‘ஏ’ காமெடிகள் எல்லாம் ஓவர்.. ஓவர்.
”நீங்கள்ளாம் யாருடா?.. புடிச்சா கல்யாணம் பண்றீங்க.. நினைச்சா டைவர்ஸ் பண்றீங்க..” என்ற இடத்திலும் காதல் தோல்வியில் உடைந்து போகாமல் அதனை நேர்மறை சிந்தனையுடன் அனுகும் இடங்களிலும் பக்குவ இயக்கத்திலும் பன்பட்ட வசனத்திலும் கவனம் ஈர்க்கிறார் இயக்குநர் ராகவ் மிர்தாத்.
இளசுகள் மட்டுமின்றி எல்லா தரப்பு ரசிகர்களுக்கும் இந்த ‘பன் பட்டர் ஜாம்’ இனிக்கும்.