‘உசுரே’ விமர்சனம்!
எதிர்வீட்டில் அழகான பொண்ணு புதுசா குடிவந்தா வாலிப பசங்க யாரா இருந்தாலும் வழுக்கி விழத்தான செய்வாங்க?. அப்படித்தான் மூக்கும் முழியுமா இருக்கும் ஜனனி மீது டீஜேவுக்கு காதல் வருகிறது. ஆனா ஜனனியோ கண்டும் காணாமல் இருக்கிறார். “எறும்பூற கல்லும் தேயும்” எனும்போது காதல் கனியாதா என்ன? ஒருக்கட்டத்தில் டீஜே மீது ஜனனியும் காதலாகிறார். அடுத்து டும் டும் டும்.. என்றால் கதை எப்படி நகரும்? இவர்களின் காதலுக்கு வில்லியாக வந்து நிற்கிறார் ஜனனியின் அம்மா மந்த்ரா. டீஜே – ஜனனி காதல் கைகூடுகிறதா காலாவதி ஆகிறதா என்பதற்கு அடுத்தடுத்த காட்சிகள் விடை சொல்கிறது.
ஹீரோ டீஜே யாருன்னா ’அசுரன்’ படத்தில் தனுஷின் மூத்த மகனாக நடித்தவர். சும்மா சொல்லக்கூடாது நல்லா நடிச்சிருக்கார். காதல் காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். உரையாடல்கள் குறைவு என்றாலும் உள்ளம் உருக்கும் நடிப்பு. நாயகியாக பிக் பாஸ் பிரபலம் ஜனனி. இளமை, அழகு என ஈர்ப்பவரின் தோற்றத்தில் உள்ளம் கொள்ளை போகுது.
காதலுக்கு முட்டுக்கடைப்போடும் வில்லியாக 90களில் கிறங்கடித்த மந்த்ரா. சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் இப்போது கொஞ்சம் ரவுண்டாகி இருக்கிறார். இருந்தாலும் நடிப்பில் ஏமாற்றவில்லை. அம்மா கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்.
அழுத்தமான அப்பா கதாபாத்திரத்தில் கிரேண் மனோகர் சிறப்பாக நடித்திருக்கிறார். தனது வழக்கமான உடல் மொழியை தவிர்த்துவிட்டு அளவாக நடித்து தனக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தியிருக்கிறார். டீஜேவின் அம்மாவாக செந்திகுமாரி, நண்பர்களாக வரும் தங்கதுரை, ஆதித்யா கதிர், பாவல் நவகீதன், மெல்வின் ஜெயப்பிரகாஷ் என அனைவரும் சிறப்பு.
இசையமைப்பாளர் கிரண் ஜோஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் காதல் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து, காதல் ஜோடியை பார்வையாளர்கள் மனதில் பதிய வைத்துவிடுகிறது. ஒளிப்பதிவாளர் மார்க்கி சாய்யின் ஒளிப்பதிவும் ஆஹா அழகு.
காதல் ஜோடியை சுற்றி பயணிக்கும் கதையாக இருந்தாலும், அதை வழக்கமாக சொல்லாமல், அவ்வபோது பார்வையாளர்களிடம் எதிர்பார்ப்பு ஏற்படும் வகையில் சொல்லி, தனது படத்தொகுப்பு மூலம் படத்தை சுவாரஸ்யமாக நகர்த்திச் சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் மணிமாறன்.
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எழுதி இயக்கியிருக்கும் நவீன் டி.கோபால், காதல் கதையாக இருந்தாலும், அதை குடும்ப பின்னணி திரைக்கதையோடு, நாகரீகமாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லியிருக்கிறார்.
‘உசுரே’ பார்க்கலாம்!