‘சிறை’ படத்தில் நடித்த அனுபவம்! விக்ரம் பிரபு பேட்டி!
அன்னை இல்லத்தின் பிள்ளை என்ற அடையாளம் இருந்தாலும் வெள்ளித்திரையில் தனக்கென்ற தனி அடையாளம், அங்கீகாரத்திற்காக ஓடிக்கொண்டும் உழைத்துக்கொண்டும் இருக்கிறார் விக்ரம் பிரபு.
13 வருட சினிமா பயணத்தில் விக்ரம் பிரபுவின் 25வது படமான ‘சிறை’, வரும் 25ஆம் தேதி வெளியாவது சாலப் பொருத்தம். படம் சொல்லும் செய்தி, அதில் நடித்த அனுபவம் பற்றி பேச விக்ரம் பிரபுவை சந்தித்தப் பொழுதில்..
“நேத்துதான் ரிலீஸ் ஆன மாதிரி இருக்கு ‘கும்கி’. அதற்குள் சினிமாவில் 13 வருடம் கடந்துவிட்டேன். ஒரே மாதிரியான கதை, கதாபாத்திரத்தில் எனக்கு விருப்பமில்லை. டிவியில ஒரே சேனல பார்த்தா எப்படி போரடிக்குமோ அப்படிதான் ஒரே மாதிரியான கேரக்டரில் நடிப்பதும் போரடிக்கும். அதனால்தான் கலவையான கதைகளில் நடிக்கிறேன்” என எளிமையாகவும் வலிமையாகவும் பேசுகிறார் சிவாஜி பேரன்.

ஆனால் ‘டாணாக்காரனை’ தொடர்ந்து ‘சிறை’யும் போலீஸ் கதைதானே?
“உண்மைதான். இயக்குநர் தமிழ் எங்கிட்ட இந்த கதையோட ஒன்லைன் சொன்னப்பவே எனக்கும் அந்த கேள்வி இருந்தது. ஆனா கதையை முழுசா கேட்ட பிறகு டாணாக்காரனுக்கும் சிறைக்கும் நிறையவே வித்தியாசம் இருந்துச்சு. டாணாக்காரன் போலீஸ் டிரைனிங்கில் இருக்கும் ஒரு கேரக்டர். காவல் துறையில் அனுபவம் உள்ள ஒரு போலீஸ்காரன் பற்றிய கதை ‘சிறை’. திரைக்கதை அவ்வளவு ஃபிரஷ்ஷாவும் டயலாக் அவ்வளவு அர்த்தமுள்ளதாகவும் இருக்கும்.
வெற்றிமாறனின் இணை இயக்குநரும் இயக்குநர் தமிழின் சீனியருமான சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். போன வருஷம் ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு சின்ன விபத்துனால என் முதுகில் காயம் ஆகிடுச்சு. அதிலிருந்து மீண்டு வந்த நேரத்துல ‘சிறை’ படத்தின் கதையோடு வந்தார் ‘டாணாக்காரன்’ தமிழ். அவர் என்கிட்ட, “உங்களை மனசுல வச்சு இந்தக் கதையை எழுதலை சார். நான் போலீஸா இருந்தபோது நடந்த ஒரு விஷயத்தை மையப்படுத்தி எழுதியிருக்கேன். கதையை எழுதி முடிச்சதும் கதிரவன் கதாபாத்திரத்திற்கு நீங்கதான் என் மைண்ட்ல வந்தீங்க. அதான் உங்ககிட்ட வந்துட்டேன்”னு சொன்னார். அதன்பிறகு சுரேஷ், ‘சிறை’யின் முழுக்கதையையும் வந்து சொன்னார். ரொம்பவே பிடிச்சிருந்தது. சில முக்கியமான விஷயங்களைப் படம் பேசியிருக்குது. பக்கா கமர்ஷியலா இருக்கும்”
படத்தில இன்னொரு ஹீரோ இருக்காரே?

“ஆமா. ‘லியோ’ தயாரிப்பாளர் லலித்குமார் சாரின் மகன் அக்ஷய் குமார் என்னோடு முக்கியமான ஒரு கதாபாத்திரத்துல நடிச்சிருக்கார். இந்தக் கதைக்காக அவர் ரொம்பவே மெனக்கிட்டிருக்கார். சினிமாவை நேசிக்கறவரா இருக்கார். அவரது ஜோடியா அனிஷ்மா நடிச்சிருக்காங்க. என்னோட ஜோடியாக அனந்தா நடிச்சிருக்காங்க. பெண் போலீஸாக வர்றாங்க.”
நீங்க நடிக்கிற சில படங்கள் ரிலீஸாவதில் தாமதம் ஆகிறதே?
“உண்மைதான் ‘லவ் மேரேஜ்’ படத்துக்கு அதுதான் நடந்தது. ஆனால் என்னால எப்பவுமே தாமதம் ஆனதில்ல. கொடுத்த தேதியில் நடிச்சி கொடுக்கிறேன். ஷூட்டிங் நேரத்திற்கு கரெக்டா போயிடுவேன். அதையும் மீறி ஏற்படும் தாமத்திற்கு தயாரிப்பாளருக்கு உள்ள பிரச்சனையா இருக்கலாம். அதுக்கு நான் எதுவும் செய்யமுடியாது. சினிமால இப்போ வியாபாரம், ரிலீஸ் தேதி ரொம்ப முக்கியமா இருக்கு.”

‘கும்கி 2’ சரியா போகாதது பற்றி என்ன நினைக்கிறீங்க? பிரபுசாலமன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கும் திட்டமிருக்கா?
‘கும்கி 2’ பற்றி நான் பேசுறது சரியா இருக்காது. அந்தப்படத்தில் நடிப்பது பற்றி எங்கிட்ட எதுவும் பேசல. பிரபுசாலமன் சார் டைரக்ஷனில் மீண்டும் நடிப்பதும் என் கையில் இல்ல”
அஜித்தை வைத்து உங்கள் மச்சான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நீங்கள் நடிக்கப்போவதாக ஒரு பேச்சு இருக்கே? அந்தப் படத்தோட கதை தெரியுமா?
“அஜித் சார் படத்தில் நடிக்கப்போவதாக நீங்க சொல்லிதான் கேள்விப்படுறேன். ஆதிக்கிடம் நான் கதை கேட்கமாட்டேன். நானே கேட்டாலும் சொல்லாதீங்கன்னு சொல்லிட்டேன். இப்ப வரைக்கும் அஜித் சார் படத்தில் நான் இருப்பேனான்னு தெரியாது” என விடை கொடுக்கிறார்.

