திரை விமர்சனம்

விக்ரமுக்கு சீயான்; துருவுக்கு கிட்டான்! ‘பைசன்’ விமர்சனம்!

படம் பார்க்கும் பார்வையாளனை திரைக்குள் இழுத்துவைத்து கதை நிகழும் களத்தில் நிறுத்தும் திரைமொழியே ஆகச்சிறந்த சினிமாவாக இருக்கமுடியும். அந்தவழியில் இதயத்தை தொட்டுப்பார்க்கும் ஒரு படைப்பு ‘பைசன்’.

அர்ஜூனா விருதுபெற்ற இந்திய கபடி வீரரின் உண்மை கதையே ‘பைசன்’ திரைக்கதையின் அடிநாதம். க்ளைமாக்ஸிலிருந்தே தொடங்குகிறது கதை. இந்தியா- பாகிஸ்தான் மோதும் கபடி இறுதி போட்டி. இந்த போட்டியில் கிட்டான் களமிறங்குவதற்காக போராடுகிறார் அணியின் கேப்டன். ஆனால் பயிற்சியாளர் இதற்கு தடை போடுகிறார். இதை அறியும் கிட்டான்.. தான் வந்த வழி, கடந்து வந்த வலியின் நினைவுகளில் மூழ்க.. கிளை பரப்பும் காட்சிகள் நம் கண்களையும் இதயத்தையும் துளைத்தெடுக்கிறது.

கதை:

திருச்செந்தூரின் வனத்தி கிராமத்தை சேர்ந்த கிட்டானுக்கு (துருவ் விக்ரம்) கபடி என்பது உயிர். இவனது திறமையின் அடையாளம் கண்டு களமாட வைக்கிறார் பி.டி. வாத்தியார் மதன். ஆனால் கிட்டானின் அப்பாவுக்கோ (பசுபதி) விளையாட்டில் இருக்கும் சாதியும் அரசியலும் தனது மகனை காவு வாங்கிவிடுமோ என்ற அச்சம். அதற்கான சம்பவங்களும் நிகழ, இனி கபடியே ஆடக்கூடாது என மகனிடம் சத்தியம் வாங்குகிறார். அப்பாவிடம் சத்தியம் செய்துகொடுத்த கிட்டான் பிறகெப்படி இந்திய அணிக்கு வந்தான்? என்ற கேள்வியின் பின்னணியில் இருக்கும் மிச்ச கதையை காண ‘பைசன்’ பாருங்கள்!

மறுபடியும் மாரிசெல்வராஜ்.. நடந்த, நடந்துகொண்டிருக்கின்ற ஏற்ற தாழ்வு அரசியலை, விளையாட்டுக்குள் விளையாடும் அரசியலை, ஒடுக்கப்படுவோரின் வாழ்வை, வலியை..எல்லாம் கடந்து எல்லை கடந்து வெற்றி கோட்டை தொடும் ஒருவனின் வாழ்வை ரத்தமும் சதையுமாக கொடுத்திருக்கிறார்.

துருவ் விக்ரம்:

படம் நெடுக ஓடிக்கொண்டே இருக்கிறார் துருவ் (கிட்டான்). இந்த ஓட்டம், உழைப்பு எல்லாமே வெற்றி சிம்மாசனத்தில் அமரவைத்து அழகு பார்ப்பது சத்தியம். பன்னிரெண்டாம் வகுப்பு மாணவனின் தோற்றம், பைசனாக கபடி களத்தில் காட்டும் ஆட்டம், இழிவு செய்பவரிடத்தில் நெஞ்சு புடைக்கும் ஆவேசம், உள்ளுக்குள் இருக்கும் காதலை பூட்டிவைத்து நொந்துகொள்ளும் உருக்கம் என பன்முக பாய்ச்சலை காட்டி இருக்கிறார்.

சொல்லப்போனால் 3வது படத்தில் அப்பா விக்ரமுக்கு கிடைக்காத வாய்ப்பு, அவருக்கு கிட்டாத ஒரு கதாபாத்திரம், அவர் உழைக்காத உழைப்பு என 3வது படத்திலேயே துருவுக்கு பல கதவுகள் திறந்திருக்கிறது.

கபடியை விடச்சொல்லி பசுபதி சத்தியம் வாங்கிக்கொண்ட பிறகு துருவிடம் அவரது அக்கா ரஜிஷா விஜயன், ”உன்னால எப்படிடா முடியும்” என்பதுபோன்று ஒரு பார்வை பார்க்குமிடத்தில் “அம்மா இல்லாம நாம செத்தா போயிட்டோம்?.. அம்மா இல்லாம வாழல..” என்று கபடியை அம்மாவுக்கு நிகராக வைத்து உருகுமிடத்தில் கலங்கும் கண்களுக்கு கரையேது?..

அப்பாவை யாராவது தொட்டாலே அந்த காளமாடனே உள்ளுக்குள் இறங்கி கட்டம் கட்டும் ருத்ரம்..அசாத்திய கலைஞனுக்கான அடையாளம். விக்ரமுக்கு சீயான் என்றால் துருவுக்கு கிட்டான் பெயர் நிலைத்து நிற்கும். வாழ்த்துகள் துருவ்!

பசுபதி:

அனுபவ கலைஞன் என்பதை இன்னொருமுறை மெய்ப்பித்திருக்கிறார் பசுபதி. தனக்குள் இருக்கும் கபடி தாகத்தை மறைத்துக்கொண்டு மகனின் உயிர் காப்பதற்காக வறட்டு பிடிவாதம் காட்டுவது, ஆடு சிறுநீர் கழித்த சிறு சம்பவம் பெரும் பகையை கொளுத்திப்போட்டதை நினைத்து பதைப்பது, மகனுக்காக காவல் அதிகாரியின் காலில் விழுந்து கெஞ்சுவது, மகனுக்கான அங்கீகாரம் கனவாகும் நேரத்தில் சாமி கட்டி ஆடுவது என ஒவ்வொரு காட்சியிலும் உணர்ச்சி குவியல்!

அமீர்:

தன் மக்களுக்கான குரலாக நின்று நெஞ்சு நிமிர்த்தும் பாண்டியராஜனாக அமீர் அட்டகாசம். உயிரை கொடுத்து நடித்திருக்கிறார் என்றாலும் உறுத்தாத துருத்தாத இயல்பான நடிப்பால் மனசில் ஒட்டிக்கொள்கிறார்.

லால்:

அமீரின் பரம எதிரியாக லால் அருமையான தேர்வு. எல்லாவற்றிலும் ஏற்ற தாழ்வுகளை பார்ப்பவர் கபடியில் மட்டும் திறமைக்கே முதல் மரியாதை தரும் வித்தியாச கதாபாத்திரத்தில் சிறப்பாக பொருந்தியிருக்கிறார்.

மதன்:

துருவுக்குள் இருக்கும் திறமையை அடையாளம் கண்டு அவரின் வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்டுத்தரும் உடற்கல்வி ஆசிரியராக மதன் கேரக்டர் டச்சிங். புரோட்டா கடையில் துருவை ஏளனமாக பேசுபவரிடம்  “ஏன் நீ சோத்ததான திங்குற” என்று கொதிக்கும் காட்சியில் அப்ளாஸ்!

அனுபமா:

வழக்கமான சினிமா ஹீரோயின்கள் பார்முலாவை உடைத்தெறியும் ஒரு கதாபாத்திரமாக அனுபமா அழகு தேர்வு. பார்பி பொம்மை போன்றவர் வழித்து சீவிய கூந்தல், எண்ணெய் வழியும் முகமாக மாறிய அனுபமாவின் நடிப்பில் அசல் கிராமத்து வாசனை. துருவ் மீதான காதலை பிடிவாதமாக பிடித்துக்கொண்டு காட்டும் கோபம் ரசனை!

ரஜிஷா விஜயன்:

துருவின் அக்காவாக, தம்பியின் வளர்ச்சியில் அக்கறை கொள்பவராக நடிப்பில் இயல்பு மீட்டரை தாண்டாத லாவகத்தில் ஈர்க்கிறார் ரஜிஷா.

தொழில் நுட்பம்:

காடு கழனி உள்ளிட்ட கிராமத்து அழகு, அதன் பின்னணியில் இருக்கும் சாதி  வன்மத்தின் நெடி,  கபடி வீரர்கள் ரைடு போகும்போதெல்லாம் படம் பார்ப்பவர்களையும் கூடவே அழைத்துச்செல்லும் நேர்த்தி, வன்முறை ஆட்டத்தை அருகிலிருந்து பார்த்து நெஞ்சை பதைப்பது போன்ற உணர்வுகளை கடத்துவது என எழில் அரசுன்.கே. பதிவு செய்திருக்கும் ஒளிப்பதிவு நிஜத்துக்கு நெருக்கமாய் நிற்கிறது.

நிவாஸ் கே. பிரசன்னா இசையில் ‘தீ கொளுத்தி’, ‘சீனிக்கல்லு’ பாடல்கள் மனசை பிசைகிறது. பின்னணி இசையிலும் நேர்த்தி! ஃபிளாஷ் பேக் கட்டுகளை படம் நெடுக கையாண்டிருக்கும் எடிட்டர் சக்தி திருவின் கைவண்ணம் கட்சிதம்!

முந்தையை படங்களை காட்டிலும் மேக்கிங்கில் ஒருபடி முன்னேறி இருக்கிறார் இயக்குநர் மாரிசெல்வராஜ். கதை சொல்லும் போக்கில் ஆகச்சிறந்த திரைமொழி. பாராட்டும் வாழ்த்தும் மாரி! இன்னொரு தேசிய விருது நிச்சயம்!

சிறு வயது காதல், இரண்டாம் பாதி கொஞ்சம் நீட்டி முழக்கிட்டாரோ என்பதுபோன்று சிறுசிறு குறைகள் தென்பட்டாலும் படம் பார்ப்பவர்களின் இதயத்தை ஆழமாகவே குத்தி கிழித்து ‘பைசன்’ பேசும் அரசியலும் உணர்த்தும் உண்மைகளும் அவசியம்!

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

CLOSE
CLOSE